(Source: ECI/ABP News/ABP Majha)
’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ – இயற்கை அதிசயங்கள் காணும் கூர்க் பயணம்..!
இயற்கையோடு பயணம், அழகான காட்சிகள், படகு சவாரி, யானை குளிப்பாட்டல், ட்ரெக்கிங், அருவி குளியல் என முழுமையான பயணமாக கூர்க் இருந்தது.
”குடகுமலை காற்றில் வரும் பாட்டு சத்தம் கேட்குதா என் பைங்கிளி” என்ற பாடல் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது. அடுத்த டிரிப் எங்கே போவது என்ற யோசனையில் இருந்த எங்களுக்கு, அந்த பாடல் வரிகள் வழிகாட்டியது. டீ குடிக்க எத்தனை நாட்களுக்கு ஊட்டிக்கு செல்வது என சலிப்பாக இருந்ததால், காபி குடிக்க கூர்க் செல்லலாம் என முடிவெடுத்தோம். அதேபோல ஒரு மாற்றத்திற்காக பேருந்தில் செல்லலாம் என, கோவை காந்திபுரத்தில் இருந்து மைசூர் செல்லும் கர்நாடகா பேருந்தில் ஏறினோம்.
பேருந்தில் ஏறியது தான் தாமதம். பேருந்து புயல் வேகத்தில் கிளம்பியது. ஜன்னல் வழியாக நகரங்கள், கிராமங்கள் தொலைந்து மலைத் தொடர்கள் முளைத்தது. ஆபத்தான திம்பம் மலைப் பாதை கொண்டை ஊசி வளைவுகளிலும், அதே வேகத்தில் அசல்ட்டாக பேருந்து சென்றது. ஒவ்வொரு வளைவிலும் பேருந்தோடு, நாங்களும் திரும்ப திரில் பயணமாக இருந்தது. இயற்கை ஏழில் கொட்டிக் கிடக்கும் மலைக் காடுகளோடு, மனமும், கண்களும் பயணித்தது. இயற்கையை இரசித்தபடி சென்ற போது, சாலையோர காட்டிற்குள் இரண்டு கரடிகள் காட்சி தந்து சென்றன. அந்த திருப்தியோடு மைசூர் சென்று சேர, மாலையாகி விட்டது. மைசூர் அரண்மணையை பார்த்ததும், பேருந்தில் இருந்து குதித்து விட்டோம். ஆனால் நேரம் முடிந்து விட்டதால் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இருந்தாலும் அரண்மணை வாயிலில் சிறிது நேரத்தை போக்கி விட்டு, சில பல செல்பிகளை போட்டு விட்டு கிளம்பினோம். அன்றிரவில் மைசூரில் தங்கியிருந்து, அடுத்த நாள் காலையில் மடிக்கேரிக்கு செல்லும் பேருந்தில் கிளம்பினோம்.
மேலும் படிக்க : தென்னிந்தியாவின் முதல் சாலை சுரங்கப்பாதை ’குதிரன்’ - போட்டோ ஆல்பம்
வரலாறு முக்கியம் அல்லவா?
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இயற்கை எழில் சூழ்ந்திருக்கும் பகுதியாக கூர்க் என அழைக்கப்படும் குடகுமலை மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்து வந்துள்ளது. சுதந்திரத்திற்கு பின்னர் தனி மாநிலமாக இருந்த கூர்க் மாநிலம், மாநில மறுசீரமைப்பின் போது கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இப்பகுதி காபித் தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. கூர்க்கின் தலைநகர் மடிக்கேரி. ’இந்தியாவின் ஸ்காட்லாந்து’ என அழைக்கப்படுகிறது என்பதை எல்லாம் பேருந்து பயணத்தின் ஊடாக அறிந்து கொண்டோம். தமிழ்நாட்டில் இருந்து மைசூர், பெங்களூரு வந்து அங்கிருந்து, பேருந்தில் மடிக்கேரி செல்ல முடியும். கூர்க் மலைப்பாதையில் பெரிய வளைவுகளும் இல்லை. ஏற்றங்களும் இல்லை. என்றாலும் இயற்கையோடு பிணைந்து இருப்பதால், கண்களுக்கு விருந்தளித்தது.
மடிக்கேரி சென்று சேர்ந்தோம். பிரபல சுற்றுலாத்தலம் என்பதற்கான எந்த அடையாளமும் இன்றி, அமைதியாக இருந்தது. பெரிய கடைகள் இல்லை. கூட்டம் இல்லை. மன்னர் கால அடையாளங்களை இன்னமும் சுமந்து நிற்கும் சிறு நகரமாக காட்சியளித்தது. ஒரு கடையில் சூடான சுவையான காபியை குடித்தோம். பின்னர் ஒரு ஆட்டோவை பிடித்தோம். ஆட்டோ டிரைவர் நல்ல தமிழில் பேசி ஆச்சரியப்படுத்தினார். பல மொழிகளை கற்றறிந்தவராக இருந்தார். அவரையை கைடாக மாற்றி சுற்றிப் பார்த்தோம்.
மேலும் படிக்க : 'மச்சி ஒரு டிரிப் போலமா?': ‛மேகம் கருக்கயிலே... புள்ள தேகம் குளிருதடி...’ பரளிக்காடு வாங்க..!’
மச்சி ஒரு டிரிப் போலமா?’ : மனதை கொள்ளை கொள்ளும் ‛கொள்ளேகால்’ பயண அனுபவம்!
மன்னர் கால அடையாளங்கள்
மன்னர்கள் வாழ்ந்த ஊருக்கு வந்து விட்டு, அவர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்காமல் இருந்தால் எப்படி?. முதலில் அரண்மணைக்கு சென்றோம். பழங்கால அரண்மணை, அதனை சுற்றி எழுப்பப்பட்ட பிரம்மாண்ட மதில் சுவர், தோட்டம், பீரங்கிகள், அருங்காட்சியகம் ஆகியவை இருந்தது. அங்கிருந்து ’’ராஜா சீட்” என்ற இடத்திற்கு சென்றோம். இங்கிருந்து மன்னர்கள் சூரியன் உதயத்தையும், அஸ்தமணத்தையும் கண்டு இரசிப்பார்களாம். அதனால் தான் அப்பெயராம். உயரமான காட்சி முனை இடமான அங்கே, கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பசுமை கம்பளம் உடுத்திய மேற்கு தொடர்ச்சி மலைகளும், வெண் நிற மேகங்களும் காட்சியளித்தன. பின்னர் ”ராஜா டோம்ப்” என்ற மன்னர்களின் கோவிலுக்கு சென்றோம். அமைதியும், இயற்கையும் தவழும் இடமாக காட்சியளித்தது. அப்படியே ஓம்கரேஸ்வரர் கோவிலையும் சுற்றி விட்டு கூர்க் நகரத்தில் இருந்து விடை பெற்றோம்.
மலைகளில் இருந்து கொட்டும் அபே அருவி மடிக்கேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அருவியை தரிசிக்க டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்றால், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக மலையிறங்க வேண்டும். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அருவியில் குளிக்க முடியாது. தடுப்புகள் அமைத்து தடுத்து இருந்தனர். தூரத்தில் இருந்தே நீர் வீழ்ச்சியை கண்டு இரசித்து விட்டு, புறப்பட்டோம். அருவியில் குளிக்கும் ஆசையை இருப்பு அருவி தீர்த்து வைக்கும்.
நாங்கள் கூர்க் வந்ததற்கு முக்கியமாக ஒரு காரணம் இருக்கிறது. அது தல காவிரியை காண்பது. தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமாகவும், விவசாயிகளின் உயிராதாரமாகவும் இருக்கும் காவிரி ஆறு, தல காவிரியில் தான் உற்பத்தியாகிறது. கூர்க் மலைகளில் உற்பத்தியாகி, கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் பாய்ந்தோடி வங்கக் கடலில் கலக்கும் காவிரி, அங்கே சிறு குளம் போல அமைதியாக காட்சியளித்தது. காவிரியின் பிரம்மாண்டத்தை கண்டவர்களுக்கு, இது ஆச்சரியமாக தான் இருக்கும். மலைத் தொடர்களுக்கு நடுவே 1276 மீட்டர் உயரத்தில் உள்ள அவ்விடத்தில், அகஸ்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. அங்கே 6 மணிக்கு மேல் அனுமதியும் இல்லை. தங்கவும் இடமில்லை. பக்கத்தில் உள்ள மலையில் ட்ரெக்கிங் செல்லலாம்.
தங்கக்கோவிலும், துபாரே யானைகள் முகாமும்
குஷால் நகரில் பைலாகுப்பே என்ற இடத்தில் ஒரு தங்கக்கோவில் இருக்கிறது. அது நம்ட்ரோலிங் மானஸ்டெரி (namdroling monastery) என்ற புத்த விகாரம். இது திபெத்திய செட்டில்மெண்ட் பகுதியில் அமைந்துள்ளது. கலை நயத்துடன் திபெத்திய கட்டுமானத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் கோபுரம் தங்க நிறத்தில் மூன்று அடுக்குகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே 40 அடி உயரம் கொண்ட மூன்று புத்த சிலைகளும் தங்க நிறத்தில் மின்னுகின்றன. ”புத்தம் சரணம் கச்சாமி” என பல புத்த துறவிகள் உலாவிக் கொண்டிருந்த இடத்தில், அமைதியும், அழகும் தவழ்ந்து கொண்டிருந்தது.
அடுத்ததாக துபாரே யானைகள் முகாமிற்கு சென்றோம். காவிரி ஆற்றின் கரையில் உள்ள பெயர் பெற்ற இந்த யானைகள் முகாம், கர்நாடக வனத்துறையின் யானைகளுக்கான முக்கியமான இடமாக உள்ளது. மைசூர் தசராவில் வலம் வ்வரும் யானைகள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. காவிரி ஆற்றை படகில் கடந்து சென்றால், ஆங்காங்கே யானைகள் நிற்பதை பார்க்கலாம். சுமார் 150 யானைகள் பராமரிகப்பட்டு வருகின்றன. யானைகளை பார்த்தாலே மனம் உற்சாகத்தில் தவழும். அதிலும் யானைகளை பார்ப்பது மட்டுமின்றி, யானைகளை தொட்டு இரசிக்கலாம். குளிப்பாட்ட செய்யலாம் என்றால் சொல்லவா வேண்டும்? யானைகளுக்கு பிரஷ் மூலம் தேய்த்து குளிப்பாட்டலாம். குளியலுக்கு பின்னர் யானைகளுக்கு தீணி போடலாம். ஆற்று நீரில் விளையாடும் குட்டி யானைகள் போலவே, மனமும் உற்சாகத்தில் ஆடியது. நிசர்கடாமா பூங்கா, தொங்கும் பாலம், மான் பூங்கா ஆகியவையும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கும்.
இயற்கையோடு பயணம், அழகான காட்சிகள், படகு சவாரி, யானை குளிப்பாட்டல், ட்ரெக்கிங், அருவி குளியல் என முழுமையான பயணமாக கூர்க் இருந்தது. திரும்பும் வழியெங்கும்,
“குடகுமலை காற்றில் வரும் பாட்டு சத்தம் கேக்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான் கண்டபடி தவிக்குது” என்ற பாடல் வரிகள் காதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மனதின் நினைவுகள் கூர்க்கை சுற்றி பறந்து கொண்டிருந்தது.
(பயணங்கள் முடிவதில்லை)
’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2: இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்