Por Movie Review : போரடிக்க வைத்ததா? இளைஞர்களை ஈர்த்ததா? போர் பட விமர்சனம் இங்கே..
Por Movie Tamil Review : ஒன்றுக்கொன்று கதையை சிக்கலாக்க, படத்தின் சாராம்சமே கலையிழந்துவிட்டது. ஏகப்பட்ட விஷயங்களை விவரிக்கும் இப்படம் அழுத்தமாக இல்லை.
Bejoy Nambiar
Arjun Das, Kalidas Jayaram, TJ Bhanu, Sanchana Natarajan
Theatrical Release
Por Movie Tamil Review :
பிஜாய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று (மார்ச் 1) வெளியாகியுள்ள போர் படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
டெவிட், சோலோ, ஸ்வீட் காரம் காஃபி உள்ளிட்ட படங்களை இயக்கிய பிஜாய் நம்பியார், இந்த முறை இந்த காலத்து கல்லூரி மாணவர்களுக்குள் இடையே நடக்கும் சீனியர் - ஜூனியர் பிரச்னையை படமாக எடுத்திருக்கிறார். நிச்சயமாக இப்படம் அந்த பிரச்னையை மட்டும் சார்ந்து இருக்கிறது என சொல்ல முடியாது. அர்ஜூன் தாஸ் (பிரபு) - காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவருக்குள் இடையே, சிறுவயதில் ஏற்படும் கசப்பான சம்பவத்தால் தற்போது (கல்லூரி காலத்தில்) மீண்டும் களேபரம் உண்டாவது படத்தின் ஒன் லைனர் கதையாக இருந்தாலும், இவர்களை சுற்றி பல கதாபாத்திரங்களும், அவர்களுக்கான பின்னணி கதைகளும் ஒரே கோட்டில் நகர்கிறது.
அர்ஜுன் தாஸின் ஜோடியாக டி.ஜே பானு (காயத்ரி) கல்லூரியில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேக்கும் போராளி பெண்ணாக வருகிறார். அக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் சாதி பெயரை வைத்து மாணவர் ஒருவரை இழிவுபடுத்துவதை தட்டி கேட்கிறார். இவருடன் இருக்கும் நித்யஸ்ரீ(வெண்ணிலா) என்பவர், கல்லூரி பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்.
இதில் சத்யா என்பவரும் (அரசியல் கட்சித்தலைவர், கல்லூரி அறங்காவலரின் மகள்) அரசியல் எதிர்காலத்தை நினைத்து வாழ்ந்து வருவதால் கல்லூரி பொதுச்செயலாளர் பதவிக்கும் ஆசைப்படுகிறார். வெண்ணிலா - சத்யா ஆகிய இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருக்கின்றனர். முன்னாள் காதலர்களான இவர்களுக்கு பதவியால் மோதல் ஏற்படுகிறது. இதில் சாதி அரசியலும் நடக்கின்றது. இதனால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதே படத்தின் மீதக் கதை.
ஒரே படத்தில் இத்தனை கதாபாத்திரங்களை விரிவுபடுத்த முயற்சி செய்த இயக்குநர் அவரின் முயற்சியில் தோற்றுவிட்டார். ஒன்றுக்கொன்று கதையை சிக்கலாக்க, படத்தின் சாராம்சமே கலையிழந்துவிட்டது. ஏகப்பட்ட விஷயங்களை விவரிக்கும் இப்படம் அழுத்தமாகவே இல்லை. வரும் பாதையிலே அனைத்தும் போகின்றது. அதற்காக இந்த கதாபாத்திரங்கள் மனதில் நிற்கவே இல்லை என்றும் சொல்ல முடியாது.
படம் பார்க்க வருபவர்களுக்கு இப்படம் என்ன அனுபவத்தை கொடுக்கும்?
அர்ஜுன் தாஸை வில்லனாக, அடியாளாக பார்த்தவர்களுக்கு இந்த பிரபு கதாபாத்திரம் சற்று வித்தியாசமாகவே இருக்கும். அத்துடன், அர்ஜுன் தாஸையும் காளிதாஸ் ஜெயராமையும் பெண்கள் பார்த்து ரசிக்கலாம். ஆண்களுக்கு டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், வெண்ணிலா, ஸ்ரீமா உபாத்யாயா என தேவதைகள் கூட்டமே காத்திருக்கிறது. இவர்கள் அனைவரும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.
படம் முழுவதும் ட்ரிப்பியான இசையும் காட்சிகளும் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் பாடல்கள் அடுத்த சில நாட்களுக்கு இன்ஸ்டா ரீல்ஸில் ட்ரெண்ட் ஆகும் என்பது உறுதி. கதையெல்லாம் எங்களுக்கு முக்கியமில்லை காரணமே தெரியாமல் வைப் செய்ய ஒரு படம் வேண்டும் என நினைப்பவர்கள் இப்படத்தை கண்டிப்பாக ஒருமுறை காணலாம். ஒரு சில இடங்களில் இப்படத்தின் இசை இரைச்சலை கொடுக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். படத்தொகுப்பு, ஒளிப்பதிவு ப்ரெஷ்ஷாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.