AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
AFG vs ENG Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

AFG vs ENG Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் குரூப் பி பிரிவில் முன்னேறப் போவது யார்? என்பதில் கடும் சவால் நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தான் பேட்டிங்:
அரையிறுதி வாய்ப்பை எந்த அணியும் இதுவரை உறுதி செய்யாத நிலையில் அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தும் போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிதி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். லாகூர் மைதானம் நன்றாக பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால் ஆப்கானிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளனர்.
வலுவான இலக்கு நிர்ணயிக்குமா?
இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தால் இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இரு அணிகளின் ரன் ரேட்டும் மைனஸில் உள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் ரன் ரேட் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், அவர்கள் அரையிறுதி வாய்ப்பிற்கு முன்னேற வேண்டுமென்றால் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற வேண்டும்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 341 ரன்களை குவித்தும் இங்கிலாந்து அணி முதல் போட்டியில் தோற்றது. இதனால், இந்த போட்டியில் பந்துவீச்சை பலப்படுத்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.
ப்ளேயிங் லெவன்:
ஆப்கானிஸ்தான் அணியில் கேப்டன் ஷாகிதி தலைமையில் குர்பாஸ், ஜட்ரான், அடல், ரஹ்மத் ஷா, ஓமர்ஷாய், முகமது நபி, குல்பதீன் நயீப், ரஷீத் கான், நூர் அகமது, பரூக்கி இடம்பிடித்துள்ளனர். நட்சத்திர பேட்ஸ்மேன்களான குர்பாஸ், ஜட்ரான், ரஹ்மத் ஷா, கேப்டன் ஷாகிதி உள்ளனர். இவர்கள் பேட்டிங்கில் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம்.
இங்கிலாந்து அணியில் பட்லர் தலைமையில் பில் சால்ட், டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், லிவிங்ஸ்டன், ஆர்ச்சர், ஓவர்டன், ரஷீத், மார்க் வுட் களமிறங்கியுள்ளனர். இவர்களில் பேட்டிங்கில் டக்கெட், ரூட் நல்ல ஃபார்மில் உள்ளனர். பில் சால்ட், ஸ்மித், ஹாரி ப்ரூக், கேப்டன் பட்லர் அதிரடி காட்ட வேண்டியது அவசியம் ஆகும்.
பந்துவீச்சு பலம், பலவீனம்:
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. ரஷீத் தவிர யாரும் சிறப்பாக பந்துவீசவில்லை. ஆர்ச்சர், ஓவர்டன், மார்க் வுட் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம். ஆப்கானிஸ்தான் அணியில் ரஷீத் கான் மிகப்பெரிய பலமாக உள்ளார். பரூக்கி, நூர் அகமது, குல்பதீன் நயிப் சிறப்பாக வீசினால் இங்கிலாந்துக்கு நெருக்கடி ஆகும்.
அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இரு அணிகளும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டியது அவசியம் ஆகும்.




















