Sani Peyarchi 2025: இந்தாண்டு சனிப்பெயர்ச்சி இருக்கா? இல்லையா? - திருநள்ளாறு கோயில் நிர்வாகம் சொல்வது என்ன?
வருகின்ற மார்ச் 29 -ம் தேதி திருக்கணிதம் முறைப்படி நடைபெறும் சனிப்பெயர்ச்சி வழிபாடு திருநள்ளாறு கோயிலில் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 மார்ச் 29 -ம் தேதி திருக்கணிதம் முறைப்படி நடைபெறும் சனிப்பெயர்ச்சி வழிபாடு திருநள்ளாறு கோயிலில் நடைபெறாது, அடுத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கம் முறைப்படி நடைபெறும் சனிப்பெயர்ச்சியை வழிபாடு மட்டுமே இங்கே நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கிரகங்கள் இடப்பெயர்ச்சி
கிரகங்கள் இடம் பெயர்வது இயல்பான நிகழ்வுதான் என்றாலும் இந்து மதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர மொத்தம் 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால் அந்த முப்பது ஆண்டுகளையும் 12 ராசிகளுக்கும் சராசரியாக பிரித்தால் இரண்டரை ஆண்டுகள் வரும். அப்படி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருந்து அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மற்றொரு ராசிக்கு சனி இடம் பெயர்தலையே சனிப்பெயர்ச்சி என்கிறோம்.
உலகப்பிரசித்தி பெற்ற சனீஸ்வரபகவான் ஸ்தலம்
இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப்பிரசித்தி பெற்ற சனீஸ்வரபகவான் தலமான தர்பாரண்யேஸ்வர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சனிகிரகத்தின் அதிபதியான சனிபகவான் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் சனி பரிகாரம் ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது.
சனிப்பெயர்ச்சி தேதியில் குழப்பம்
இந்நிலையில் திருக்கணிதப்படி வரும் மார்ச் 29.3.2025 தேதி அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். ஆனால் பிரசித்தி பெற்ற சனிபகவான் பரிகார ஸ்தலமான திருநள்ளாறில் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி நிகழ்வு வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.
சனிப்பெயர்ச்சி தேதிகள் குறித்து விளக்கம்
காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஸ்வாமி தேவஸ்தானம், சனிப்பெயர்ச்சி தேதிகள் தொடர்பாக பக்தர்களிடையே நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிகாரப்பூர்வ பத்திரிகை குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் பக்தர்கள் ஜோதிடர்கள், அச்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனி பெயர்ச்சி தொடர்பாக பல்வேறு செய்திகள் மற்றும் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, 2025 மார்ச் 29 அன்று சனி பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளன. இது தொடர்பாக, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலம்"வாக்கிய பஞ்சாங்கம்" முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம்.
”கே.வி பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் ஜீரோ” ஆதாரத்தை வெளியிட்ட கனிமொழி
இந்த பாரம்பரிய கணிப்பு முறையின் படி, 2026 ஆம் ஆண்டிலேயே சனிப் பெயர்ச்சி தடைபெறும் என தெரிவிக்கின்றோம். ஆகையினால் 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும் திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனி பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு நடைபெறும் சரியான தேதி மற்றும் நேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொது மக்கள் திருநள்ளாறு கோயிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருநள்ளாறு சனிபகவான் கோயில் இந்தாண்டு சனிப்பெயர்ச்சி கிடையாது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

