‛கண் முன்னாடி அம்மா இறந்தாங்க... புரோட்டாவும் சால்னாவும் தான் உயிர் கொடுத்தது...’ -Prankster ராகுல் உருக்கம்!
கோயில் பிரசாதத்தை சாப்பிட்டே வாழ்ந்தேன். ஒரு கட்டத்தில் வாழ்க்கையே வெறுத்துவிட்டேன். அப்புறம் ஒரு டீம் உருவாகி, என்ன செய்வது என தெரியாமல் சேர்ந்தோம்.
இன்று பலரையும் சிரிக்க வைக்கும் காமெடியன்கள் பலர், உண்மையில் நிறைய கண்ணீரை கடந்தவர்கள். அந்த வரிசையில் பிரபல ஃப்ராங்ஸ்டர் ராகுல், தனது பயணத்தை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் உருக்கமாக கூறினார். இதோ அவரது உருக்கும் பேச்சு...
‛‛என்னோட அம்மாவுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து போச்சு. என் கண் முன்னாடியே துடிச்சு துடிச்சு இறந்து போனாங்க. ஒரு நைட்டி போட்டுட்டு, குடுமி போட்டுட்டு, கலக்கப் போவது யாரு ஷோவில் புகழ் செய்வதைப் போல, எங்கம்மாவை சந்தோஷப்படுத்தினேன். இதே மாதிரி, எல்லாரையும் சிரிக்க வெச்சு, மைக் முன்னாடி நான் பேசுவேன் என்று என் அம்மாவிடம் கூறினேன். இப்போது, அவர் இல்லை.
மைக் பிடிச்சு நான் பேசுவேன்ம்மா, நாலு பேரு கை தட்டுவாங்கம்மானு நான் சொல்லும் போது, என் அம்மா சிரிப்பாங்க. ‛சரிப்பா... நீ பண்ணுனு’ சொன்னாங்க. 2010 ஜூலை 21 அன்று என் கண் முன்னாடியே துடிச்சு துடிச்சு இறந்து போனாங்க. எனக்கு பெரிய படிப்பு இல்லை. நான்கு நாளைக்கு ஒரு முறை, அவங்களுக்கு டயாலிஸிஸ் பண்ணனும். அப்போ எங்கம்மாவை சிரிக்க வைக்க நான் நிறைய முயற்சி பண்ணுவேன்.
அவங்க இரு கைகளிலும் ஊசி இருக்கும். அந்த வலியை அவங்க மறக்கணும்னு தான், நான் இந்த முயற்சியை எடுத்தேன். அவங்க இறந்த பின்னாடி, நான் என்ன பண்ணனும் தெரியாம நின்னேன். அப்போ, என் அப்பாவிடம் சொன்னேன், ‛எனக்கு ஒரு மாதிரியா இருக்குனு’ சொன்னேன். நீ படினு அப்பா சொன்னாரு. ஆனா எனக்கு படிப்பு ஏறல.என் அம்மாவிடம் சொன்ன மாதிரி, நான் இப்போ மைக் பிடிச்சு பேசுறேன், ஆனால் அவங்க இப்போ இல்லை.
வீட்டை விட்டு ஓடி வந்தேன். கையில் 500 ரூபாய் இருந்தது. 7 நாட்கள் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்தேன். இருவேளை புரோட்டா, சால்னா தான் சாப்பிட்டேன். காசு தீர்ந்ததும், சினிமா வாய்ப்புக்காக ஏவிஎம் போனேன். அங்கு விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கு போன போது, ஒருத்தர் வாப்பா வாய்ப்பு தர்றேன்னு சொன்னாரு.
நானும் போனேன், ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் யாருன்னே எனக்கு தெரியல. என் கையில் இருந்த 200 ரூபாயையும் அவர் பிடிங்கிட்டு போய்ட்டார். வடபழனியிலிருந்து ஈக்காட்டுதாங்கல் வரை நடந்தே போய் வாய்ப்பு தேடினேன். 14 சேனல்களில் என்னை ரிஜக்ட் பண்ணிட்டாங்க. ‛உன் மூஞ்சிய கண்ணாடியில் பார்த்தீயானு’ கேட்டாங்க. எல்லாருக்கும் நடந்தது தான், எனக்கும் நடந்தது. அதில், மற்றவர்களுக்கு நடக்காதது, ரயில்வே ஸ்டேஷனில் போலீஸ்காரர் என்னை கீழே தள்ளிவிட்டு, இங்கே இருக்காதே என விரட்டியது தான். ஆனால், கையில் 100 ரூபாய் கொடுத்து அனுப்பினார். கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு சென்று, அங்கு 9 நாட்கள் இருந்தேன்.
கோயில் பிரசாதத்தை சாப்பிட்டே வாழ்ந்தேன். ஒரு கட்டத்தில் வாழ்க்கையே வெறுத்துவிட்டேன். அப்புறம் ஒரு டீம் உருவாகி, என்ன செய்வது என தெரியாமல் சேர்ந்தோம். கடைசியில் பிராங் செய்யலாம் என முடிவு செய்து, கறி சோறு பிராங் என நினைக்கிறேன். எனக்கே தெரியாமல் 15 மில்லியன் போனது அந்த வீடியோ. அதன் பிறகும் நிறைய இடையூறு வந்தது.
என் மனைவி ராஜஸ்தானை சேர்ந்தவர். எனக்கு எல்லோரும் இருந்தும், நான் ஒரு அநாதை என்று தான் அவரிடம் கூறினேன். அவர் தான், எனக்கு முதுகு எலும்பாக இப்போதும் நிற்கிறார்,’’
என்று உருக்கமாக அந்த விழாவில் ஃப்ராங்ஸ்டர் ராகுல் பேசினார்.