AUS vs SA: மழை வந்தா என்ன? ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க போட்டியில் ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!
AUS vs SA, Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

AUS vs SA, Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குரூப் ஏ-வில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், குரூப் பி பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறப் போகும் முதல் அணி யார்? என்பதைத் தீர்மானிக்கும் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் ராவல்பிண்டியில் களமிறங்கின.
மைதானத்தில் விளையாடும் மழை:
ராவல்பிண்டியில் நடைபெறும் இந்த போட்டி மதியம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ராவல்பிண்டியில் வானிலை தொடர்ந்து மந்தமாகவே இருந்த நிலையில் போட்டி தாெடங்கும் முன்பிருந்து மழை பெய்து வருகிறது.
மழை விட்டாலும் வானிலை மந்தமாக இருப்பதாலும் மைதானத்தின் ஈரப்பதம் காரணமாகவும் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மைதான ஊழியர்கள் மைதானத்தை காய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மைதானத்தின் ஆடுகளம் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.
டி20 ஆட்டமா?
இந்த நிலையில், மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க போட்டியை டி20 ஆட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி டி20 ஆட்டமாக நடத்தப்பட்டால் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. டி20 ஆட்டமாக நடத்தப்பட்டால் இரு அணிகளும் ரன்வேட்டை நடத்தும் என்று உறுதியாக கூறலாம். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் ரன் சேஸிங் செய்வது மிகவும் உகந்ததாக இருந்துள்ளது.
ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடி சேசிங் செய்தது. இன்னும் டாஸ் கூட போடாததால் இரு அணிகளும் டி20 வடிவத்திற்கு ஏற்ப தங்களது அணியை களமிறக்குவார்கள் என்று கருதப்படுகிறது.
அசுர பேட்டிங்:
தென்னாப்பிரிக்க அணியில் டோனி, வான்டெர் டுசென், மார்க்ரம், மில்லர், கிளாசென் டி20 போட்டிகளில் மிரட்டும் பேட்ஸ்மேன்கள் ஆவார்கள். ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், ஷார்ட், இங்கிலிஷ் பேட்டிங்கில் அசத்துவார்கள் என்று நம்பலாம்.
தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சு பலமாக ரபடா, ஜான்சன், மகாராஜ், முல்டர் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஜான்சன், நாதன் எல்லீஸ், துவார்ஷியஸ், ஆடம் ஜம்பா ஆகியோர் இருந்தாலும் அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.
நடக்காவிட்டால் என்ன நடக்கும்?
தற்போதுள்ள சூழலில் இந்த போட்டியை முழுமையாக நடத்துவது என்பது இயலாது. இதனால் இந்த போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம். அப்படியும் வானிலை ஒத்துழைக்காவிட்டால் இந்த போட்டி நடக்காவிட்டால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு நடந்தால் அடுத்தடுத்த போட்டிகள் இரு அணிகளுக்கும் கட்டாய வெற்றியை நோக்கி பெற வேண்டும். மேலும், அரையிறுதிக்கு யார் செல்வது என்பதைத் தீர்மானிப்பதில் ரன் ரேட் முக்கிய பங்கு வகிக்கும்.