பதைபதைக்க வைக்கும் பயங்கரம்.. 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை.. மீட்கும் பணி தீவிரம்..
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஷெஹோர் எனும் கிராமத்தில் 2.5 வயது குழந்தை ஒன்று 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. அந்தக் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஷெஹோர் எனும் கிராமத்தில் 2.5 வயது குழந்தை ஒன்று 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. அந்தக் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.45 மணியளவில் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.
கிராமவாசிகள் உள்ளூர் பஞ்சாயத்து அலுலவகத்தை அணுக அது மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷெஹோர் பகுதியில் உள்ளது முங்கோலி என்ற கிராமம். அந்த கிராமத்தில் உள்ள ராகுல் குஷ்வாஹாவின் மகள் சிருஷ்டி. 2.5 வயதாகு சிருஷ்டி வயலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. உடனே பதறிப்போன தாய் ராணி, தந்தை ராகுல் உள்ளூர் பஞ்சாயத்தை அணுகினர்.
மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியின் பேரில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர். இப்போது அங்கே குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டுள்ளது. கூடுதல் மேஜிஸ்திரேட் பிரிஜேஷ் சக்சேனா மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாயங் அவஸ்தி ஆகியோர் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆழ்துளை கிணற்றுக்குள் கேமராவும் செலுத்தப்பட்டு குழந்தை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இதே பகுதியில் நானு லால் என்பவர் ஒரு ஆழ்துளை கிணறை தோண்ட முயற்சித்து அதனை அப்படியே விட்டுவிட்டார் அதனாலேயே தங்கள் மகள் இந்த பாதிப்பில் சிக்கியதாக குழந்தையின் தாய் ராணி வேதனை பொங்க தெரிவித்தார். இந்நிலயில் குழந்தையை பத்திரமாக மீட்டு விடுவோம் என்று மாவட்ட ஆட்சியர் மிஸ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மறக்கமுடியாத சுஜித்
கடந்த 2019 ஆம் ஆண்டு திருச்சியில் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தான். அக்டோபர் 25ஆம் தேதி விழுந்த சுஜித் சுமார் 82 மணிநேர மீட்புப்பணிகளுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டான். சிறுவனின் உடல் 29ம் தேதி அதிகாலை ஆழ்துளை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான்.
திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலைராணி. இவர்களுக்கு புனித் மற்றும் சுஜித் வில்சன் என இரண்டு மகன்கள் இருந்தனர்.
கட்டடத் தொழிலாளியான பிரிட்டோவின் வீட்டிற்கு அருகே அவருக்கு சொந்தமான விவசாய நிலமும் உள்ளது. அதில் பிரிட்டோவின் முந்தைய தலைமுறையினர் பல வருடங்களுக்கு முன்னர் ஆழ்துளைக் கிணறு தோண்டியுள்ளனர்.
தண்ணீர் வராததால், அதனை பயன்படுத்தாமல் மேலோட்டமாக மண் வைத்து மூடியுள்ளனர். அந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி சோளப்பயிர் விவசாயம் செய்து வந்தார் பிரிட்டோ.
ஆழ்துளைக் கிணறு கைவிடப்பட்டிருந்த நிலையில், சமமான நிலப்பரப்பைப் போல் அந்த பகுதி இருந்துள்ளது. சில நாட்களாக பெய்த மழையால் குழயில் மேல் பரப்பிலிருந்த மண் உள்வாங்கியுள்ளது. கடந்த 2019 ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி மாலை 5.30 மணியளவில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிரிட்டோவின் இளையமகன் சுஜித் எதிர்பாராத விதமாக அந்தக் குழிக்குள் விழுந்து சிக்கிக்கொண்டார். ஆனால் சுஜித் பிணமாகவே மீட்கப்பட்டார். அந்தச் சம்பவம் நாடு முழுவதும் ஆழ்துளை கிணற்றின் ஆபத்தின் மீது சர்வதேச கவனம் திரும்பியது.