கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் ; போலீசார் தீவிர சோதனை
கடந்த வாரம் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிஎஸ்பிபி பள்ளிகளுக்கு மிரட்டல் வந்த நிலையில், தற்போது மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் தி பிஎஸ்பிபி என்ற தனியாருக்கு சொந்தமான பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ம் தேதி அன்று இந்தப் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக பள்ளி அலுவலக இமெயிலுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் மாங்காடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆவடி மாநகர காவல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் பள்ளி வளாகத்தை சோதனை செய்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் தி பிஎஸ்பிபி மில்லேனியன் என்ற அப்பள்ளியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், வடவள்ளி காவல் துறையினர் பள்ளிக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் பள்ளியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வகுப்பறையாக சென்று வெடிகுண்டு உள்ளதா என சோதனை செய்தனர்.
இதனிடையே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் பரவிய நிலையில், பதற்றமடைந்த குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பள்ளி முன்பாக திரண்டனர். மேலும் பதற்றத்துடன் குழந்தைகளை வீடுகளுக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றனர். மேலும் பள்ளி வாகனங்களில் வரும் குழந்தைகளும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் காஞ்சிபுரம் மற்றும் கோவையில் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு சோதனை நடைபெற்றதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் அந்த பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு அப்பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மீண்டும் ஒரு மின்னஞ்சல் வந்தது. இது குறித்து அப்பள்ளி நிர்வாகம் காவல் துறையினர் தகவல் அளித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். காவல் துறையினர் நடத்திய சோதனையில் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து இன்று தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் மாணவர்களை முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே அனுப்ப காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். அப்பள்ளியில் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிஎஸ்பிபி பள்ளிகளுக்கு மிரட்டல் வந்த நிலையில், தற்போது மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.