Covid JN.1 Variant: சரசரவென உயரும் கொரோனா தொற்று.. இந்தியாவில் 4054 பேருக்கு சிகிச்சை.. தமிழ்நாட்டில் என்ன நிலை?
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,054 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று 2020 ஆம் அண்டு முதல் பரவத் தொடங்கியது. சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியும் தொற்று பாதிப்பு முழுமையாக ஒழிந்த வண்ணம் இல்லை. கொரோனா பாதிப்பு மூலம் ஏராளமான மக்கள் சிக்கித் தவித்தனர். குறிப்பாக முதல் அலையில் போது சுமார் ஒரு ஆண்டு காலம் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இதற்கு ஏற்றவாறு உலகம் முழுவதும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டது. 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவல் சற்று குறைவாக காணப்பட்டாலும் ஆண்டின் கடைசி பாதியில் மீண்டும் உச்சமடைய தொடங்கியது. 2 ஆம் அலையின் போது பலருக்கும் சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டது. மருத்துவமனைகளில் போதிய ஆக்ஸிஜன் வசதி இல்லாமல் இருந்தது. முதல் அலை ஒப்பிடும் போது இரண்டாம் அலையில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்தியா முழுவதும் தினசரி தொற்று பாதிப்பு 4 லட்சத்தை கடந்து பதிவானது.
கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு மிகவும் குறைவாக பதிவான நிலையில் தற்போது இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு சரசரவென உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 628 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தினத்தை ஒப்பிடும் போது சற்று அதிகமாகும். இந்தியாவில் மொத்தமாக 4,054 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கேரளாவில் 3128 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிக்ச்சை பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து கர்நாடகாவில் 344 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் 29 போருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 20 பேர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 132 ஆக உள்ளது. அதிகபட்ச பாதிப்பு சென்னையில் 66 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய தினம் சென்னையில் மட்டும் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த புதிய வகை கொரோனாவான JN.1 வகை தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் சனிக்கிழமை வரையில் 22 பேருக்கு புதிய வேர்யண்ட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த 79 வயதான நபர் தான், இந்தியாவில் முதல் நபராக இந்த வேரியண்ட்டால் பாதிக்கப்பட்டார். அதையடுத்து தற்போது கோவாவைச் சேர்ந்த 19 பேர் இந்த வேரியண்ட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. கூட்டம் மிகுந்த பகுதிகளில் தனிமனித இடைவெளியை பின்பற்றவும், மாஸ்க் அணிந்து பொது இடங்களுக்கு செல்வதன் மூலம் தொற்று பாதிப்பை பொதுமக்கள் தவிர்க்கலாம். முன்னதாக, கொரோனா தொற்றின் புதிய வேரியண்ட்டான ஜேஎன்.1 கவனிக்கப்பட வேண்டியது எனவும், அதேநேரம் இதனால் ஏற்படும் ஆபத்து என்பது குறைவானது எனவே உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )