The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
The Goat Life - Aadujeevitham Movie Review: பிருத்விராஜ் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ஆடு ஜீவிதம் படத்தின் விமர்சனம்
Blessy
Prithviraj Sukumaran , Amala Paul , Jimmy Jean-Louis
Theatrical Release
பிளெஸி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் , நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. ஏ. ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 16 ஆண்டு கால காத்திருப்பிற்கு பிறகு வெளியாகி இருக்கும் இப்படத்தின் முழு விமர்சனம் இதோ.
ஆடு ஜீவிதம் படத்தின் கதை
எப்படியாவது கல்ஃப் நாட்டிற்கு வேலைக்கு சென்று கொஞ்சம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற சின்ன ஆசையில், செழிப்பான தனது சொந்த ஊரையும் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியையும் விட்டு செளதி செல்கிறார் நாயகன் நஜீப் முகமது (பிருத்விராஜ்) மற்றும் அவரது நண்பன் ஹக்கீம். செளதி சென்று சேர்ந்ததும் தன்னை அழைத்துச் செல்ல ஏஜெண்ட் யாரும் வராத காரணத்தினால் தவறான ஏஜெண்டிடம் மாட்டிக்கொண்டு ஆடு மேய்க்கும் அடிமையாக பாலைவனத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். தான் பேசுவதை புரியவைக்க முடியாமல், எதிரில் இருப்பவர் பேசும் மொழியும் புரியாமல் தவிக்கும் நஜீப், தான் அடிமையாக்கப்பட்டிருப்பதையே ஒரு சில நாட்களுக்குப் பிறகுதான் உணர்கிறார்.
அடிமை வாழ்க்கை:
தனது சொந்த ஊர் மற்றும் மனைவியின் நினைவுகளில் நஜீப் நாட்களைக் கழித்து வருகிறார். ஒரு நாள் எதேச்சையாக கண்ணாடியில் தனது முகத்தில் வளர்ந்திருக்கும் தாடியைப் பார்த்து தான் இங்கு வந்து பல நாட்கள் ஆகிவிட்டதையும், இங்கிருந்து தான் தப்பிச் செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்கிறார். தப்பி ஓடும் நஜீபின் முதல் முயற்சி தோல்வியில் முடிய, ஒரு கட்டத்திற்கு மேல் முயற்சியைக் கைவிட்டு தனது அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறார்.
எதிர்பாராத வகையில் ஒரு நாள் தனது நண்பன் ஹக்கீமை மீண்டும் சந்திக்கிறார் நஜீப். இப்ராஹிம் என்கிற இன்னொரு அடிமைக்கு இந்தப் பாலைவனத்தில் இருந்து தப்பிக்கும் வழி தெரியும் என்றும், அவன் இருவரையும் இந்த இடத்தைவிட்டு அழைத்துச் செல்வான் என்றும் ஹக்கீம் சொல்கிறான். நஜீப் தனது வீட்டிற்கு சென்றாரா? இல்லையா? என்பதற்கு படம் பதில் சொல்கிறது. ஆனால் இந்த இடத்திற்கு வந்த அதே மனிதனாக அவன் திரும்பிச் செல்வதில்லை. இந்தப் பாலைவனத்தில் இருந்து நஜீப் தனது வீட்டிற்கு செல்லும் பயணமே ‘ஆடூ ஜீவிதம்’ படத்தின் கதை.
விமர்சனம்
சுற்றி வளைக்காமல் சொல்ல வேண்டியதை அப்படியே நேர்கோட்டில் சொல்லப்பட்ட கதை ஆடு ஜீவிதம். உயிர் பிழைக்கும் ஒரு மனிதனின் போராட்டத்தை 3 மணி நேர படமாக ஆக்கியிருக்கிறார் பிளெஸ்ஸி.
எதிர்பாராத விதமாக அதீதமான ஒரு சூழலில் மாட்டிக்கொண்ட மனிதர்களின் கதைகள் உலகம் முழுவதும் நிறைய இருக்கின்றன. அசாத்தியமாம சூழ்நிலைகளில் இருந்து உயிர்வாழும் தாகத்தில் இந்த மனிதர்கள் போராடி மீண்டு வருவதே இந்தப் கதைகளின் முடிவாக இருக்கும். ஆனால் இந்த அசாத்தியமான சூழல் மனிதர்களுக்கு வாழ்க்கையைப் பற்றி அதுவரை இருந்த பார்வையையே மாற்றிவிடுகிறது. இந்த மாதிரியான கதைகள் படமாக்கப்படும் போது அவற்றில் பெரும்பாலும் நம்பிக்கையை கைவிடாமல் இருப்பதும் வாழ்வின் மீதான பற்றை பார்வையாளர்களுக்கு வலியுறுத்தப் படும் நோக்கம் அவற்றில் சேர்ந்தே உருவாகி விடுகிறது.
இந்த நோக்கம் எந்த அளவிற்கு கதாபாத்திரத்தின் வழியாக நமக்கு கடத்தப்படுகிறது என்பதே முக்கியமான கேள்வி.
ஒரு புத்தகத்தை படமாக்குவதில் நிறைய சவால்கள் இருக்கின்றன. அதிலும் இப்படியான ஒரு கதையில் பெரும்பாலான உணர்வுகள் மனவோட்டமாக கடத்தப்படுபவை. படமாக ஆடு ஜீவிதம் அந்த மன ஓட்டங்களை காட்சியாகப் பதிவு செய்ய தவறியிருக்கிறது. தனிமை, ஏக்கம், கடவுளால் கைவிடப்பட்ட ஏமாற்றம், தன்னைச் சுற்றி இருக்கும் விலங்குகள் உடன் நஜீப் உரையாடுவது என பலவிதமான உணர்ச்சி நிலைகளை புத்தகத்தில் வரும் நஜீபின் மனப்பதிவுகளில் நம்மால் தெரிந்துகொள்ள முடியும் ஆனால் படத்தில் அப்படியான தருணங்கள் இல்லாமல், உணர்வெழுச்சிகள் மிகுந்த தருணங்கள், முக்கியமான கதைத் திருப்பங்கள் மட்டுமே அடிக்கோடிட்டு சொல்லப்பட்டிருக்கின்றன. குடிக்க ஒரு துளி தண்ணீர் இல்லாமல் இருப்பது, தனது நெருங்கிய நண்பனின் இறப்பை கண்ணால் பார்ப்பது, போன்ற புறவயவான போராட்டங்கள் நிறைய இந்தப் படத்தில் இருக்கின்றன. இந்த புறவயமான போராட்டம் ஒரு மனிதனின் ஆன்மாவில் என்ன மாதிரியான தாக்கத்தை செலுத்துகின்றன என்பதை நம்மால் படத்தில் பார்க்கவோ உணரவோ முடிவதில்லை.
நாவலில் தனது ஊர் மற்றும் மனைவியின் நினைவுகளை சுமந்தபடியே வாழும் நஜீபின் தவிப்பு நமக்கு தெரிவதில்லை. நஜீப் மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான உரையாடல் எதார்த்தமாக இருந்தாலும் குறுகிய நேரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு உயிர்ப்பாக இல்லை.
முழுக்க முழுக்க பாலைவனத்தில் நடக்கும் இப்படத்தில் காட்சிகள் ஒவ்வொன்றும் பார்வையாளர்களுக்கு பாலைவனத்தில் இருப்பதைப் போல் ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றன. பெரிதும் வித்தியாசம் காட்ட முடியாத வெறும் மணல் பரப்புகளை மட்டுமே எடுப்பது என்பது மிகவும் சவாலான ஒரு பணி. ஆனால் ஒளிப்பதிவாளர் சுனில் கே.எஸ் அந்த சவாலை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.
பிருத்விராஜின் நடிப்பு
இப்படத்திற்காக பிருத்விராஜ் செலுத்தி இருக்கும் உழைப்பை அவரது உடலிலும் நடிப்பிலும் நம்மால் பார்க்க முடியும். ஒவ்வொரு காலக்கட்டத்தில் உடல் ரீதியான நஜீபின் தோற்றம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் பிருத்விராஜின் உணர்ச்சி வெளிப்பாடும் குரலும் மாறியபடியே இருக்கிறது. படத்தின் தொடக்க காட்சியில் வாட்டசாட்டமாக வந்த மனிதனா இது? என்கிற அளவிற்கு தனது உடலை வருத்தி நடித்திருக்கிறார்.
அமலா பால் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றுகிறார். அவரது கதாபாத்திரத்திற்கு கூடுதலாக சில காட்சிகள் இருந்திருக்கலாம்.
ரஹ்மான்
இப்படத்தின் மிகப்பெரிய பலம் ஏ.ஆர்.ரஹ்மான். படத்தில் 20 முதல் 25 நிமிடங்கள் மட்டுமே வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மீதம் இருக்கும் இரண்டரை மணி நேரமும் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை ஒன்ற வைப்பது ரஹ்மானின் பின்னணி இசைதான்.
‘ஆடு ஜீவிதம்’ உயிர் பிழைக்க ஒரு மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தை நமக்கு கடத்திவிடுகிறது. ஆனால் இந்தப் போராட்டத்தில் அந்த மனிதன் எந்த மாதிரியான உளவியல் மாற்றத்திற்கு உள்ளானான் என்பதைக் கடத்த தவறியிருக்கிறது.