HBD Vetrimaaran: வெற்றிகளும், வெற்றிமாறனும்.. பலரும்- அறியாத வெற்றிமாறனின் "பிளாஷ்பேக்"
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். வெற்றிமாறனுக்கு இன்று 46-வது பிறந்தநாள். வெற்றிமாறனைப் பற்றி பலரும் அறியாத தகவல்களை கீழே காணலாம்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய 5 படங்களை மட்டுமே அவர் இயக்கியிருந்தாலும், அவரது அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றவை. அவருக்கென்று தமிழ்நாட்டில் தனி ரசிகர்கள் பட்டாளமும் உண்டு.
சென்னை வந்தது ஏன் தெரியுமா?
திரைத்துறையில் வெற்றி பெற்ற பலரும் கிராமங்களில் இருந்து புறப்படும்போதே, திரைத்துறை கனவுடன்தான் சென்னைக்கு வருவார்கள். ஆனால், வெற்றிமாறன் சென்னைக்கு வந்தது சினிமா கனவுடன் அல்ல. கிரிக்கெட் கனவுடன். 10-ஆம் வகுப்பு வரை வேலூரிலும், ராணிப்பேட்டையிலும் படித்த வெற்றிமாறன் கிரிக்கெட் மீதான ஆர்வத்தில்தான் சென்னை ஒய்.எம்.சி.ஏ. பள்ளியில் சேர்ந்தார். ஆனால், அந்த பள்ளியில் கிரிக்டெ் இல்லை என்பது இயக்குநருக்கே மிகப்பெரிய டுவிஸ்டாக அமைந்தது.
செயின் ஸ்மோக்கர்:
இயக்குனர் வெற்றிமாறன் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தவர். செயின்ஸ்மோக்கர் என்று கூறும் அளவிற்கு தினசரி ஏராளமான சிகரெட்களை புகைத்துக்கொண்டே இருப்பார். ஒரு நல்ல இயக்குனருக்கு ஆரோக்கியம்தான் முக்கியம் என்று இயக்குநர் மேதை சத்யஜித்ரே சொன்னதை அறிந்ததையடுத்து, புகைப்பிடிக்கும் பழக்கத்தை மிகவும் சிரமப்பட்டு கைவிட்டார்.
செல்ப் டிரைவிங் :
இயக்குனர் வெற்றிமாறனுக்கு எங்கே சென்றாலும் தனது வாகனத்தை தானே ஓட்டிச்செல்வதற்குத்தான் பிடிக்கும். இதனால், எங்கு சென்றாலும் தனது வாகனத்தை தானே ஓட்டிச்செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். தனது அலுவலகத்தின் பால்கனியில்தான் பெரும்பாலான நேரத்தை வெற்றிமாறன் கழிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
கோபக்கார வெற்றி :
பெரும்பாலும் திரையுலகங்களில் இயக்குநர்களாக இருப்பவர்கள் படப்பிடிப்பு தளங்களிலும், வெளிப்புறங்களிலும் மிகவும் கோபக்காரர்களாகவே இருப்பார்கள். வெற்றிமாறனும் அதற்கு விதிவிலக்கு அல்ல. வெற்றிமாறன் சிறு வயது முதலே மிகவும் கோபக்காரராக இருந்தவர். பின்னர், வயதும், பக்குவமும், அனுபவமும் அவரது கோபத்தை பெரியளவில் குறைத்துள்ளது.
வெற்றியின் குட்டி ஐடியா:
காதல் வைரஸ் என்ற திரைப்படத்தில் இயக்குனர் கதிரிடம் வெற்றி மாறன் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தார். அப்போது, அந்த படத்தில் கதாநாயகன் ரிச்சர்ட் கையில் இருக்கும் சிகரெட் எரிந்து தீர வேண்டும். ஆனால், சாம்பல் கீழே விழக்கூடாது என்பது போல காட்சியாக்கப்பட வேண்டும். இதை எப்படி எடுப்பது என்று அனைவரும் தெரியாமல் விழித்தபோது, சிகரெட்டுக்குள் ஒரு கம்பியை சொருகிவிட்டு பிடித்தால், சாம்பல் விழாது என்று வெற்றிமாறன் ஐடியா கூறியுள்ளார். ஒரு ஆங்கில நாவலில் படித்த விஷயம்தான் இது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொல்லாதவன் பல்சர் போராட்டம்:
வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவன் படத்தின் தனுஷிற்கு இணையான முக்கியத்துவம் கொண்டது அந்த பல்சர் பைக். ஆனால், இந்த படத்திற்கு பல்சர் பைக்தான் வேண்டுமென்று வெற்றிமாறன் கேட்டபோது, தயாரிப்பாளர் தரப்பினர் அதை மறுத்துவிட்டார். அவர் வேறு ஒரு பைக் வாங்கித் தருவதாக கூறினார். ஆனால், பல்சர் பைக்தான் வேண்டுமென்று அடம்பிடித்த வெற்றிமாறன், இறுதியில் தனது மனைவி ஆர்த்தியிடம் லோன் போடச்சொல்லி, புது பல்சர் பைக்கை வாங்கி படப்பிடிப்பிற்கு கொண்டு சென்றார். பொல்லாதவன் படத்தின் வெற்றியில் பல்சர் பைக்கிற்கும் பங்குண்டு என்று வெற்றிமாறனே கூறியுள்ளார்.
பாலுமகேந்திராவுடனான மனஸ்தாபத்தை தீர்த்த ஆர்.எக்ஸ். 100 :
வெற்றிமாறன் எப்போதும் தனது குருநாதர் பாலுமகேந்திரா மீது மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்திருப்பவர். ஒருமுறை அவருக்கும், பாலுமகேந்திராவிற்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அப்போது அவரது மனைவி ஆர்த்தி வெற்றி மாறனை காதலித்துக்கொண்டிருந்த தருணம் அது. ஆர்த்தி வெற்றிமாறனுக்காக ஆர்.எக்ஸ்.100 பைக் ஒன்றை காதல் பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். அந்த பைக்கை வாங்கிய வெற்றி மாறன் நேரடியாக பாலுமகேந்திராவிடம் சென்று அந்த பைக்கை காட்டி ஆசிர்வாதம் பெற்றார்.
வெற்றியின் ஆபத்தான “அழகி” :
வெற்றிமாறனுக்கு நாய்கள் மீது அதீத பிரியம் உண்டு. ராட்வெய்லர் நாய்கள் என்றால் எல்லையில்லாத அளவிற்கு மிகுந்த பிரியம் கொண்டவர். அவரது திருமணமான அன்று ராட்வெயிலர் நாய் ஒன்றை வெற்றிமாறன் வாங்கியுள்ளார். அந்த நாயின் பெயர் அழகி. ராட்வெய்லர் நாய்கள் பிட்புல் நாய்களைப் போன்றே சற்றே முகத்தோற்றத்தை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
உழைப்புக்குரியவருக்கு பாராட்டு:
இயக்குநர் வெற்றிமாறனின் மிகப்பெரிய பண்பு அனைவரும் பாராட்டுவது, அவரவர் உழைப்புக்குரிய பாராட்டு அவரவரிடம் சென்று சேர வேண்டும் என்பதே ஆகும். அது சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிய விஷயமாக இருந்தாலும் அந்த விஷயத்தை அவர் சொல்லிதான் செய்தோம், அவர்தான் அந்த பாராட்டுக்கு உரியவர் என்று வெளிப்படையாக குறிப்பிடும் குணத்தை கொண்டவர்.