குற்றவாளிக்கு முன்ஜாமீனா? உயர்நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலைக்கு முயற்சித்த புகார்தாரர்கள்.. உச்சக்கட்ட பரபரப்பு..!
நீதிமன்ற வளாகத்திலேயே இன்று புகார்தாரர்கள் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் உயர் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு ஒன்றில் முன்ஜாமீன் வழங்க கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்த மனுக்களை விசாரிக்க நீதிபதி ஒப்பு கொண்டதால், நீதிமன்ற வளாகத்திலேயே இன்று புகார்தாரர்கள் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு:
தற்கொலைக்கு முயற்சி செய்ததையடுத்து, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை விரிவாக எடுத்துரைத்த காவல்துறை ஆய்வாளர் ஜிக்னேஷ் அக்ராவத், "நீதிபதி நிர்சார் தேசாய் அமர்ந்திருந்த நீதிமன்ற வளாகத்தில் விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது, புகார்தாரர்களான ஷைலேஷ் பஞ்சால் (52), அவரது மனைவி ஜெய்ஸ்ரீபென் (50), ஹர்திக் படேல் (24), மனோஜ் வைஷ்ணவ் (41) ஆகியோர் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃபீனைலை அருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.
தற்கொலைக்கு முயற்சித்த புகார்தாரர்கள்:
கலர் மெர்க்கன்டைல் கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் உள்பட மூன்று பேர் கடன் தொகையை ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. முன்ஜாமீன் கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றம் ஒப்பு கொண்டதால், விரக்தி அடைந்த புகார்தாரர்கள் தற்கொலைக்கு முயற்சித்தனர்.
முன்னதாக, குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இச்சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி தேசாய் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். பணியில் இருந்த காவலர்கள், பாஞ்சாலையும் மற்றவர்களையும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்" என்றார்.
கடன் ஆலோசகர் சிந்தன் ஷா, பொது மேலாளர் கின்னார்பாய் மற்றும் மேலாளர் அதுல் ஷா ஆகியோர் மோசடியில் ஈடுபட்டதாகவும் ஏமாற்றியதாகவும் அகமதாபாத்தில் உள்ள ஆனந்த்நகர் காவல் நிலையத்தில் பஞ்சால், அவரது மனைவி மற்றும் மற்ற இருவரும் புகார் அளித்தனர்.
கடன் வழங்க கோரி, இந்த நான்கு பேரும் வங்கியை நாடியுள்ளனர். ஆனால், வங்கி அதிகாரிகளான சிந்தன் ஷா, கின்னார்பாய், அதுல் ஷா ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்தில் தொடரும் அசம்பாவிதங்கள்:
சமீபத்தில், டெல்லியில் உள்ள சாகேத் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளம்பெண் ஒருவர் காயமடைந்தார். நீதிமன்ற வளாகத்தில் தனது வழக்கறிஞருடன் அந்தப் பெண் நின்றிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
டெல்லியில் இதற்கு முன்பும் நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் இது மாதிரியான துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். நம்மூரில் எப்படி நீதிமன்ற வளாகங்களில் சில சமயங்களில் குற்றச்சம்பவங்களில் நடப்பதுண்டோ, அதுபோல் வடக்கே நீதிமன்ற வளாக துப்பாக்கிச் சூடுகள் நடப்பதுண்டு. அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் அத்திக் அகமது என்ற ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக்கூட கூறலாம்.