"ஒரு சீட்டு கூட குறையாது.. எல்லாத்தையும் மோடி பாத்துப்பாரு" மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
தமிழகத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், தென் மாநிலங்கள் ஒரு நாடாளுமன்ற இடத்தைக் கூட இழக்காது என கோவையில் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்துள்ளார். தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தென் மாநிலங்கள் ஒரு நாடாளுமன்ற இடத்தைக் கூட இழக்காது என கோவையில் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவை தொகுதிகளை இழக்கிறதா தமிழகம்?
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டிற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தென் மாநிலங்களின் தலைமைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருப்பதாகவும் ஸ்டாலின் கூறி இருந்தார். இதனால், 8 மக்களவை தொகுதிகளை தமிழ்நாடு இழக்க உள்ளதாகவும் அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த நிலையில், ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்துள்ளார். தென் மாநிலங்கள் ஒரு நாடாளுமன்ற இடத்தைக் கூட இழக்காது என கோவையில் அமித் ஷா உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், "தொகுதி மறுசீரமைப்பால் தென்னகம் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக இன்று ஒரு கூட்டம் நடத்தப்படும்.
அமித் ஷா அளித்த வாக்குறுதி:
தமிழ்நாட்டில் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். இதனால்தான் தமிழக முதல்வர் (எம் கே ஸ்டாலின்) மற்றும் அவரது மகன் (உதயநிதி ஸ்டாலின்) பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, விகிதாச்சார அடிப்படையில், எந்த தென் மாநிலத்திலும் ஒரு இடம் கூட குறைக்கப்படாது என்று மோடி அரசு மக்களவையில் தெளிவுபடுத்தியுள்ளது.
தென்னிந்திய மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்,.உங்கள் நலனை மனதில் கொண்டு ஒரு இடம் கூட விகிதாசார விகிதத்தில் குறைக்கப்படாமல் மோடி பார்த்துக் கொண்டுள்ளார். எவ்வளவு அதிகரிப்பு இருந்தாலும், தென் மாநிலங்களுக்கு நியாயமான பங்கு கிடைக்கும். இதில் சந்தேகப்பட எந்த காரணமும் இல்லை" என்றார்.
தொடர்ந்து திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமித் ஷா, "ஊழல் வழக்குகளில், திமுகவின் அனைத்து தலைவர்களும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள். அவர்களின் தலைவர்களில் ஒருவர் வேலைக்காக பணம் வாங்கிய வழக்கில் சிக்கியுள்ளார். மற்றொருவர் பணமோசடி மற்றும் சட்டவிரோத மணல் சுரங்கத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் மூன்றில் ஒரு பகுதியினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

