கூடுவாஞ்சேரியில் தொடர் மின்வெட்டு.. மின்வாரியத்திற்கு எதிராக களத்தில் இறங்கிய திமுக சேர்மன் ... நடந்தது என்ன ?
மின்வெட்டு தொடர்பாக தற்காலிக தீர்வு வேண்டாம் நிரந்தர தீர்வுக்கு வழி சொல்லுங்கள் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.
கூடுவாஞ்சேரியில் மின்வெட்டு
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் அடிக்கடி மின்வெட்டு நிலவுவதாகவும், அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் அளிக்கவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
ஆட்சியரிடம் புகார் மனு
இந்நிலையில், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் மற்றும் நகர கவுன்சிலர்கள் அனைவரும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடுமையான அவதி அடைந்து வருவதாகவும், கூடுவாஞ்சேரி நகரப் பகுதியில் முழுவதும் சூழ்ந்து காணப்படுவதால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.
கேள்வி எழுப்பிய மாவட்ட ஆட்சியர்
அப்போது மின்வாரிய அதிகாரிகளை அழைத்த மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அப்போது மின்வாரிய அதிகாரி ஒருவரிடம், மின் தடை எதனால் ஏற்படுகிறது என கேட்டபோது தெரியாது என பதில் அளித்ததால் மின்தடைக்கான காரணம் குறித்து நீங்கள் தான் தொழில்நுட்ப ரீதியாக பதில் அளிக்க வேண்டும், மின்தடை ஏற்பட்டால் ஆள் பற்றாக்குறை காரணமாக விரைவில் சரிசெய்ய முடியவில்லையா? வயர்களை மாற்ற வேண்டுமா? என ஆராய்ந்து பார்த்து பதில் சொல்லுங்க என தெரிவித்தார்.
மேலும், உடனடியாக ஆள் பற்றாக்குறையை சரி செய்து இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் எனக்கு இது போன்று புகார்கள் வரக்கூடாது, சாலைமறியல் நடக்க கூடாது. மின்தடை ஏற்படுவது அனைவருக்கும் பிரச்சனைதான், பொதுமக்களுக்கும் பாதிப்பு, அதிகாரிகளுக்கும் பாதிப்பு எனவும் , 3-மாதத்திற்குள் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூடுவாஞ்சேரியில் நடப்பது என்ன ?
கூடுவாஞ்சேரியில் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவப்பொழுது மின்வெட்டுகள் ஏற்படுகின்றன. பழுது காரணமாக இந்த மின்வெட்டு ஏற்படுவதாக மின்சார துறை அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். அதேபோன்று இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை வீதியில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களின் இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழுத்தம் ஏற்பட துவங்கி உள்ளது. கவுன்சிலர்கள் மற்றும் நகர் மன்ற தலைவர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட மின் ஊழியர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் தொலைபேசி அழைப்பை எடுக்காமலும் இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாகவே இன்று திமுகவின் நகர்மன்ற தலைவர் நேரடியாக களத்தில், இறங்கி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார். குறிப்பாக அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பது தற்காலிக தீர்வு இல்லை எனவும், நிரந்தர தீர்வு எடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. திமுக அரசு ஆட்சியில் இருக்கும் போது திமுக சேர்மன் மின்வாரியத்திற்கு எதிராக போர் கொடி தூக்கி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.