’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2: இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்
நாளும் நம்மை சுற்றி நிற்கும் பிரச்சனைகளை தூக்கித் தூர எறிந்து விட்டு, ஒரு டிரிப் போக ஆசைப்படுகிறீர்களா?. பார்த்து பழக்கப்பட்ட இடங்களுக்கு பதிலாக புதியதோர் பயணத்தை விரும்புகிறீர்களா?. உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ், நெல்லியம்பதி.
நெல்லியம்பதி, பலரும் அறியாத ஒரு மலை வாழிடம். இயற்க ஏழில் கொஞ்சும் சிறிய மலை. அங்கு பெரிய ஊர்களும் கிடையாது. வணிகமாக்கப்பட்ட பார்வையிடங்களும் கிடையாது. இருப்பினும் ஊர்ச் சுற்றிகளை கவர்ந்திழுக்கும். இனிமையான பயண நினைவுகளைத் தரும். குடும்பத்தோடு சுற்றுலா செல்வதை விட, எதையும் எதிர்பார்க்காமல் ஊர்ச்சுற்ற விரும்புபவர்களுக்கு உகந்த இடம்.
கோவையில் இருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்திற்குள் அமைந்துள்ளது, நெல்லியம்பதி. கன்னியாகுமரி துவங்கி குஜராத் வரை இடைவெளியே இல்லாமல் ஒரு நீண்ட மதில் சுவர் போல நிலை நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரே இடைவெளி, பாலக்காடு கணவாய். இந்த கணவாயில் தான் கேரளாவை தமிழ்நாட்டோடு இணைக்கும் முக்கிய வழித்தடம் அமைந்துள்ளது. பாலக்காட்டுக் கணவாயின் தெற்கே அமைந்துள்ள மலைப் பகுதி தான் நெல்லியம்பதி.
கோவையில் இருந்து இரண்டரை மணி நேர பயணத்தில் நெல்லியம்பதியை அடையலாம். பச்சை கம்பளம் விரித்தது போல இருக்கும் நெல் வயல்களும், தென்னை மரங்களும் நிரம்பிய பகுதிகளை கடந்து, நென்மாராவில் இருந்து போத்துண்டி அணை சாலையில் பயணிக்க வேண்டும். நென்மாராவில் மார்ச் மாதங்களில் நடக்கும் வெடித் திருவிழா மிகவும் பிரபலமானது. தூரத்தில் தெரியும் மலைகளை நெருங்கிச் செல்லச் செல்ல மேகங்கள் தவழும் மலைகள் வரவேற்கும். போத்துண்டி அணை 19 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான அணைகளில் ஒன்று. இங்கு பூங்கா, படகு சவாரி ஆகியவை சுற்றுலா பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த அணையை கடந்தால் வனத்துறை சோதனைச்சாவடி வழி மறிக்கும். அங்கு நம்மை பற்றிய விபரங்களை அளித்த பின்னரே, மலைப்பாதையில் பயணிக்க முடியும். வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக மாலை 4 மணிக்கு மேல் அச்சாலையில் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அதிக இரைச்சல் இல்லாத அமைதியான மலைப்பாதை. வளைந்து வளைந்து மலையேறும் சாலையில், எப்போதாவது வாகனங்கள் கடந்து செல்லும். மலை உச்சியில் இருந்து பாலக்காட்டின் அழகை பார்த்து இரசிக்க காட்சி முனைகளும் உண்டு. அங்கு சற்று நேரம் இளைப்பாறி விட்டு, புகைப்படங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடரலாம். சாலைகளில் ஆங்காங்கே யானை சாணங்கள் கிடப்பதை பார்க்கலாம்.
வால்பாறையின் சாயலை, நெல்லியம்பதி ஒத்திருக்கும். தேயிலை, காப்பித் தோட்டங்கள் அப்பகுதி மக்களின் வாழ்வாதாராம். அதிகளவிலான கடைகள் இருக்காது. மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படும்.
ஆச்சரிய இடங்களும், ஆப் ரோடு பயணமும்!
சீதார்குண்டு காட்சி முனை முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சூஸைட் பாயிண்டும் உள்ளது. இங்கிருந்து கேரளாவின் பள்ளத்தாக்கு காட்சிகளை கண்டு மகிழலாம். மலை உச்சியை ஒட்டிச் செல்லும் ஒற்றையடி பாதை நடப்பது திரில்லாக இருக்கும். சற்று தூரம் நடந்தால் 100 மீட்டர் உயரமுள்ள சீதார் குண்டு நீர்வீழ்ச்சியை கண்டு இரசிக்கலாம். கூகுளில் நெல்லியம்பதி எனத் தேடினால், முதலில் வரும் கூஸ்பெர்ரி மரங்கள் நெல்லியம்பதியின் அடையாளம். அம்மரத்தை இங்கு காண முடியும். இப்பகுதி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது.
அங்கிருந்து தேயிலைத் தோட்டங்கள் வழியாக சென்றால் காரப்பாரா தொங்குப்பாலத்தை அடையலாம். ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த பாலம் மிஸ் செய்யக்கூடாத இடம். விடுமுறை நாட்கள் தவிர்த்த நாட்களில் அதிக கூட்டம் இருக்காது. இயற்கைச் சூழலில் அழகான புகைப்படங்கள் எடுக்க அருமையான இடம். இதற்கு அருகே காரப்பாரா அருவியும் இருக்கும். மழைக் காலங்களில் மனதை கவர்ந்திழுக்கும் ஓரிடம். இதேபோல பலக் காட்சி முனைகளும், அருவிகளும், இரம்மியமான சூழலும் இயற்கையின் கொடையாக விரிந்து கிடக்கின்றன.
அதேபோல இன்னொரு ஹைலைட் இருக்கிறது, அது ஜீப் டிரெக்கிங். அது சாகசங்கள் நிரம்பிய ஆப் ரோடு பயணம். அது நாம் நினைப்பது போன்ற குண்டும் குழியுமான சாலை அல்ல. குண்டும், குழியும் தான், சாலையே. வளைந்து நெளிந்து ஏறும். நெத்தலும் குத்தலுமாக இறங்கும்.
ஆப் ரோடுகளில் சீறிப்பாயும் ஜீப்களே இந்தப் பாதையில்,திக்கித் திணறி தான் செல்லும் என்றால் எப்படி இருக்கும் என நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். யானை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளையும் அவ்வப்போது காண முடியும். ஒரு முறை சென்று வந்தால், என்றும் மறக்க முடியாத திரில் அனுபவமாக அமையும்.
இயற்கையின் பேரதிசயம், நெல்லியம்பதி
இருள் போர்த்திய நெல்லியம்பதி காடுகள் ஒளிரும். அதற்கு அங்கு கூடும் மின்மினி பூச்சிகளே காரணம். ஒன்றிரண்டு அல்ல. நூறு, ஆயிரமும் அல்ல. ஒரே இடத்தில் இலட்சக்கணக்ககான மின்மினி பூச்சிகளால் காடு, திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். ஆயிரக்கணக்கில் சுற்றி நிற்கும் மரக்கிளைகள் முழுவதும் சிறிய அளவிலான சீரியல் ஒளி விளக்குகளால் அலங்காரம் செய்தது போல காட்சியளிக்கும். மின்மினி பூச்சிகளினால் காடு மஞ்சள் நிறத்தில் ஒளிரும். ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு நாளும் மாலை இருட்டிய பிறகு, அதிகாலை சூரியன் வரும் வரை இந்த இயற்கையின் பேரதிசயம் அரங்கேறும். அந்த காட்சிகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆச்சரியங்கள்.
ஒருவேளை சொர்க்கம் என ஒன்றிருந்தால், அது இப்படி தான் இருக்குமோ?
(பயணங்கள் முடிவதில்லை)