Bihar Reservation: ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்.. பீகாரில் 75% இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்..!
பீகாரில் 75% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பீகாரில் புதிய 75% இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். புதிய ஒதுக்கீட்டின்படி அரசுப்பணி, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 65% இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு மசோதா:
முன்னதாக, பீகாரில் அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் ஜாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்தார். இந்த மசோதாக்கள் பீகார் சட்டசபையில் நவம்பர் 9ம் தேதியும், சட்ட மேலவையில் நவம்பர் 10ம் தேதியும் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவற்றை, சட்டசபை செயலகம், ஆளுநருக்கு கடந்த நவம்பர் 12ம் தேதி அனுப்பியது.
இதுபோல், ஒரே நாளில் மொத்தம் 6 மசோதாக்கள் ஆளுநரிடம் சென்றன. இவர்களில் நான்கு மசோதாக்கள் மட்டும் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரும்பியது. மாநில அரசின் அரசிதழ் அறிவிப்பின்படி, இடஒதுக்கீடு மசோதாக்களில் ஆளுநர் நவம்பர் 18ஆம் தேதி கையெழுத்திட்டார். அதன் நகல் செவ்வாய்க்கிழமை (நேற்று) மாநில அரசுக்கு கிடைத்தது. தற்போது அனைத்து வகுப்பினரின் நிலையை கருத்தில்கொண்டு, இடஒதுக்கீடு வரம்பு 75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதா இரு அவைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.2 லட்சம்:
தொடர்ந்து, அனைத்து துறைகளும் இடஒதுக்கீடு சட்ட விதிகளை முழுமையாக அமல்படுத்தி அதன் பலன்களை மக்கள் விரைவாக பெற வேண்டும் என்றும், ஜாதி அடிப்படையிலான கணக்கீட்டில் மக்களின் பொருளாதார நிலையும் கணக்கிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
சமூகத்தின் ஒவ்வொரு குடிமகன் மற்றும் குடும்பத்தின் பொருளாதார நிலை மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, மாநிலத்தில் 94 லட்சம் ஏழைக் குடும்பங்கள் மாத வருமானம் ஆறாயிரம் ரூபாய் வரை உள்ளன. அத்தகைய குடும்பங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் நிதிஷ்குமார் முடிவு செய்தார். இதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டத்திற்காக ரூ.2.5 லட்சம் கோடி செலவிடப்படும். அதேபோல், நிலையான வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.1க்கு பதிலாக ரூ.2 லட்சம் வழங்க மாநில அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 2 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலமற்ற குடும்பங்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்க ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.
இடஒதுக்கீடு:
புதிய முறையில் 75 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. அதாவது ஏற்கனவே வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் 15 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதில், 13 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 2 சதவீதமும், 10 சதவீத இடஒதுக்கீடும், இதர பிரிவினருக்கு 50 சதவீதமும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாடு உள்ளது. ஜாதி அடிப்படையிலான கணக்கீட்டின்படி, அவர்களின் மக்கள் தொகை சுமார் 22 சதவீதம், எனவே 22 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.
அரசு சேவைகள் மற்றும் சேர்க்கைகளில் இட ஒதுக்கீடு:
- பட்டியல் சாதியினர் - 20 சதவீதம்
- பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் - 02 சதவீதம்
- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 25 சதவீதம்
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 18 சதவீதம்
- ஓபன் மெரிட் பிரிவு - 35 சதவீதம் (இதில் 10 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கானது)