Lal Salaam: காணாமல் போன காட்சிகள்?.. ரஜினியின் ‘லால் சலாம்’ ரிலீஸில் சிக்கல்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு இருக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு இருக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
3, வை ராஜா வை ஆகிய 2 படங்களை இயக்கியவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா. இவர் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழில் படம் இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அப்படத்திற்கு “லால் சலாம்” என பெயரிடப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால் - விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக இப்படத்தில் நடித்துள்ள நிலையில், நிரோஷா, ஜீவிதா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் “மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் நடிப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலீசுக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் ரஜினி பிறந்தநாளில் இருந்து லால் சலாம் படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் டிசம்பர் இறுதியில் இப்படத்தின் இசை வெளியீடு மிக பிரமாண்டமாக நடக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக படத்தில் மேலும் 2 பாடல்களை இணைக்க சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக உள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில் லால் சலாம் படத்தின் மும்பை படப்பிடிப்பின் காட்சிகள் ஹார்ட் டிஸ்கில் இருந்த நிலையில் அது மாயமாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை மீட்கும் பணிகளில் தொழில்நுட்ப குழுவினர் மிக தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இதில் சிக்கல் ஏற்பட்டால் என்ன செய்யலாம் எனவும் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் வெளியான சந்திரமுகி 2 படத்தின் எடிட்டிங்கின் போது 450 காட்சிகள் காணாமல் போனதாகவும், அதனை மிக கஷ்டப்பட்டு மீட்டதாகவும் அப்படத்தின் இயக்குநர் பி.வாசு நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் லால் சலாம் படமும் அப்படியான சிக்கலில் சிக்கியுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.