Brij Bhushan: வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பூஷன் செய்த காரியம்.. மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் போலீஸ் பரபரப்பு தகவல்!
பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக பல்வேறு சாட்சியங்கள் பகீர் வாக்குமூலம் அளித்தன.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி காவல்துறை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
பிரிஜ் பூஷன் சிங் மீது டெல்லி காவல்துறை பரபர குற்றச்சாட்டு:
இதற்கிடையே, பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக பல்வேறு சாட்சியங்கள் பகீர் வாக்குமூலம் அளித்தன. மேலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பதிய போதுமான ஆதாரங்கள் இருப்பதாக டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த நிலையில், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பிரிஜ் பூஷன் சிங், மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்ததாக நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, தஜிகிஸ்தானில் நடந்த குறிப்பிட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டி டெல்லி காவல்துறை வாதிட்டது.
மல்யுத்த வீராங்கனை அளித்த புகாரை மேற்கோள் காட்டிய டெல்லி காவல்துறை அதிகாரிகள், "தான் என்ன செய்கிறேன் என்பதை தெரிந்தேதான் பிரிஜ் பூஷன் சிங் செய்துள்ளார். தஜிகிஸ்தானில் ஒரு நிகழ்ச்சியின்போது, குற்றம் சாட்டப்பட்டவர் (பிரிஜ் பூஷன் சிங்) புகார்தாரரை (மல்யுத்த வீராங்கனையை) அறைக்குள் அழைத்து வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்தார்.
"தகாத முறையில் வயிற்றில் தொட்ட பிரிஜ் பூஷன்"
அதற்கு புகார்தாரர் எதிர்ப்பு தெரிவித்தபோது, பிரிஜ் பூஷன் சிங், ஒரு தந்தையைப் போல இதைச் செய்ததாகக் கூறினார். தான் என்ன செய்கிறேன் என்பதை தெரிந்துதான் அவர் செய்துள்ளார் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. பாதிக்கப்பட்ட பெண் எதிர்வினையாற்றியாரா இல்லையா என்பது ஒரு கேள்வி அல்ல. ஆனால், அவருக்கு (வீராங்கனைக்கு) அநீதி இழைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.
மற்றொரு மல்யுத்த வீராங்கனை அளித்த புகாரை மேற்கோள் காட்டிய டெல்லி காவல்துறை, "தஜிகிஸ்தானில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின்போது, பிரிஜ் பூஷன் சரண் சிங் அனுமதியின்றி தனது சட்டையை மேலே தூக்கியதாக மற்றொரு மல்யுத்த வீராங்கனை புகார் அளித்துள்ளார். தகாத முறையில் வயிற்றில் தொட்டதாக கூறியிருந்தார்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவால் அவர் விடுவிக்கப்படவில்லை" என தெரிவித்துள்ளது.
பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் போராட்டம் மேற்கொண்டதை தொடர்ந்து, இந்திய குத்துச்சண்டை ஜாம்பவான் எம்.சி.மேரி கோம் தலைமையிலான மேற்பார்வைக் குழுவை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது குறிப்பிடத்தகக்கது.