![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Parandur Airport: "உயிரை மாய்த்துக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை" - பரந்தூர் விமானநிலையத்துக்கு எதிர்ப்பு
Parandur Protest : " திடீரென கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது "
![Parandur Airport: Parandur airport issues Ekanapuram villagers protest against a Notice of land acquisition TNN Parandur Airport:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/29/5c15aa74cb2ac6165f731ce86736700f1724894006759739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஏகனாபுரம் கிராமத்தில் நில எடுப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி இருப்பதால் பரபரப்புள்ளது.
பரந்தூர் விமான நிலையம்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரப் 20 கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்கள் எந்தெந்த கிராமங்களில், எவ்வளவு எடுக்கப்படுகிறது என வரையறுத்து நில எடுப்பு அறிவிப்புகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அறிவிப்புகளை நாளிதழ்களில் வெளியிட்டு வருகிறது.
தொடர் போராட்டத்தில் கிராம மக்கள்
விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்கள் விவசாய நிலங்கள் குடியிருப்புகள் நீர்நிலைகள் கையகப்படுத்தப்பட உள்ளதால், வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாக கூறி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாள்தோறும் கிராம மைதானத்தில் ஒன்று கூடி, 764 வது நாளாக தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
வெளியான அதிர்ச்சி அறிவிப்பு
தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் தற்பொழுது ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை நாளிதழ்களில் இன்று வெளியிட்டு உள்ளது. ஏகனாபுரத்தில் உள்ள நிலங்களின் வகைகள் சர்வே எண்கள் கிராம மக்களின் பெயர்கள் உள்ளிட்டவை குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஏகனாபுரம் கிராமத்தில் 152.95 ஏக்கர் பரப்பளவிலான 6,19,250 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த உள்ளனர்.நில எடுப்பது குறித்து ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது
அம்பேத்கர் சிலை முன் போராட்டம்...
இந்த அறிவிப்பு ஏகனாபுரம் கிராம மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் நேற்று ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற, மாலை நேரம் போராட்டத்தை தீவிரமாக ஏகனாபுரம் கிராம மக்கள் நடத்தினர். எப்பொழுதும் கோயில் அருகே போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் , நேற்று அம்பேத்கர் சிலை சிலை முன்பு பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.
எதிர்க்கட்சித் தலைவர் எங்கே ?
இப்போராட்டத்தில் பேசிய போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறுகையில், பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் எங்களுக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர் . விவசாய காவலர் எனக் கூறிக் கொள்ளும் எதிர்க்கட்சி ஆதரவு தராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இருவரும் கூட்டு சேர்ந்து கொண்டு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறார்களா என கேள்வி எழுப்பினர்.
மாவட்டம் நிர்வாகம் பொறுப்பு
தொடர்ந்து எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் திருட்டுத்தனமாக அதிகாரிகள், கணக்கெடுப்பை நடத்தி பின் வாசல் வழியாக எங்கள் கிராம நிலத்தை கையகப்படுத்துவேன் என அறிவித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. காவல்துறை ஒருபுறம் எங்களுடன் இணக்கமாக செல்ல முயற்சி செய்தாலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு எதிராக இருக்கிறது . இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் இனி எந்தவித அறிவிப்பும் வரக்கூடாது. அப்படி வந்தால் நாங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் எல்லைக்கும் செல்ல தயார் . அப்படி ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால், அதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுதான் பொறுப்பு என ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் கிராம மக்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போராட்டத்தை போலீசார் கலைத்தனர். இதனால் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)