EC Review Meeting: 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் ஆய்வு கூட்டம்!
இதில் உரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, வெளிப்படைத்தன்மை மற்றும் சார்பின்மை ஆகியவை தேர்தல் நடத்துவதற்கு முக்கிய அடையாளங்கள் என்றார்.
அடுத்து நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்கள் தொடர்பான திட்டமிடலுக்காக இந்திய தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகமான நிர்வச்சன் சதனில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியது.
இதில் உரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, வெளிப்படைத்தன்மை மற்றும் சார்பின்மை ஆகியவை தேர்தல் நடத்துவதற்கு முக்கிய அடையாளங்கள் என்றார். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமான பிரச்சினைகள் இருந்தாலும் மக்களை முன்னிலைப்படுத்தி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தனது உரையின் போது வாக்காளர் பட்டியல் சரியாக இருப்பதன் முக்கியத்துவதை வலியுறுத்திய அவர், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் நிலுவையில் உள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
The Election Commission of India holds a review meeting with Chief Electoral Officers of Goa, Manipur, Punjab, Uttarakhand and Uttar Pradesh today. The meeting was focused on Assured Minimum Facilities at polling stations amongst others pic.twitter.com/B5LDlhryEK
— ANI (@ANI) July 28, 2021
மேலும் அவர், கொரோனா தொற்று சூழலில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைகளை மாற்றியமைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அத்தியாவசிய வசதிகள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் வாக்காளர்களின் வயது விபரம், நிதி கையிருப்பு, மனித வளம், திட்டமிடல், வாக்குச்சாவடி ஏற்பாடுகள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட தங்களது மாநிலத்தில் தேர்தல் நடத்துவது பற்றிய பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக படக்காட்சிகளுடன் விளக்கம் அளித்தனர். இந்த கூட்டத்தில், மூத்த துணை தேர்தல் ஆணையர், துணை தேர்தல் ஆணையர்கள் மற்றும் தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
Pegasus : நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள், சூடுபிடிக்கும் பெகசஸ் விவகாரம்..!