இனி 1 முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் மாநில மொழி கட்டாயம்; அரசு அதிரடி
1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து வகையான பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளிலும் மாநில மொழியான தெலுங்கு கட்டாயம் என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. இதன்படி, 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசியலில் மும்மொழிக் கொள்கை விவகாரம் தகித்து வரும் சூழலில், தெலங்கானா மாநிலம் முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளிலும் , 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளிலும் கட்டாயம்
2025- 26ஆம் கல்வி ஆண்டு முதல், மாநிலக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளிலும் இந்த உத்தரவு கட்டாயம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவை முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளது.
இந்த நடைமுறையை எளிதாக்கும் விதமாக 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, சற்றே கடினமான தெலுங்கு (சிங்கிடியை) பாடத்தைவிட எளிமையான தெலுங்கு பாடத்தை (வெண்ணிலா) பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாய்மொழியாக தெலுங்கைக் கொண்டிராதவர்களுக்கும் பிற மாநில மாணவர்களுக்கும் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2018-ல் நடந்தது என்ன?
ஏற்கெனவே 2018ஆம் ஆண்டு தெலுங்கு மொழியை ஜில்லா பரிஷத், மண்டலா பரிஷத், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் CBSE, ICSE, IB மற்றும் பிற வாரியங்களுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், முந்தைய சந்திரசேகர ராவின் BRS அரசாங்கம் இந்தக் கொள்கையை முழுமையாக செயல்படுத்தவில்லை.
எனினும் தற்போது காங்கிரஸ் தலைமையிலான அரசு தெலுங்கு மொழியைக் கட்டாயம் ஆக்கியுள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துடன் அரசுத் தரப்பு பேசுவார்த்தை நடத்தியது.

கர்நாடகாவிலும் கன்னட மொழி கட்டாயம்
முன்னதாக கர்நாடக மாநில அரசு, 10ஆம் வகுப்பு வரை அனைத்து விதமான மாநில, மத்திய, சர்வதேசக் கல்வி வாரியங்களின் பள்ளிகளில் கன்னட மொழியைக் கட்டாயம் ஆக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.






















