Kung Fu Panda Review: மீண்டும் ரசிகர்களுக்கு சிரிப்பு விருந்தா? குங்ஃபூ பாண்டா 4 முழு விமர்சனம்!
Kung Fu Panda Review: உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட குங்ஃபூ பாண்டா திரைப்படத்தின் முழு விமர்சனத்தை கீழே காணலாம்.
மைக் மிட்செல்
கார்டூன்
ஹாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தாலும் மொழிகளை கடந்து உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை சில திரைப்படங்கள் மட்டுமே பெற்றுள்ளன. அந்த வரிசையில் டைனோசர், மார்வெல், டிசி , இன்டியானா ஜோன்ஸ் போன்று உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட திரைப்படம் குங்ஃபூ பாண்டா.
புதிய ட்ராகன் வாரியர்:
இந்த படத்தின் முதல் மூன்று பாகங்கள் ஏற்கனவே வெளியாகி உலகெங்கும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், இன்று குங்ஃபூ பாண்டா திரைப்படத்தின் நான்காம் பாகம் வெளியாகியுள்ளது. படத்தின் தொடக்கமே வழக்கம்போல தனது அதிரடி சாகசங்களுடன் பாண்டா என்ட்ரி அறிமுகமாகிறது.
ஞானத்தின் கோலைப் பெற்று ட்ராகன் வாரியராக திகழும் பாண்டா போ-விடம் அதன் மாஸ்டர் புதிய ட்ராகன் வாரியரை தேர்வு செய்ய உத்தரவிடுகிறார். மேலும், பாண்டாவை ஆன்மீகத் தலைவனாகும்படியும் அறிவுறுத்துகிறார். ஆனால், தன்னுடைய வழக்கமான விளையாட்டுத்தனத்தால் தானே ட்ராகன் வாரியராக தொடர்வதாக கூறும் பாண்டா கண்ணில் திருட்டு வேலைகளில் ஈடுபடும் நரி யென் தென்படுகிறது.
மிகவும் தந்திரமான நரி யென்னை தனது அசாதரணமான திறமையால் சிறையில் அடைக்கும் பாண்டா, சூனியக்காரி கமேளியனால் வந்த ஆபத்தை எப்படி தடுப்பது என்று சிந்திக்கிறது.. தன்னை எப்படி வேண்டுமானாலும் உருமாற்றிக் கொள்ளும் கமேளியனை எப்படி கண்டுபிடிப்பது? என்ற குழப்பத்தில் பாண்டாவிற்கு உதவி செய்வதற்காக பாண்டாவுடன் கரம் கோர்க்கிறது நரி யென்.
பாண்டாவின் சேட்டைகள்:
இருவரும் சேர்ந்து கமேளியனை கண்டு பிடித்தனரா? கமேளியனை பாண்டா வீழ்த்தியதா? புதிய ட்ராகன் வாரியரை பாண்டா தேர்வு செய்ததா? நரி யென் யார்? கமேளியன் எதற்காக இதை செய்கிறது? என்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவும், வழக்கமான பாண்டா ஸ்டைல் நகைச்சுவையுடன் விடை செல்கிறது இந்த குங்ஃபூ பாண்டா நான்காம் பாகம்.
பாண்டா வரிசை படங்கள் என்றாலே சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது என்று கூறலாம். அந்த வரிசையில் இந்த படமும் நம்மை ஓரளவு சிரிக்க வைக்கிறது. குறிப்பாக, பாண்டாவிற்கே உரிய ட்ரேட் மார்க் வசனமான மன அமைதி, மன அமைதி, பானி பூரி முன்ன மசாலா பூரி வசனங்கள் இந்த படத்திலும் இடம்பெற்று நம்மை சிரிக்க வைக்கிறது.
சிரிப்புக்கு கியாரண்டியா?
பாண்டா வரிசை படங்கள் எப்போதும் மலைகள், ஆறுகள், நகரங்கள் என வண்ணமயமாக ரம்மியமாக எடுக்கப்பட்டிருக்கும். இந்த படத்திலும் அது எந்த குறையும் இல்லாமல் கதைக்கு தேவையான அளவு உள்ளது. படத்தின் இறுதிக்காட்சியில் இதற்கு முந்தைய பாகங்களில் பாண்டாவால் வீழ்த்தப்பட்ட வில்லன்கள் வருவதும், கமேளியன் அதை எவ்வாறு கையாள்கிறாள் என்பதை காட்டியதும் அருமையாக இருந்தது.
முந்தைய மூன்று பாகங்களிலும் பாண்டாவின் நண்பர்களாக உலா வரும் பெண் புலி, குரங்கு, வெட்டுக்கிளி மற்றும் பாம்பு இந்த பாகத்தில் மிஸ்ஸிங். அது மட்டும் ரசிகர்களுக்கு சற்று வருத்தமாக இருந்தது. மற்ற வகையில் வழக்கமான பாண்டா படம் எந்தளவு ரசிகர்களை உற்சாகப்படுத்துமோ, சிரிக்க வைக்குமோ அதை இந்த பாண்டா படம் சரியாக செய்துள்ளது. பள்ளி விடுமுறை தொடங்கியுள்ள தற்போது, குடும்பங்களுடனும், குழந்தைகளுடனும் சென்று மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்க குங்ஃபூ பாண்டா ஏற்ற படம்.
குறிப்பாக, பல மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படம் தமிழிலும் வெளியாகியுள்ளது. தமிழில் வாழ்க்கை நம்மை புரட்டிப்போட்டால்தான் நாம் வாழ்க்கையைவே புரட்டிப் போட முடியும் என்ற உத்வேகம் அளிக்கும் வசனங்களை நகைச்சுவையுடன் எழுதிய விதங்கள் மிகவும் பாராட்டத்தக்கவை. இந்த படத்தை மைக் மிட்செல் இயக்கியுள்ளார். படத்திற்கான திரைக்கதையை ஜோனதன் ஆல்பெல், கிளென் பெர்கர், டேரன் லேம்கே எழுதியுள்ளனர்.