Maaman OTT: 'மாமன்' ஓடிடியில் ஏற்பட்ட சிக்கல்... புதிய ரிலீஸ் தேதி இதுவா? வெளியான அப்டேட்!
நடிகர் சூரி நடிப்பில், மே 16ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'மாமன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி, தற்போது கதையின் நாயகனாக உயர்ந்திருப்பவர் சூரி. வடிவேலு, சந்தானம், யோகி பாபு, ஆகியோரை தொடர்ந்து தன்னை ஹீரோவாக திரை உலகில் நிலை நிறுத்திக் கொண்ட சூரி, சமீப காலமாக காமெடி ரோலை தவிர்த்து... ஹீரோ சப்ஜெக்ட் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தனக்கு செட் ஆக கூடிய, எளிமையான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பது சூரிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் விடுதலை, கருடன், கொட்டுக்காளி, ஆகிய படங்களைத் தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த மே 16ஆம் தேதி ரிலீசான திரைப்படம் தான் 'மாமன்'. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், உணர்ச்சிகரமான திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தோடு மோதிய சூரியின் மாமன் திரைப்படம், சந்தானத்தின் படத்தை வீழ்த்தி வெற்றி கண்டது. இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க, சூரியன் அக்கா கதாபாத்திரத்தில் சுவாசிக்கா நடித்திருந்தார். மேலும் விஜி சந்திரசேகர், ராஜ்கிரண், பாபா பாஸ்கர், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாமன் - மச்சான் இடையே இருக்கும் உன்னதமான பாச போராட்டம் அனைவரையும் கவர்ந்தது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதன்படி இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை z5 நிறுவனம் கைப்பற்றியதாக ஏற்கனவே அறிவித்தது. ஜூன் இரண்டாவது வாரத்தில், 'மாமன்' ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து ஜூலை 2-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் தாமதம் ஆவதற்கான காரணம் ஓடிடி ரிலீஸில் ஒரு சில பிரச்சனைகள் நீடித்து வருவது தான் கூறப்படுகிறது. எனவே ஜூலை 2-ஆம் தேதி 'மாமன்' ரிலீஸ் ஆகுமா? அல்லது ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















