8 வயது சிறுமியால் உயிர் பெற்ற 4 பேர்... சிறுமியின் உறுப்புகள் மீண்டும் உயிர்பித்த தருணம்....
கோவையில் மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டநிலையில் , 4 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

கோவை மாநகராட்சி 73-வது வார்டு கவுன்சிலரும், நகரமைப்பு குழு தலைவருமான சந்தோஷ் என்பவரின் மகள் 8 வயது மகள் வெண்பாவுக்கு கடந்த திங்கட்கிழமை திடீரென தலைவலி, வாந்தி ஏற்பட்டு உள்ளது.
இதை அடுத்து தந்தை சந்தோஷ், மகளை கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமிக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து கவுன்சிலர் சந்தோஷ் தனது மகள் வெண்பாவை, அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், சிறுமியின் மூளை செயல் இழந்து, மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்தனர். இதை அடுத்து கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் குடும்பத்தினர் தங்களது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். மாணவியிடம் இருந்து சிறுநீரகம், கல்லீரல், கண் உள்ளிட்ட 4 உறுப்புகள் எடுக்கப்பட்டு 4 பேருக்கு பொருத்தப்பட்டு உள்ளது. 8 வயதில் மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்பு தானத்தால் தற்போது 4 பேர் மறுவாழ்வு பெற்று உள்ளனர்.























