ரஜினி நினைத்தால் லைகாவை காப்பாற்றலாம்..ஆனால் செய்யமாட்டார்..திருப்பூர் சுப்ரமணியம் குற்றச்சாட்டு
3000 கோடி முதலீட்டுடன் லைகா ப்ரோடக்ஷன்ஸ் இன்று பெரிய நஷ்டத்தில் இருப்பதற்கு சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்து கொடுக்காததே காரணம் என திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்

லைகா ப்ரோடக்ஷன்ஸ்
விஜய் நடித்த கத்தி படத்தின் மூலமாக தமிழ் திரைத்துறையில் தயாரிப்பு நிறுனமாக களமிறங்கினார் லைகா ப்ரோடக்ஷன்ஸின் சுபாஸ்கரன். தொடர்ந்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு , யமன் , இப்படை வெல்லும் . கோலமாவு , கோகிலா , செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களை தயாரித்தது. லைகா ப்ரோடக்ஷன்ஸூக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0. இப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்மையான தயாரிப்பு நிறுவனமாக நிலை நிறுத்திக் கொண்டது லைகா.
தொடர் தோல்விகளால் நெருக்கடி
2.0 படத்திற்கு பின் அடுத்த பெரிய பட்ஜெட்டில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பாகங்களை தயாரித்தது. கடந்த ஆண்டு லைகா தயாரித்த சந்திரமுகி , லால் சலாம் , இந்தியன் 2 , வேட்டையன் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக தொடர் தோல்விகளை சந்தித்தன. இதனால் தற்போது அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தை வெளியிடுவதில் பல சிக்கல்களை சமாளித்து வருகிறது. லைகா தயாரிப்பு நிறுவனத்தின் நிதி நெருக்கடிக்கான காரணம் பற்றி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்
3000 கோடி முதலீடு
" தயாரிப்பாளர்களுடன் திரையரங்க உரிமையாளர்கள் சேர்ந்த் நிறைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதில் முதன்மையாக சொன்ன தேதியில் சொன்ன பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்து தருவதை குறித்து உடனடியாக ஏதாவது முடிவு எடுக்க வேண்டும். பாதி தயாரிப்பாளர்கள் காணாமல் போனதற்கு முக்கியமான காரணம் சொன்னதை விட அதிகமான பட்ஜெட்டில் படம் எடுப்பதுதான். லைகா ப்ரோடக்ஷன்ஸ் அதற்கு ஒரு சரியான உதாரணம். கிட்டதட்ட 3000 கோடி முதலீடு செய்து லைகா ப்ரோடக்ஷன்ஸ் தமிழ் நாட்டிற்கு வந்தார்கள். எல்லா பெரிய நட்சத்திரங்களை வைத்து 70 முதல் 100 கோடி சம்பளம் கொடுத்து படம் தயாரித்தார்கள். அவர்களால் தமிழ் சினிமா சில ஆண்டுகள் பயணடைந்திருக்கிறது. ஆனால் இன்று அவர்கள் தயாரித்துள்ள விடமுயற்சி படத்தை அவர்களால் வெளியிட முடியவில்லை. கடந்த 8 ஆண்டுகளில் வந்த எந்த படமும் சொன்ந்த பட்ஜெட்டில் உருவாகவில்லை. தயாரிப்பாளரிடம் 150 கோடி என்று சொல்லிவிட்டு கடைசியாக 250 கோடியில் வந்து நிற்கும். இன்றைய தலைமுறை இயக்குநர்கள் டிஜிட்டல் கேமரா என்பதால் தங்கள் இஷ்டத்திற்கு எடுத்துவிடுகிறார்கள். இதனால் தயாரிப்பாளர்களின் பணம் தான் வீணாகிறது.
நடிகர்களுக்கு கோடிக்கோடியாக சம்பளம் கொடுத்த லைகாவுக்கு இன்று எந்த நடிகரும் உதவ முன்வரவில்லை. ஒரு காலத்தில் ரஜினி கமல் மாதிரி நடிகர்களுக்கு மனிதநேயம் இருந்தது இன்று அவர்களுக்கு அது இல்லை. ரஜினி மாதிரியான ஒரு நடிகர் வந்து தன் சம்பளத்தை குறைத்துக் கொண்டு லைகாவுக்கு படம் பண்ணிக் கொடுக்க முன்வரலாம் . சிவாஜி படத்திற்கு ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு ரஜினி நடித்தார். அதேமாதிரி படம் வெற்றிபெற்றால் 50 சதவீதம் கூட ஷேர் கேட்டு ரஜினி பண்ணினால் லைகா தயாரிக்கதான் போகிறார்கள். ஆனால் எல்லாருக்கும் அவர்கள் சம்பளம் வந்துவிட்டால் போதும் என்று சுயநலமாக இருந்துவிடுகிறார்கள்" என திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

