Birth Certificate Mandatory: அரசு வேலையில் சேர இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம்... இது முக்கியம்.. இதைப் படிங்க..
அரசு வேலை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் பெறவும், கல்வி நிறுவனங்களில் சேரவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகப்போகிறது.

அரசு வேலை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் பெறவும், கல்வி நிறுவனங்களில் சேரவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகப்போகிறது.
இந்த நடைமுறையை அதிகாரப்பூர்வமாக அமலுக்குக் கொண்டுவர, பிறப்பு-இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கலாகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் 7-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மத்திய அரசு சில முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்யவுள்ளது. குறிப்பாக பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம்-1969-ன் கீழ் ஏற்கனவே பிறப்பு மற்றும் இறப்பு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், மத்திய அரசு மற்றும் மாநில அரசுப் பணிகளில் பணி நியமனம், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் பெற இனி பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
பிறப்புச் சான்றிதழை கட்டாயமாக்கும் சட்டத்தை மேலும் வலுவாக்கி அதனை அரசின் ஆவணமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு திருத்தம் செய்வதன் மூலம் பிறப்புச் சான்றிதழ் மூலம் சேமிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு, அடுத்தடுத்த காலகட்டத்தில் சம்பந்தப்பட்டவருக்கு சான்றிதழ்களை ஆன்லைனில் உடனடியாக வழங்க முடியும்.
18 வயதாகும்போது சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். அதே நபர் இறந்துவிட்டால் அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து தானியங்கி முறையில் எளிதாக நீக்கிவிட முடியும். இதற்காக தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
முன்னதாக,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ம் தேதி தொடங்கி டிசம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 17 வேலை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும். அமர்வின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கபூர்வமான விவாதங்களை எதிர்நோக்குகிறோம் என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பல்வேறு விவகாரங்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க முற்படும். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காரசார விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
கூட்டத்தொடரின் முதல் நாளில் சமாஜவாதி கட்சியின் நிறுவனரும், மக்களவை எம்.பி.யுமான முலாயம் சிங் யாதவ் மற்றும் மூத்த அரசியல் தலைவர்களின் மறைவுக்கு உறுப்பினர்கள் இரங்கல் தெரிவிப்பார்கள்.
மாநிலங்களவைத் தலைவராக முதல் தொடர்
குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு மாநிலங்களவைத் தலைவராக அவர் வழிநடத்தப்போகும் முதல் கூட்டத் தொடர் இதுவாகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

