’தடை, அதை உடை’ - வழித்தட ஆக்கிரமிப்பை தகர்தெறிந்த யானைக்கூட்டம்..!
தாய் யானை மாற்று வழியை தேர்வு செய்யாமல், தனது வழக்கமான வழித்தடத்தில் இருந்த கூடாரத்திற்க்குள் குட்டியுடன் நுழைந்தது. கூடாரத்தை தகர்த்தெறிந்து பின் பக்க வழியாக வெளியே வந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் யானையின் வழித்தடத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பை, யானைக் கூட்டமே தகர்தெறிந்து மீட்டெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மலை மாவட்டமாக உள்ள நீலகிரி மாவட்டம் உயிர்ச் சூழல் மண்டலமாக விளங்கி வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் வனவிலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகின்றன. குறிப்பாக யானை, புலி, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகளின் வாழிடமாக உள்ளது. வலசை செல்லும் யானைகளின் வழித்தடங்கள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ளன. இந்நிலையில் யானை வழித்தட ஆக்கிரமிப்புகள் காரணமாக யானைகள் வழி மாறி, குடியிருப்புப் பகுதிகளுக்குள் செல்கின்றன. இதன் காரணமாக நாளுக்கு நாள் யானை - மனித மோதல்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் மனித மற்றும் யானை உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. யானை வழித்தட ஆக்கிரமிப்பை மீட்டெடுக்கவும், முதுமலை சுற்றுவட்டார பகுதிகளில் யானை வழித்தடங்களில் உள்ள விடுதிகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் யானை வழித்தடத்தில் திடீரென ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை யானைக்கூட்டம் ஒன்று தகர்த்தெறிந்து மீட்டெடுத்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
குன்னூர் பகுதியில் குட்டியுடன் இரண்டு காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக உலா வருகின்றன. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையை யானைக் கூட்டம் கடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி தோட்டக் கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டேரி பண்ணைப் பகுதியைக் காட்டு யானைகள் அடிக்கடி கடப்பது வழக்கம். இப்பகுதிக்கு அந்த யானைக் கூட்டம் நேற்று வந்துள்ளது. இந்த யானைகள் வழக்கமாக பயன்படுத்தும் வழித்தடத்தில் தோட்டக் கலைத் துறை உரம் பதனிடும் மையத்தை புதிதாக, தற்காலிக கூடாரம் மூலம் அமைத்திருந்தது.
வழித்தடப் பாதை மறிக்கப்பட்டு கூடாரம் இருப்பதைக் கண்டு, யானைக் கூட்டம் சற்று நேரம் தயங்கி நின்றது. பின்னர் தாய் யானை மாற்று வழியை தேர்வு செய்யாமல், தனது வழக்கமான வழித்தடத்தில் இருந்த கூடாரத்திற்க்குள் குட்டியுடன் நுழைந்தது. கூடாரத்தை தகர்த்தெறிந்து பின் பக்க வழியாக வெளியே வந்தது. பின்னர் குட்டியுடன் அந்த யானை வனப்பகுதிக்கு சென்றது. யானை தனது வழித்தட ஆக்கிரமிப்பை தகர்த்தெறிந்து மீட்டெடுத்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காட்டு யானைகள் வழித் தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, யானைகள் எந்த இடையூறும் இன்றி சுதந்திரமாக கடந்து செல்ல தோட்டக்கலைத் துறை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் வழி மாறிச் செல்லும் யானைகளால் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சூழலியல் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.