USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Attacks Iran Khamenei Dead: ஈரானின் உச்சபட்ச தலைவரான கமேனியை கொன்றுவிட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

USA Attacks Iran Khamenei Dead: வரலாற்றின் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான ஈரானின் உச்சபட்ச தலைவரான கமேனி இறந்துவிட்டார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
”கமேனியை கொன்னுட்டோம்” - ட்ரம்ப் அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ படைகள் இணைந்து ஈரான் மீது ராணுவ தாக்குதலை நடத்திய நிலையில், அந்நாட்டின் உச்ச்சபட்ச தலைவரான அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கமேனி, வரலாற்றில் மிகவும் தீய நபர்களில் ஒருவர் மரணமடைந்தார். இது ஈரான் மக்களுக்கான நியாயம் மட்டுமல்ல அனைத்து அமெரிக்க மக்களுக்குமானது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும், கமேனி மற்றும் அவரது ரத்தவெறி பிடித்த கும்பலால் கொல்லப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்குமான நீதி. ஈரான் மக்கள் தங்கள் நாட்டை எடுத்துக்கொள்வதற்கான ஒற்றை வாய்ப்பு இது” என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். இவருக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, “கமேனி கொல்லப்பட்டதற்கான பல சாத்தியக்கூறுகள் தெரிகின்றன” என குறிப்பிட்டு இருந்தார்.
ஈரான் சொல்வது என்ன?
ஆனால், இந்த விவகாரம் ஈரான் தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஊடகத்திற்கு கடைசியாக அளித்த பேட்டியில், “கமேனி தற்போது வரை உயிரோடு இருக்கிறார். அனைத்து உயர் அதிகாரிகளும் உயிருடனே உள்ளனர்” என தெரிவித்துள்ளார். கமேனியின் உடல் நிலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், “எதையும் உறுதிப்படுத்தும் சூழலில் இல்லை. ஆனால், ஒட்டுமொத்த அமைப்பும், மொத்த நாடும் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் முயற்சியில் உள்ளன” என தெரிவித்துள்ளார்.
கமேனி வீட்டின் மீது 30 குண்டுகள்
இந்திய நேரப்படி சனிக்கிழமை பிற்பகலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் இணைந்து, ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கின. குறிப்பாக கமேனியின் அலுவலகத்தை குறிவைத்து குண்டுகள் வீசப்பட்டன. அதேநேரம், கமேனி ஏற்கனவே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதேநேரம், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில், கமேனியின் வசிப்பிடம் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருப்பதை காண முடிகிறது. நேதன்யாகுவின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, கமேனியின் வசிப்பிடத்தின் மீது மட்டுமே 30 குண்டுகள் வீசப்பட்டனவாம். கமேனி பூமிக்கு அடியில் பதுங்கி இருந்ததாகவும் ஆனால் அவருடைய சொந்த பங்கரில் இல்லை என்றும் இஸ்ரேல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, தாக்குதலில் முடிவில் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
























