Sinam Movie Review: ஆறுவது ‛சினம்’.... வேஸ்ட் ஆனதா உங்க பணம்? சுடச்சுட விமர்சனம் இதோ!
Sinam Movie Review in Tamil:அருண் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘சினம்’ படத்தின் முழு விமர்சனம்.

G. N. R. Kumaravelan
Arun Vijay, Palak Lalwani, Kaali Venkat
கதையின் கரு:
நேர்மையான காவல் அதிகாரி பாரி வெங்கட். இவருக்கு காதல் மனைவி, தூங்கும் முன்னர் கதை கேட்கும் குட்டி குழந்தை என அழகான குடும்பம். ஹீரோவிற்கு அடிக்கடி கோபம் கொள்ளும் சுபாவம். இதனால் தனது தினசரி வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். இந்நிலையில், இவரது மனைவி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். தனது மனைவியை கொலை செய்தவர்களையும், கொலைக்கான காரணத்தையும் தேடி அலைகிறான் பாரி. அவனது முயற்சி வெற்றி பெற்றதா? கொலைக்கு பின்னால் ஒளிந்துள்ள மர்மம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது ‘சினம்’ திரைப்படம்(Sinam Movie).
அப்ளாஸ்களை அள்ளிய அருண்!
ஆக்ஷன்-த்ரில்லர் திரைக்கதை தனக்கு ஒன்றும் புதிதல்ல என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூப்பித்துள்ளார் அருண் விஜய். எப்போதும் போல கட்டுமஸ்தான உடல் தோற்றத்துடன், காவல் அதிகாரி வேடத்திற்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறார். அன்பு மனைவி பிணமாக கிடப்பதை பார்த்து, “அம்மு குட்டி என்னை பாரும்மா…” என கதறி அழும் காட்சியில் ரசிகர்களையும் சேர்த்து அழ வைக்கிறார் அருண். அதே நேரத்தில்,கோபம் தலைக்கேறி வில்லன்களை துரத்தி துரத்தி வெளுக்கும் காட்சியிலும் அப்ளாஸ்களை அல்லுகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்த பாலக் லால்வானி இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சிறிது நேரமே வந்தாலும் தன் ரோலிற்கு ஏற்றவாறு என்ன செய்ய முடியுமோ அதை செவ்வனே செய்திருக்கிறார். இவர்களைத் தவிர, படத்தில் தெரிந்த முகமாக இருப்பது காளி வெங்கட் மட்டுமே. குணச்சித்திர வேடத்தில் ஏட்டைய்யாவாகவும், உதவி தேவைப்படும் சமையத்தில் ஹீரோவிற்கு உற்ற துணையாகவும் இருந்து மக்களின் மனதில் நிற்கிறார்.
ரசிகர்களை ஏமாற்றாத இயக்குனர்:
வெகு சில படங்களே எடுத்திருந்தாலும், சிறப்பான கதைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிறந்தவர் அவர். நினைத்தாலே இனிக்கும், வாகா, ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களை அதற்கு சான்றாக கூறலாம். இப்போது அந்த லிஸ்டில், சினம் திரைப்படமும் சேர்ந்துள்ளது. வார்த்தைகளே இல்லாத காட்சிகளிலும் நன்றாக பேசுகிறது ஷபீரின் பின்னணி இசை. பாடல்கள் அனைத்தும் கேட்க கேட்க பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. காதல்-சண்டை-சஸ்பென்ஸ் என எல்லா சீக்குவன்ஸிலும் பி ஜி எம்-மை தெறிக்கவிட்டுள்ளார்.
விறுவிறுப்பான கதைக்களம்:
ரசிகர்களை எந்த இடத்திலும் கொட்டாவி விட வைக்காமல் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டுள்ளது ‘சினம்’. அளவான சண்டைக் காட்சிகளைக் கொண்டு ஆக்ஷன்-த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் பெரிய அளவில் ‘ட்விஸ்ட் அன்ட் டர்ன்ஸ்’ எதுவும் பெரிதாக இல்லாதது ரசிகர்களை கொஞ்சம் தொய்வடையவே செய்கிறது. பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகிறார் ஹீரோ, ஆனால் அதற்கு ஏற்றார் போல் பஞ்ச் வசனங்களை பெரிதாக இல்லையே என பெருமூச்சு விடுகின்றனர் ரசிகர்கள். இருந்தாலும், அடுத்தது என்ன? என்று அவர்களை எதிர்பார்க்க வைக்கும் வகையில் த்ரில்லர் அம்சங்களும் படத்தில் நிறையவே அமைந்துள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் அனைத்தும் அபாரம். “மனிதநேயத்துடன் பிள்ளைகளை வளர்ப்போம், பெண் இனத்தைக் காப்போம்” என்ற கருத்தை வளவளவென்று இழுக்காமல்,சுருங்கச்சொல்லி மக்களின் கைத்தட்டல்களை பெறுகிறது சினம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

