Kedi Movie: அப்பா தயாரிப்பாளர்... மகன் இயக்குனர்... இன்னொரு மகன் நடிகர்... மூவருக்கும் பேரடி தந்த ‛கேடி’
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான "கேடி" திரைப்படத்தின் ஹீரோ ரவி கிருஷ்ணா. இப்படம் வெளியாகி இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன.
தமிழ் சினிமா வரலாறு அன்று முதல் இன்று வரை பல வாரிசு நடிகர்களை கண்டுள்ளது. ஆனால் வாரிசு நடிகர்கள் அனைவருமே பிரபலமாகிறார்களா என்பது சந்தேகம் தான். சில நடிகர்களின் வாரிசுகள் முன்னணி நடிகர்களாக இன்று வலம் வருகிறார்கள். அதற்கு வாரிசு எனும் ஒரு காரணம் மட்டுமே போதாது. திறமையும் நடிப்பும் மிக மிக அவசியம். அது இருந்தால் மட்டுமே சினிமா ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்.
ஹீரோவாக அறிமுகம் :
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம். அவரின் மகனான ரவி கிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான "7G ரெயின்போ காலனி". இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. முதல் படம் சிறப்பாக அமைந்ததால் இவர் தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
View this post on Instagram
16 ஆண்டுகளை கடந்த கேடி :
அடுத்தடுத்து சுக்கிரன், பொன்னியின் செல்வன், நேற்று இன்று நாளை போன்ற படங்களில் நடித்தார் ரவி கிருஷ்ணா. இப்படங்களை தொடர்ந்து தனது அண்ணன் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான "கேடி" திரைப்படத்தில் நடித்திருந்தார் ரவி கிருஷ்ணா. இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகிகளாக தமன்னா மற்றும் இலியானா நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கில் "ஜாடு" என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தை தயாரித்திருந்தார் ஏ.எம். ரத்னம். இப்படம் வெளியாகி இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன.
View this post on Instagram
இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்ற காரணத்தால் ரவி கிருஷ்ணாவுக்கு அடுத்து சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருப்பினும் 2011ம் ஆண்டு வெளியான "ஆரண்ய காண்டம்" திரைப்படத்தில் ஓவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரவி கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது. ரவி கிருஷ்ணா மட்டுமில்லாது, இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவும் இயக்குனர் பந்தயத்தில் இருந்து ஒதுங்கினார். பிரபல தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னத்திற்கு பெரிய அடியாக அமைந்ததும் இந்த திரைப்படம் தான்.