மேலும் அறிய
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட பத்திரப்பதிவுத்துறை சார் பதிவாளர் மீது போலி பத்திரம் மூலமாக தனது நிலத்தை அபகரித்துள்ளதாக கூறி முன்னாள் ராணுவ வீரர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார்.

எய்ம்ஸ் மருத்துமனை கட்டடம்
Source : whats app
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு அதிகரிக்கும் விலை, பொதுமக்களின் இடங்களை போலி பட்டாக்கள் மூலமாக அதிகாரிகள் துணையுடன் அபகரிப்பு நடைபெறுவதாக தொடர் புகார்கள் வருகின்றன.
மதுரை எய்ம்ஸ் சுற்றுவட்டார பகுதிகளில் நிலங்களின் மதிப்பீடு
மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது முதற்கட்டமாக கட்டிட பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் சுற்றுவட்டார பகுதிகளில் நிலங்களின் மதிப்பீடு அதிகரித்துள்ள நிலையில் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலங்களை வாங்கி குவிப்பதற்காக ரியல் எஸ்டேட் அதிபர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் நிலங்களை வாங்கி வருகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை உருவாகும் போது நில மதிப்பீடு உச்சத்தை தொடும் என்பதால் அதனை கருத்தில் கொண்டு தற்போதிலிருந்து நிலங்களை வாங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடத்திற்கான பட்டாவையும் பெற்றுள்ள ராணுவ வீரர்
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துவரும் தோப்பூர் மற்றும் கரடிக்கல், உரப்பனூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பாக வாங்கி பயன்படுத்தாமல் வைத்திருந்த நிலங்களை போலி பட்டா மற்றும் போலி பத்திரம் தயாரித்து நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் சோழவந்தான் செல்லும் உரப்பனூர் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான தங்கம் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு VGP சந்தோஷ்நகர், கோல்டன் சிட்டி 2 என்ற நில விற்பனையாளர்களிடமிருந்து 22 சென்ட் 3 பிளாட்டுகளை கிரையம் செய்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த இடத்திற்கான பட்டாவையும் பெற்றுள்ளார். இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர் தங்கத்தின் பெயரில் இருந்த நிலத்தை திருமங்கலத்தைச் சேர்ந்த பஞ்சாச்சாரம் என்பவர் போலியாக பட்டா மாறுதல் செய்து அதனை விற்பனை செய்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கில் 6 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
புகார் மனு
இந்த நிலையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் நிலத்தை போலியான பட்டா மற்றும் பத்திரத்தை உருவாக்கி பத்திரப்பதிவுத்துறை சார்பதிவாளர் பாண்டியராஜன் லஞ்சம் பெற்றுக் கொண்டு பஞ்சாச்சாரம் என்பவருக்கு பதிவு செய்துள்ளதாக கூறியும், மோசடியாக அனைத்து ஆவணங்களையும் போலியாக உருவாக்கி திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பல போலி பட்டாக்கள் உருவாக்கியுள்ளதாக கூறியும், இதற்கு உடந்தையாக இருந்த திருமங்கலம் வட்டாட்சியர் திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் ராணுவ வீரர் தங்கம் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
நடவடிக்கை தேவை
முன்னாள் ராணுவ வீரரால் புகார் அளிக்கப்பட்ட திருமங்கலம் சார் பதிவாளர் பாண்டியராஜன் சில தினங்களுக்கு முன்பு லஞ்சம் பெற்று கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ள நிலையில் அவர் மீது பல போலி பத்திரம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க உதவியாக இருந்ததாகவும் மற்றும் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலக நில அளவை துறை சார்ந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் பேசிய போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரவுள்ள நிலையில் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களின் சொத்துக்களை அதிகாரிகள் உதவியுடன் அபகரிக்க முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















