Annaatthe | திருப்பாச்சி டூ அண்ணாத்த .. தங்கை பாசம்.. அக்மார்க் முத்திரைப் பதித்த டாப் 5 திரைப்படங்கள்!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணன் தங்கை பாசப் பிண்ணனி கொண்ட படத்தில் அண்ணாத்த மூலம் நடித்துள்ளார் ரஜினி.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கியிருந்த இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அண்ணன் தங்கை பாசப்பிண்ணனியை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படம் கலவை விமர்சனங்களை பெற்ற போதும், படத்தின் வசூல் 200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை பாசத்தை பிண்ணனியாக வைத்து அக்மார்க் முத்திரையை பதித்த டாப் 5 படங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
பாசமலர்
1961 ஆம் ஆண்டு சிவாஜி, சாவித்ரி, ஜெமினிகணேசன் ஆகியோரது நடிப்பில் வெளியான திரைப்படம் பாசமலர். இந்தப் படத்தை ஏ.பீம்சிங் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் சிவாஜியும், தங்கை கதாபாத்திரத்தில் சாவித்ரியும், சாவித்ரியின் காதலன் கதாபாத்திரத்தில் ஜெமினிகணேசனும் நடித்திருப்பர். அண்ணனின் நண்பர் என்று கூட தெரியாமல் சாவித்ரி ஜெமினி கணேசனை காதலித்து விட, சிவாஜிக்கு இது தெரிய வந்து கண்கலங்கி நிற்பார். அதனைத்தொடர்ந்து அண்ணனுக்காக அந்த காதலையே தூக்கி எறிய துணிவார் சாவித்ரி.
ஆனால் தங்கையின் ஆசையை புரிந்து கொண்டு ஜெமினி கணேசனுக்கே அவரை மணமுடித்து வைக்க சம்மதிப்பார் சிவாஜி. தங்கைக்காக உருகி சிவாஜி ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ பாடலும், ‘வாராயோ தோழி வாராயோ’ பாடலும் மிகப் பிரபலமடைந்தன.
அதே போல படத்தின் இறுதியில் ”கண் பார்வை போய் சிவாஜி கை வீசம்மா கைவீசு” பாடலுக்கு கண்வடிக்காத ரசிகர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவு தத்ரூபமான நடிப்பை சிவாஜி, சாவித்ரியும் வெளிப்படுத்தி இருப்பார்கள். விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசை, கண்ணதாசனின் பாடல்களும் படத்திற்கு பெரும் பலமாய் அமைந்திருந்தன.
சமூத்திரம்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், சரத்குமார்,முரளி, கவுண்டமணி, மனோஜ் ஆகியோர் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சமுத்திரம். மூன்று அண்ணன்களுக்கும் ஒரு தங்கைக்கும் இடையிலான பாசப் பிணைப்பை கொண்டு படம் உருவாக்கப்பட்டிருக்கும்.
தங்கைக்காக மாப்பிள்ளை வீட்டார் செய்யும் இன்னல்களை அண்ணன்கள் பொறுத்துக்கொள்வதும், அண்ணன்களுக்காக கணவர் செய்யும் கொடுமைகளை பொறுத்துக்கொள்வதும் என படம் முழுக்க அண்ணன் தங்கை தொடர்பான காட்சிகள் நெஞ்சை கணக்க செய்து விடும்.
திருப்பாச்சி
விஜய் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் வெளியான திருப்பாச்சி அண்ணன் தங்கை பாசத்திற்கு இன்னொரு மைல்கல் என்றே சொல்லலாம்.மெட்ராஸ் மாப்பிள்ளைக்குச்தங்கையை திருமணம் செய்து கொடுக்கும் விஜய், பின்னர் தங்கையை பாதுகாக்க எடுக்கும் ருத்ர தாண்டவங்களே திருப்பாச்சி.
இந்தப் படத்திலும் அண்ணன் தங்கைக்கு இடையேயான பாசம் நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்திருக்கும். இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘என்ன தவம் செஞ்சு புட்டோம்’என்ற பாடல் மிகவும் பிரபலம்.
நம்ம வீட்டுப்பிள்ளை
சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.அப்பா இல்லாத மகனின் பாசத்தையும், அவன் தன்னுடன் பிறக்காத தங்கை மீது வைத்திருக்கும் பாசத்தையும் நெகிழும் விதத்தில் சொல்லியிருப்பார் இயக்குநர் பாண்டிராஜ்.
தங்கையின் கல்யாணம் தடைப்பட்டு நிற்க, நட்டியே முன்வந்து ஐஸ்வர்யா திருமணம் செய்து கொள்வார். ஆனால் முன்பகையால் சிவகார்த்திகேயனை பழிவாங்க ஐஸ்வர்யாவை கொடுமைப்படுத்துவார் நட்டி.. இந்த இன்னல்களுக்கு இடையே தனது தன்மானத்தை இழக்காமல் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் விதம் அற்புதமாக இருக்கும்.
அண்ணாத்த
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணன் தங்கை பாசப் பிண்ணனி கொண்ட படத்தில் அண்ணாத்த மூலம் நடித்தார் ரஜினி. கதை பழைய கதை என்றாலும் கீர்த்தி சுரேஷ், ரஜினிக்கு இடையிலான பாசப்பிணைப்பை வொர்ட் அவுட் ஆகிருப்பதாகவே சொல்லப்படுகிறது.