Delhi: பாதுகாப்பு வளையத்திற்குள் டெல்லி: மார்ச் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு - பின்னணி இதுதான்!
விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் நோக்கில் டெல்லியில் வரும் மார்ச் 12ம் தேதி வரை கும்பலாக சேருவதற்கு தடை விதிக்கும் விதமாக 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் உள்ள விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி சலோ என்ற பெயரில் மாபெரும் பேரணி பிப்ரவரி 13ம் தேதி நடத்தப்படும் என்று உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாய அமைப்புகள் ஏற்கனவே அறிவித்திருந்தன.
144 தடை உத்தரவு:
இந்த நிலையில், விவசாயிகளின் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனாலும், தங்களது போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று விவசாய அமைப்புகள் உறுதியாக உள்ளனர். இதனால், டெல்லி போலீசார் டெல்லியில் வரும் மார்ச் 12ம் தேதி வரை கும்பலாக சேர்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக 144 தடை விதித்துள்ளனர்.
விவசாயிகள் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களுடன் தலைநகரின் உள்ளே படையெடுத்து வருவதால் மாநில எல்லையில் அவர்களை தடுத்து நிறுத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்லி எல்லையான சிங்கூ, காசிபூர், திக்ரி உள்பட எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளே வரும் வாகனங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் போராட்டம்:
போராட்டகாரர்கள் வருவார்கள் என்று கருதப்படும் எல்லைகளில் இரும்பு தடுப்புகள், கான்கீரிட் ப்ளாக்குகள் அமைத்து தடுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லி முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது, போராட்டத்தை முன்னெடுத்துள்ள விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை, அதிகபட்ச விலை உள்பட பல கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்திற்காக உள்ளே வரக்கூடாது என்று காவல்துறை விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகள் காரணமாக போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அறிவித்தபடி போராட்டத்தை முன்னெடுப்பதற்காக விவசாயிகள் ஹரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து குவிந்து வருகின்றனர்.
போக்குவரத்து சிரமம்:
குறிப்பாக, இன்று காலை முதலே டெல்லிக்குள் செல்லும் வாகனங்களை மிகவும் உன்னிப்பாக கவனித்தே போலீசார் அனுமதித்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், டெல்லியில் வரும் 12ம் தேதி வரை பொதுமக்கள் கும்பலாக சேர்வதற்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் இந்த விவகாரத்தில் விவசாயிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ஆர்வம் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: செயற்கை கோள் விண்ணில் ஏவுவதை நேரில் பார்க்க வேண்டுமா? முன்பதிவு செய்வது எப்படி?
மேலும் படிக்க: J.P. Nadda: பிரதமர் மோடிக்கு நெருக்கமான மாநிலம் தமிழ்நாடு - சென்னையில் ஜே.பி. நட்டா பேச்சு