Iran Khamenei Dead: “கமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாக ட்ரம்ப் கூறிய நிலையில், ஈரானின் அரசு ஊடகம் உள்ளிட்டவற்றிலும் அது உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“கமேனி தியாக நிலையை அடைந்துவிட்டார்“ - ஈரான் ஊடகங்கள் தகவல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறிய நிலையில், தெஹ்ரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களில் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதாக பல ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"ஈரானின் உச்ச தலைவர் தியாகியை அடைந்துவிட்டார்" என்று அரசு ஊடகமான IRIB செய்தி வெளியிட்டது.
சமீபத்திய தாக்குதல்களில் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தை கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஃபார்ஸ் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ், காமெனியின் மருமகளும் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
அடுத்து என்ன.?
ஈரானை பொறுத்தவரை, கமேனிக்க பிறகு அடுத்த கட்ட தலைவர் என்று யாரும் நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது உச்ச தலைவராக இருந்த கமேனி கொல்லப்பட்டுள்ளதால், அடுத்து யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், ஈரானின் நிலை மிகவும் குழப்பமாகவும், அந்நாட்டின் எதிர்காம் கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது. எனினும் தொடர்ந்து போர் நீடிப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
கமேனி மரணத்தை முன்கூட்டியே அறிவித்த ட்ரம்ப்
86 வயதான ஈரானிய தலைவரின் மரணம் "ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு" என்று ட்ரம்ப் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் கூறினார். ஈரானிய ராணுவம் மற்றும் அரசாங்க தளங்களை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு கமேனியின் மரணம் நிகழ்ந்தது என்றும் கூறினார்.
1989 முதல் ஈரானை வழிநடத்திய கமேனியை குறிவைக்க, அமெரிக்கா இஸ்ரேலுடன் நெருக்கமாக பணியாற்றியதாக அமெரிக்க தளபதி கூறினார். ட்ரம்ப்பின் பதிவிற்குப் பிறகு, ஈரானிய உச்ச தலைவரின் எக்ஸ் தளத்தின் கணக்கு, ட்ரம்ப்பின் கூற்று குறித்து சந்தேகங்களை எழுப்பும் ஒரு ரகசிய செய்தியை வெளியிட்டது. பாரசீக மொழியில் எழுதப்பட்ட அந்தப் பதிவில், "நமி ஹைதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்)" என்று எழுதப்பட்டிருந்தது.
உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் கமேனியின் இருப்பிடத்தைக் கண்காணித்தன என்று ட்ரம்ப் ஒரு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். "அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதையும் செய்ய முடியாது" என்றும் அவர் கூறினார்.
ஈரானியர்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், எச்சரிக்கையும் விடுத்தார். "எனினும், கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு வாரம் முழுவதும் தடையின்றி தொடரும், அல்லது மத்திய கிழக்கு முழுவதும் மற்றும் உண்மையில் உலகம் முழுவதும் அமைதி என்ற நமது நோக்கத்தை அடைய தேவையான வரை!" என்று ட்ரம்ப் கூறினார்.
ட்ரம்ப்பின் பதிவிற்கு முன்னதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காமெனியின் வளாகம் அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.























