காவல்கோட்டம் நாவலில் தண்ணீரில் நீந்தி வரும் நாய்களின் பெயர் தெரியுமா உங்களுக்கு ?
எழுத்தாளர் வேல. ராமமூர்த்தியின் மிக அற்புதமான சிறுகதையான “இருளப்ப சாமியும் இருபத்தியொரு கிடாயும்” கதையில் களவுக்குச் செல்பவர்களை கிடைக்காவலுக்கு இருந்த நாய்கள் விரட்டுவது போல ஒரு காட்சி வரும். ரெட்டிமார்கள் பெருத்த அவ்வூரில் வீட்டுக்கு வீடு ஆட்டுப்பட்டி, பட்டிக்கு பட்டி காவல் நாய்கள் என்று விவரித்த வேல ராமமூர்த்தி, அந்த நாய்களை “இராஜபாளையத்து கோம்பை நாய்கள்” என்றே குறிப்பிடுகிறார். உண்மையில் அப்படி ஒரு இனம் கிடையாது. திருத்தமாகச் சொல்லவேண்டும் என்றால் இராஜபாளையம் வேறு இனம் கோம்பை முற்றிலுமாக வேறு ஒரு இனம்.
வேட்டைத்துணைவன் 5
கன்னி, சிப்பிப்பாறை, இராஜபாளையம், கோம்பை போன்ற தமிழகத்தின் பிரத்தியோகமான நாயினங்கள் பற்றிய அறிமுகம் பெயரளவுக்காவது பலருக்குத் தெரிந்திருக்கக்கூடும். இவற்றுக்குள்ளுள்ள வேறுபாடுகளை உணர்ந்து சரியான முறையில், சரியான பெயர் பிரயோகத்துடன்தான் எல்லா இடங்களிலும் வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்றால் சந்தேகமே! இன்றைய சூழலில் இணையம் ஒரு அளவுக்காவது பெயர்களைத் திருத்தமாக சொல்ல மக்களை பழக்கியுள்ளது என்றாலும் மரபான சில குழப்பங்கள் மக்கள் மனதில் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. ஆய்வேடுகள் அல்லாத சில புனைவுகளை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
எழுத்தாளர் வேல. ராமமூர்த்தியின் மிக அற்புதமான சிறுகதையான “இருளப்ப சாமியும் இருபத்தியொரு கிடாயும்” கதையில் களவுக்குச் செல்பவர்களை கிடைக்காவலுக்கு இருந்த நாய்கள் விரட்டுவது போல ஒரு காட்சி வரும். ரெட்டிமார்கள் பெருத்த அவ்வூரில் வீட்டுக்கு வீடு ஆட்டுப்பட்டி, பட்டிக்கு பட்டி காவல் நாய்கள் என்று விவரித்த வேல ராமமூர்த்தி, அந்த நாய்களை “இராஜபாளையத்து கோம்பை நாய்கள்” என்றே குறிப்பிடுகிறார். பெருங்கதையாடல் – கதை கூறல் என்று தொடர் முன்னெடுப்புகளை எடுக்கும் எழுத்தாளர் பவா. செல்லத்துரை இக்கதையை சொல்லும் போது அதே வார்த்தையைத் தான் பயன்படுத்தினார். உண்மையில் அப்படி ஒரு இனம் கிடையாது. திருத்தமாகச் சொல்லவேண்டும் என்றால் இராஜபாளையம் வேறு இனம் கோம்பை முற்றிலுமாக வேறு ஒரு இனம்.
“பத்திருபது நாய்கள் மணல் வெளியில் தென்கரையை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்க, ஐம்பதுக்கும் மேல் நாய்கள் நீரில் நீந்திச் சென்றன. பார்த்துக் கொண்டிருக்கும்போதே வடகரையில் இருந்து நாய்கள் அலையலையாக பாய்ந்து வந்து நீந்திக் கடந்து மதுரைக்குச் சென்றன. கூர்நாசி காற்றைக் கிழிக்க, சாட்டை போன்ற உடல் வளைந்து நீள, நீண்ட கால்கள் தரையில் பட்டும் படாமல் அலைபாய்ந்து சென்றன. இப்பகுதியிலேயே இல்லாத வேறுவகை நாய்கள். “ – எழுத்தாளர் சு. வெங்கடேசன் தனது காவல் கோட்டம் நாவலில் குமார கம்பனன் மதுரை மாநகரில் தன் படையுடனும், நாய்களுடனும் நுழையும் காட்சியை இப்படி விவரித்திருப்பார். பறந்த பரப்பு கொண்ட அந்த நாவல் குறித்து நீண்டதொரு கட்டுரையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி இருந்தார். அக்கட்டுரையில் கூட மேல குறிப்பிட்ட வரியை சுட்டிக்காட்டி “இராஜபாளைய நாய்கள் எப்புடி ஓடும் என்ற கட்சி நுட்பம்” என மெச்சி இருப்பார். உண்மையில் சு. வெங்கடேசன் குடுத்த சித்திரமானது சிப்பிப்பாறை / கன்னி வேட்டை நாய்களின் உடல் கூரையை உணர்த்துகிறது. இராஜபாளைய நாய்களை அல்ல.
எழுத்தாளர் சு. வெங்கடேசனுமே கூட இவை இராஜபாளை நாய் என்று எண்ணியே எழுதி இருக்கக்கூடும். காரணம், நாயக்கர்கள் படையில் இராஜபாளையம் நாய்களும் உண்டு என்ற கதையே இங்கு பிரபலம் ( பார்ப்போம் பின்னர் விரிவாக). எழுத்தாளர் எஸ். செந்தில்குமாரின் சிறுகதையான “வெள்ளாட்டு குட்டி” கதையில், “பேட்டைக்கு முன்பாக கோம்பை நாயொன்று நின்றிருந்தது. உருவிப் போட்ட கோமணத்துணி மாதிரி அதன் மூக்கு நீண்டிந்ததைப் பார்க்க அவருக்கு பிடிக்கவில்லை” என எழுதி இருப்பார். உண்மையில் இந்த உவமைக்குப் பொருந்தி வருவது கூர்முக அமைப்பு கொண்ட கன்னி / சிப்பிப்பாறை நாய்கள் தானே தவிர கோம்பை நாய் அல்ல.
வாஸ்தவத்தில் புனைவெழுத்தாளர்கள் யாரும் ஆய்வாளர்கள் அல்ல உள்ளபடியே இது பிழை சுட்டிக்காட்டும் கட்டுரையும் அல்ல. அவர்கள் சொன்னதெல்லாமும் ஒரு வகையில் நடப்புதான். குறிப்பிட்ட சில மக்களைத் தவிர்த்து நாய் இனங்களுடன் அதிகம் பரிச்சியம் இல்லாத மக்களுக்கு இருக்கும் சிக்கல்களில் ஒன்றைத்தான் நாம் மேல குறிப்பிட்ட புனைவுகளில் பார்க்க முடிகிறது. ஒரு வளர்ந்த நாயை பிடித்தபடி வீதியில் நீங்கள் நடந்து பாருங்கள் உங்களை நாயின் பொருட்டு அணுகும் நபர் ஒருவராவது “இது ராஜபாளையம் நாயா “ என்ற கேள்வியை கேட்டே தீருவார். காரணம் நாய்களின் வகை / வர்கம் எல்லாமும் தாண்டி இங்கு பெயர்கள் மட்டுமே பிரபமாகியிருக்கிறது. தமிழக நாயினங்கள் எல்லாம் வெறும் மூன்று மாவட்டங்களுக்குள்ளேயே ஒடுங்கக்கூடியவை. பிறர் இந்நாய்கள் குறித்து அறிந்ததெல்லாம் வெறும் சொற்களின் வழியாகத்தான். சமீப காலங்களுக்கு முன்பு வரை கூட இந்நாய்களில் அசலைப் பார்த்தவர்கள் வெகு சொற்பம். அச்சு இதழில் இவை குறித்து செய்தி வருவதே அரிது. அப்படி வந்த வற்றிலும் தகுந்த படங்கள் இடம் பெறத் துவங்கியது 2000 க்கு பின்புதான்.
ஆனாலும் இவற்றின் பெயரும், குணமும் மக்கள் மனதின் அடியாழத்தில் பதிந்து இருக்கிறது. கோவக்கார சிடுமூஞ்சிகளை “அவன் இராஜபாளையம் நாய் மாதிரில்ல வருவான்” என்று சொல்லும் வழக்கம் இங்கு உண்டு. எழுத்தாளர் பா. சிங்காரம் தனது நாவலில் “அவன் கோம்ப நாய் மாதிரி வருவான்” என்று எழுதி இருப்பார். கோம்பை நாய்தான் அவர் வட்டாரத்தில் கோவக் குறியான நாய் என்பாற்தகாக! வேல. ராமமூர்த்தி சொன்ன “ராஜபாளையத்துக்கு கோம்ப” இப்போது உங்களுக்கு பிடிபட்டிருக்கும். பெயரின் தாக்கத்தால் இன்னுமும் அப்படியே சொல்லும் மக்கள் உண்டு.
இவ்வளவு பிரபலமான இப்பெயர்கள் முதலில் பேச்சில் அறிமுகமாகி பின்புதான் எழுத்தில் வந்திருக்க வேண்டும். பேச்சில் யார் முதலில் என்பதை கண்டறிவது இயலாத காரியம். ஆனால் எழுத்தில் யார் என்பதை அறிய கூடுமான வரைக்கும் முயற்சி செய்யலாம்.
1938 ஆமாண்டு “கலைமகள்” இதழில் வெளியான மா. கிருஷ்ணனின் சிறுகட்டுரைக்குப் பெயர் “உள்ளூர் நாய்கள்”. தனது அயலவரான சோணாச்சல செட்டியாரிடம் தான் தென்னிந்திய நாய் இனங்கள் குறித்து கேட்டறிந்தது குறித்தானா சிறுகட்டுரை அது. அதில் தான் முதல் முதலாக இராஜபாளையம் நாய், சிப்பிப்பாறை நாய், கோம்பை நாய் என்ற பெயர்கள் அச்சுக்கு வருகிறது. நினைவில் கொள்க ! அதற்கு முன்பாகவே இவை பழக்கத்தில் இருந்த சொல்தான். பின்னர் 1954 ஆம் ஆண்டு “விஞ்ஞானி” இதழில் மா. கிருஷ்ணன் “இராஜபாளையம் நாய்” என்ற தலைப்பிளான கட்டுரை ஒன்றை எழுதி. கூடவே மிக நேர்த்தியான இராஜபாளையம் நாய் ஓவியம் ஒன்றையும் வரைந்து இணைத்தார். தமிழில் இராஜபாளையம் நாய்கள் குறித்து எழுதப்பட்ட முதல் கட்டுரை அதுவே. மேலும் அதன் பின்னான ஐம்பது ஆண்டுகளில் வெளியான கட்டுரைகளில் காணப்படும் பொதுத்தன்மைக்கு காரணமான சரக்கை கொண்டிருந்த கட்டுரையும் அதுவே.
1963 ல் தான் மஹாராஷ்டிராவை சேர்ந்த W. V. Soman என்பவர் எழுதிய “The indian dogs” புத்தகக்த்தில் சிப்பிப்பாறை – கோம்பை நாய்கள் குறித்த முதல் கட்டுரை ஆங்கிலத்தில் வந்தது. இதிலும் “கன்னி நாய்” என்ற வார்த்தை இல்லை. எண்பதுகளில் எழுத்தாளர் கி. ரா எழுதி வெளியான “கரிசல்காட்டு கடுதாசி” தொடரில் “நாய்கள்” என்ற தலைப்பிலான கட்டுரையின் ஒரு பகுதியில் தான் “கன்னி என்று ஒரு ஜாதி” என்ற வரியை பார்க்க முடிகிறது. கரிசல் காட்டில் உள்ள கன்னி நாய் பற்றியும் அதை வளர்த்த ஒருவர் பற்றிய சிறுகுறிப்பும் இடம் பெரும் கட்டுரை அது. அதற்கு ஓவியர் ஆதிமூலம் வரைந்த பொருத்தமான கோட்டோவியம் கூடுதல் நேர்த்தியை சேர்க்கிறது.
கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் “India’s Canine Heritage” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை காட்டுயிர் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன் எழுதினார். அக்கட்டுரையில்தான், முதல் முதலாக கன்னி நாய் திருமணத்தின் போது பெண்ணுக்கு சீதனமாக வழங்கப்பட்டது என்ற தகவல் பதிவானதாகத் தோன்றுகிறது. இத்தகவல் உண்மையானதுதானா? என்பதோடு இதுவரையில் சொன்ன கட்டுரைகளில் இடம் பெற்ற தகவல் என்னென்ன என்பதையும், அதில் உண்மை எந்த அளவுக்கு உள்ளது என்பதையும் இன வாரியான கட்டுரைகள் வரும் போது முறையே அலசுவோம். கூடவே கன்னி – சிப்பிப்பாறை ரெண்டும் ஒன்றா இல்லை வெவ்வேறு இனமா? என்ற கேள்விக்கான பதிலையும் – எனக்கு விடை தெரியுமே என்பவர்களுக்கு வேறு ஒரு வாசலைத் திறந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்திலான பார்வையை வழங்கும் தரவுகளையும் வரும் கட்டுரைகளில் பார்க்கவிருக்கிறோம்.
முன்னதாக, ஒன்றை யோசித்துப் பாருங்கள் 1938 க்கு முன்பு இந்நாய்கள் குறித்தான தகவல்கள் எங்குமே இல்லையா? ஒருவர் கூடவா பதிவு செய்யவில்லையா ? என்றால் பதிவுகள் உண்டு. ஒன்றல்ல ரெண்டல்ல.. ஒன்றை ஒன்று முரண்படும் வகையிலும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகும் வகையிலும் ஏராளமாகவே உண்டு. திரண்டு கிடக்கும் அந்தத்தகவலை நாம் அறிவேணுமெனில் இன்று நாம், நம்முடைய இனங்களுக்கு வழங்கும் பெயர்களில் அன்று தகவல்கள் பதிவாகவில்லை என்பதை தெரிந்திருக்க வேண்டும். அப்படியானால் அதற்கும் முன்பு உள்ள பெயர் என்ன? யார் வைத்த பெயர் அது ? அது சொல்வது என்ன? பேசுவோம்.