’மச்சி ஒரு டிரிப் போலமா?’ : மனதை கொள்ளை கொள்ளும் ‛கொள்ளேகால்’ பயண அனுபவம்!
கொள்ளேகால், கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்ற தகவல் ஆச்சரியத்தை தந்தது. மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, கர்நாடகா உடன் சேர்க்கப்பட்டது.
”இயற்கையோட சேர்ந்து பயணம் செய்யணும்…” என வாழ்க்கையை வாழ பயணம் செய்ய வழிகாட்டுகிறது, ’வாழ்’ திரைப்படம். அந்த எண்ணம் தான் மனம் எப்போது எல்லாம் சோர்ந்து போகிறதோ, அப்போது எல்லாம் ஆறுதலையும், தேறுதலையும் தந்திருக்கிறது. அந்த படத்தை பார்த்த போது, என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய கொள்ளேகால் பயணம் நினைவுக்கு வந்தது.
”வருசத்துல முப்பது நாள்
வீடு… வேலை… குடும்பம்…
எல்லாத்தையும் மறந்து தன்னந்தனியா பயணம் செய்” என ’வாழ்’ படம் சொன்னது. அப்படி செல்ல அப்போது அலுவலகத்தில் விடுமுறை கிடைக்கவில்லை. கிடைத்ததோ ஒரே ஒரு நாள் விடுமுறை. கூட இரண்டு நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஊட்டி, வால்பாறை மலைகளுக்குப் பதிலாக, வேறொரு மலையில் பயணிக்க முடிவெடுத்தோம். அதன்படி புது இடம், புது மேகம் தேடித் திம்பம் மலைகளில் பயணித்தோம்.
மச்சி ஒரு டிரிப் போலாமா?: தூவானம்... வனமே வானம்... 'சின்ன சிரபுஞ்சி' சின்னக்கல்லார் பயணம்!
குரங்கின் பாசப்போராட்டம்
கோவையின் அன்றைய விடியல் தாமதமாகவே துவங்கியது. சூரியன் மேலெழுந்து வர வர, எங்களது பயணம் சாலையில் வேகமெடுத்துக் கொண்டிருந்தது. பவானி சாகர் அணை சாலையில் சென்று கொண்டிருந்தோம். அதிவேகமாக கடந்து செல்லும் வாகனங்களை குரங்கு கூட்டம், இரண்டு கால்களில் நின்றபடி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அவற்றின் முகத்தில் பெரும் சோகம் கூடியிருந்தது. அதில் ஒரு பெரிய குரங்கு பரிதவிப்புடன் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. சாலையின் நடுவே ஒரு குட்டிக் குரங்கு சடலமாக கிடந்தது. சாலையில் விளையாடிக் கொண்டிருந்த அக்குரங்கு மீது, அதிவேகமாக சென்ற ஒரு வாகனம் மோதி உயிரிழந்து இருக்கும் போல. வாகனங்கள் எதுவும் வராததை உறுதி செய்த பெரிய குரங்கு, குட்டிக் குரங்கை எடுத்து தன் உடலோடு சேர்த்து அணைத்தபடி சாலையோரம் ஓடியது. அக்கணத்தில் அந்த பெரிய குரங்கு, உயிரிழந்த குட்டியின் தாய் குரங்கு என்பதை உணர முடிந்தது.
அதனை சுற்றி முப்பது, நாற்பது குரங்கள் கூடி அரணாய் நின்றன. தன் குட்டியை அணைத்தபடி வேறு யாரையும் நெருங்க விடாமல் வெகுநேரம் அப்படியே நின்றது. சாலையில் செல்லும் வாகனங்களை பார்க்கும் போது பெருங்கோபமும், துயரமும் அதன் முகத்தில் நிழலாடியது. சட்டென குட்டியை இறுக்கி அணைத்தபடி காட்டிற்குள் தாய் குரங்கு ஓட, மற்ற குரங்களும் அதனை பின் தொடர்ந்து ஓடின. வெகுநேரம் அவ்விடத்தை விட்டு அகல மனம் வரவில்லை.
அச்சோக உணர்வை இயற்கை மறக்கடித்தது. பண்ணாரி கடந்ததும் அழகும், ஆபத்தும் நிரம்பிய திம்பம் மலைப்பாதை வரவேற்றது. அடர்ந்து செழித்த காட்டின் ஊடாக வளைந்து நெளிந்து பாதை மலையேறியது. 27 கொண்டை ஊசி வளைவுகள் இயற்கை அழகானது மட்டுமல்ல, ஆபத்தானதும் என்பதை உணர்த்தும் வகையில் பயம் காட்டியது. சிறுத்தையும், யானையும் பாதையில் வரவில்லை என்றாலும், அவை வந்து சென்ற கதைகள் பாதையெங்கும் கூடவே வந்தது.
காட்டில் புலியை அவ்வளவு எளிதில் பார்த்து விட முடியாது. ஆனால் அன்றைய அந்தக் காட்டுப் பயணத்தில் அன்று பார்த்த மனிதர்கள் எல்லாம் புலிகளை பார்த்தவர்களாக இருந்தார்கள். இல்லையெனில் புலியை பற்றிய ஏதேனும் ஒரு கதையை சொல்பவர்களாக இருந்தார்கள். அதை திம்பம் டீக்கடை துவக்கி வைத்தது. “புலியை அங்கே பார்த்தார்கள், இங்கே பார்த்தார்கள், புலி அப்படி செய்தது, இப்படி சென்றது” என ஆள் ஆளுக்கு ஒரு கதையைச் சொல்லிக் கிலியூட்டினார்கள்.
கானுயிர் காட்சி
புலி பார்க்கும் முயற்சியில் இறங்கிய எங்களுக்கு, புலிப்படம் கண்ணில் பட்டது. கேர்மாளம் வனச்சரகம் சார்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற அறிவிப்பு பலகையில் மஞ்சள் நிற புலிப் படுத்திருந்தது. வலது புறச்சாலையில் கேர்மாளம் நோக்கிச் சென்றோம். இரண்டு புறமும் காடு அடர்ந்து செழித்திருந்தது. காட்டின் பேரமைதி அச்சமூட்டியது. பூச்சிகளின் ரீங்காரமும், பறவைகளின் சத்தமும் அவ்வப்போது வந்தன. வழியில் ஆங்காங்கே கூட்டுக் கூட்டாக யானைச் சாணங்கள். எங்களது வண்டியை தவிர வேறு எந்த வண்டியும் இல்லை. தொலைவில் எங்கோ யானையின் பிளிறல் சத்தம் கேட்டது. ஆர்வமும், பயமும் தொற்றிக் கொள்ள, கண்களோ யானையை தேடியது. மெல்ல எங்களது வண்டி ஊர்ந்து சென்றது. ஓரிடத்தில் காட்டிற்குள் சற்று தொலைவில் ஒற்றை காட்டு யானை மரக்கிளையை ’படக்’ என உடைப்பதை பார்த்தோம். ஆஜானுபாகுவான உடலெங்கும் செம்மண் பூசியபடி, மினுங்கும் தந்தங்களுடன் காட்சியளித்தது. தொடர்ந்து சென்ற பயணத்தில் காட்டு மாடும், மான்களும் கடந்து சென்றன.
திக்கற்ற பயணத்தில் திடீர் இலக்காக கொள்ளேகால் செல்வது என முடிவானது. தமிழ்நாடு எல்லையை கடந்து, கர்நாடகா எல்லைக்குள் சென்றோம். சாலையின் இருபுறமும் அடர்ந்திருந்த காடுகள், எல்லை தாண்டியதும் வயல்வெளிகளாகவும், சிற்றூர்களாகவும் விரிந்தன.
கொள்ளேகால் பிரிந்த கதை
கொள்ளேகால் கணிசமான அளவு தமிழர்கள் வசிக்கும் பகுதி. ஒரு காலத்தில் சென்னை மாகாணத்தின் கீழ் இருந்தது. அதைவிட கொள்ளேகால், கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்ற தகவல் ஆச்சரியத்தை தந்தது. மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, கர்நாடகா உடன் சேர்க்கப்பட்டது. தற்போது சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. கோவையில் இருந்து 170 கி.மீ. தொலைவில் நான்கரை மணி நேரப் பயணத்தில் கொள்ளேகால் அடையலாம்.
ஒடியரா பாளையா என்ற ஊர் வரவேற்றது. ஊருக்குள் செல்ல செல்ல காட்சிகள் மாறத் துவங்கின. பனி மூடிய மலைகள், வளமிக்க வேளாண் நிலங்கள், பசுமையும், அமைதியும் கூடியிருந்த சூழல். வழியெங்கும் திபெத்திய முகங்கள், திபெத் காலச்சார வீடுகள், புத்த விகாரங்கள் தென்பட்டன. பாதை மாறி திபெத்திற்கு சென்று விட்டோமா?. நிச்சயம் வாய்ப்பில்லை. திபெத் எங்கே? கர்நாடகா எங்கே? என ஒரு நிமிடம் சந்தேகமே வந்து விட்டது. கர்நாடகா சாயல் துளியும் இன்றி, திபெத்திய சாயல் ஒளிர்ந்தது. அதன் பின்னர் விசாரித்த போது, அது ”தோண்டெலிங்” என்ற திபெத்திய அகதிகள் முகாம் என்பது தெரியவந்தது. திபெத்திய அகதிகள் இயல்பாகவும், சுதந்திரமாகவும் நடமாடிக் கொண்டிருந்தனர். அந்த இடங்களில் திபெத்தியர்கள் தான் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தனர். இவ்வளவு அழகாக அகதிகள் முகாம் இருக்குமா?. ஈழ அகதிகள் முகாம்கள் ஒரு நிமிடம் கண் முன்னே வந்து சென்றது. மலைக்கும், மடுவிற்குமான வித்தியாசம் இந்த இரண்டு முகாம்களுக்குமான வித்தியாசம். அங்கு விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களின் கால்களில் உதைபடும் கால்பந்து போல, இரண்டு இடங்களுக்கும் இடையே மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. எல்லாம் அரசியல்.
மேலும் படிக்க : ’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2: இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்
புத்தம் சரணம் கச்சாமி
திபெத்திய கட்டுமானத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட புத்த விகாரம் அமைக்கப்பட்டு இருந்தது. புத்த விகாரத்தின் உள்ளே அமர்ந்த நிலையில் கண்கள் மூடிய அழகான புத்தர் சிலை. அலங்காரமும், கலை நயமும் திபெத் கலாச்சாரத்தை சார்ந்தவையாக இருந்தன. புத்தர் மீது வெண்ணிற ஓளி படர்ந்திருந்தது. அவ்விடம் முழுவதும் அமைதி உலாவிக் கொண்டிருந்தது. மனம் அந்த அழகிலும், அமைதியிலும் உறைந்து போனது.
“புத்தம் சரணம் கச்சாமி” என மொட்டை தலையுடன் சிவப்பு துணிகளால் உடலை சுற்றி இருந்த புத்த துறவிகள் ஆங்காங்கே நடமாடிக் கொண்டிருந்தனர். ஓரிடத்தில் மரங்களுக்கு இடையே, ஆயிரக்கணக்கான வெள்ளை, சிவப்பு, நீலம், மஞ்சள் வண்ண துணிகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. எதிரே வந்த புத்த துறவியிடம் ’எதற்காக இது காட்டப்படுகிறது?’ எனக் கேட்டேன்.
“போர்கள் இன்றி, அமைதி நிலவ வேண்டி” என மலர்ந்த முகத்துடன் சொல்லியபடி கடந்து சென்றார். அத்தகைய உலகத்தின் கற்பனை, பவானிசாகர் அணை மீனைக் காட்டிலும் சுவையானதாக இருந்தது.
(பயணங்கள் முடிவதில்லை)
'மச்சி ஒரு டிரிப் போலமா?' ( பகுதி - 6) - ஆலப்புழாவில், மிதக்கும் படகு வீட்டு பயணம்..!