Desalination Plant: தெற்காசியாவிலேயே பெரியது..! சென்னை, தாம்பரம் மக்களுக்கு மகிழ்ச்சி..! ஸ்கெட்ச் போட்டு வேலை செய்த முதல்வர்
perur seawater desalination: பேரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்.

மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் ( minjur seawater desalination plant )
வளர்ந்து வரும் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடல்நீரைக் குடிநீராக்கும் மீஞ்சூர் நிலையத்திலிருந்து, நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையத்திலிருந்து கிடைக்கக்கூடிய குடிநீர் மூலம், வடசென்னை பகுதிகளான மணலி, மாதவரம், எண்ணூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றார்கள்.
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ( nemmeli seawater desalination plant )
இதனைத் தொடர்ந்து, நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் தற்போது சீரான முறையில் இயங்கிவருகிறது. இந்நிலையத்தின் மூலம், தென்சென்னை பகுதிகளாகிய சோழிங்கநல்லூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, பள்ளிப்பட்டு, அடையாறு, பெசன்ட் நகர், நந்தனம், எம்.ஆர்.சி. நகர், இராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
மேலும், நெம்மேலியில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு கொண்டுவரப்பட உள்ளது. இதன்மூலம், உள்ளகரம்- புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசம்பேட்டை மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் உள்ள 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள்.
பேரூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ( perur seawater desalination plant )
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் வளர்ச்சியினைத் தொடர்ந்து சென்னைக்கு அருகாமையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாலும், பெருகிவரும் வளர்ச்சிக்கேற்ப எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு போதுமான அளவில் குடிநீர் வழங்கும் பொருட்டும், பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில், ரூ.4,276 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சிறப்பு அம்சங்கள் என்ன ?
இந்நிலையம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமையவுள்ளது. இந்நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2026க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்நிலையத்தில், கடல்நீரை குடிநீராக்க 1150 மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள் HDPE குழாய்கள் பதிக்கப்படும். மேலும், இந்நிலையத்தில் அமைக்கப்படவுள்ள நீர் கரைந்த காற்று அலகுகள் (Dissolved Air Floatation) மற்றும் இரட்டை ஈர்ப்பு மணல் வடிகட்டி அலகுகள் (Dual Media Filter) மற்ற வழக்கமான நிலையங்களை விட நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலகுகள் மூலம் கடலில் உள்ள கசடுகள் (மிதப்பவை, துகள்கள்) அகற்றிய பின்னர் கடல்நீரை குடிநீராக்கும் திறனை நிலையாகப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிலையத்திலிருந்து போரூர் வரை 59 கி.மீ நீளத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்படும். இந்தநிலையத்தின் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அருகாமையில் உள்ள 20 ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 22.67 இலட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

