HAPPY BIRTHDAY VETRIMAARAN : தொடர்ந்து முயற்சித்தும், தொடங்காத "வெற்றிமாறன் - பார்த்திபன்" கூட்டணி
வெற்றிமாறன் இயக்கிய படங்களில் பல முறை நடிப்பதற்கு நடிகர் பார்த்திபன் சம்மதித்தும் பல்வேறு காரணங்களால், பார்த்திபன்- வெற்றிமாறன் கூட்டணி இணைய முடியாமலே உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். தற்போது சூர்யாவின் வாடிவாசல் மற்றும் சூரியின் விடுதலை ஆகிய படங்களை இயக்கி வருகிறார். அதேபோல, வெற்றிமாறன் இயக்கிய படங்களில் பல முறை நடிப்பதற்கு நடிகர் பார்த்திபனிடம் முயற்சிக்கப்பட்டுள்ளது. பார்த்திபன் சம்மதித்தும் பல்வேறு காரணங்களால் பார்த்திபனால் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க முடியாமலே இருந்து வருகிறது.
இயக்குனர் வெற்றிமாறனின் இரண்டாவது படமான தனுஷின் ஆடுகளம் மாபெரும் வெற்றி பெற்ற படம். அந்த படத்தில் வரும் பேட்டைக்காரன் கதாபாத்திரம் மிகவும் வலுவான கதாபாத்திரமாக அந்த படத்தில் காட்டப்பட்டிருக்கும். அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதன்முதலில் நடிகர் பார்த்திபனைத்தான் வெற்றிமாறன் தேர்வு செய்துள்ளார். ஆனால், அவர் அப்போது செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். இதனால், பார்த்திபனை தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதற்கான வெற்றிமாறனின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஆடுகளம் படம் நிறைவடைந்த பிறகு இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய அடுத்த படத்தை நடிகர் பார்த்திபனை வைத்து இயக்கவே திட்டமிட்டார். அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு விட்டது. ஆனால், ஆடுகளம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இதனால், வெற்றிமாறன் அந்த விழாக்களில் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், வெற்றிமாறன் மற்றும் பார்த்திபன் கூட்டணி கைவிடப்பட்டது.
அதேபோல, தனுஷை வைத்து இயக்குனர் வெற்றிமாறன் சூதாடி என்ற திரைப்படத்தை தொடங்கினார். வடசென்னையில் எப்படி அமீரின் “ராஜன்” கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோல சூதாடி படத்தில் தனுஷிற்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பார்த்திபனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.
ஆனால், அந்த சமயத்தில் நடிகர் தனுஷிற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் இணைந்து ஷமிதாப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனுசும் அந்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இதனால், இந்த முறையும் பார்த்திபனுடனான கூட்டணி கைவிடப்பட்டது. இந்த இடைவெளியில் தொடங்கப்பட்ட திரைப்படம்தான் தேசிய விருது பெற்ற விசாரணை.
நடிகர் பார்த்திபன் பல்வேறு படங்களிலும் தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பல்வேறு இயக்குனர்கள் தற்போது தங்களது படங்களின் வில்லன் கதாபாத்திரம் அல்லது முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு நடிகர் பார்த்திபனைத்தான் முதல் நபராக தேர்வு செய்து வருகின்றனர். மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கூட முதன்முதலில் நடிகர் பார்த்திபனைத்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
HBD Vetrimaaran: வெற்றிகளும், வெற்றிமாறனும்.. பலரும்- அறியாத வெற்றிமாறனின் "பிளாஷ்பேக்"