நடிகர்கள் உதயா - அஜ்மல் - யோகி பாபு நடித்துள்ள 'அக்யூஸ்ட்' படத்தின் பிரஸ் மீட்
நடிகர்கள் உதயா - அஜ்மல் - யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நடிகர் உதயா நடிக்கும் 'அக்யூஸ்ட்'
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் - சச்சின் சினிமாஸ்- ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் உதயா - 'தயா' என். பன்னீர்செல்வம் - எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் பேசுகையில்
''இப்படத்தின் பணிகளை இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதியன்று தொடங்கி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறோம். ஒரு படத்தை இவ்வளவு விரைவாக நிறைவு செய்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக முழு ஒத்துழைப்பினை வழங்கிய நடிகர் உதயாவிற்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் கதையை இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், உதயா மூலமாக எங்களை சந்தித்து சொன்னார். அவர் சொன்ன கதை பிடித்துப் போனதால், அடுத்த நாளே படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கினோம். உதயாவை தொடர்ந்து கதையில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் அஜ்மல் மற்றும் யோகி பாபு ஒப்பந்தமானார்கள். இவர்களைத் தொடர்ந்து நாயகி ஜான்விகா, பவன், பிரபாகர், பெங்களூரூ டானி, சுபத்ரா என அந்தந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்களை இயக்குநரும் உதயாவும் தேர்வு செய்தனர்.
குறிப்பாக யோகி பாபு தலைவர் ரஜினி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது உதயாவிற்காக பதினான்கு நாட்களை ஒதுக்கி முழு ஒத்துழைப்பை வழங்கினார்.
ஒளிப்பதிவாளர் மருதநாயகம், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, எடிட்டர் ஷ்யாம் என திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கினார்கள். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் உதயாவின் கடும் உழைப்பை இந்த படத்தில் நாங்கள் நேரில் பார்த்திருக்கிறோம். அவருடைய கடும் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என ரசிகர்களிடமும், ஊடகங்களிடமும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
படத்தொகுப்பாளர் ஷ்யாம் பேசுகையில்
''எடிட்டர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு திரில்லர் ஜானர் ஆக்ஷன் ஜானர் படங்களுக்கு படத்தொகுப்பு செய்ய வேண்டும் என்பது கூடுதல் உற்சாகத்தை அளிக்க கூடியது. அந்த வகையில் அக்யூஸ்ட் திரைப்படத்தின் திரைக்கதை படத்தொகுப்பின் போது உற்சாகத்தை அளித்தது. இந்த திரைப்படம் சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் உதயாவும், இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸும் ஒன்றிணைந்து பணியற்றிருக்கிறார்கள். நாங்கள் இந்தப் படத்தின் திரைக்கதையின் வேகத்தை குறைப்பதற்காக சில உத்திகளை கையாண்டிருக்கிறோம். ஏனெனில் இந்தப் படத்தின் திரைக்கதை மிக வேகமாக இருக்கும். இது போன்றதொரு படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை செய்வதற்கு வாய்ப்பளித்த எடிட்டர் பிரவீண் சாருக்கும், உதயா சாருக்கும், இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் சாருக்கும் நன்றி. இப்படத்தின் இசையும் மிகப் பிரமாதமாக இருக்கிறது. இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவரும் வகையிலான டீசன்டான சீட் எட்ஜ் திரில்லர் படம். அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
நடிகர் டானி பேசுகையில்
''ஓ மரியா பாடலில் நடிகை ரம்பாவுடன் நடனமாடிய பாடல் 1999ம் ஆண்டில் வெளியானது. அதன் பிறகு மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறேன். இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் சினிமா வேண்டாம் என்று அமெரிக்காவிற்கு சென்றார். அவரிடம் கேட்டபோது சின்ன பிரேக் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார். ஆனால் நான் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டேன். அதன் பிறகு அவர் எனக்கு போன் செய்து உதயா நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்பு வந்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்தத் தருணத்தில் விஜய் டிவியில் 'ஓ மரியா..' பாடலை ரீ கிரியேட் செய்தனர். அதற்காக பெங்களூரில் இருந்து சென்னை வந்து நடனம் ஆடினேன். அந்தத் தருணத்தில் இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸிடமிருந்து அழைப்பு வந்தது. நான் நேராக இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அங்கு எனக்கு உதவி காவல் ஆய்வாளர் வேடத்தில் நடிக்க வேண்டும் என சொன்னார்.
ஒவ்வொரு கலைஞனுக்கும் விமான நிலையத்தில், பொதுவெளியில், வணிக வளாகத்தில் ரசிகர்கள் சந்தித்து, 'உங்கள் படத்தை நான் பார்த்திருக்கிறேன்' என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், அது அந்த கலைஞனுக்கு மிகப்பெரிய போதையை தரும். ஆனால் என்னை யாரும் அங்கீகரிக்கவில்லை, அடையாளப்படுத்தவில்லை. அதற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். இந்த தருணத்தில் உதவி காவல் ஆய்வாளர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றால் தலை முடியை கட் செய்ய வேண்டும் என்று சொன்னார். நான் யோசித்தேன்.
'மின்னலே' படத்தில் நாகேஷ் உடன் நடித்தேன். 'காதலர் தினம்' படத்தில் கவுண்டமணியுடன் நடித்திருக்கிறேன். 'கவிதை' படத்தில் வடிவேலுவுடன் நடித்தேன். பல காமெடி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். அந்த வகையில் யோகி பாபு உடன் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காகவும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். யோகி பாபு உடன் மட்டுமல்லாமல் அஜ்மல் - உதயா என அனைவரிடமும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதால் இந்தப் படத்தில் நடித்தால் மீண்டும் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடிக்க ஒப்புக்கொண்டேன். தலைமுடியை கட் செய்யவும் சம்மதித்தேன். இந்தப் படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகஸ்ட் முதல் தேதியன்று இப்படம் வெளியாகிறது. இது எங்களுக்கு முக்கியமான நாள். படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். நன்றி,'' என்றார்.





















