HBD Harris Jayaraj : விழி மூடி யோசித்தால்... நினைவுகளில் ஊஞ்சலாடும் சுகமான பாடல்கள்... மெலடி கிங் ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்தநாள் இன்று
மின்னலே திரைப்படம் மூலம் திரை ரசிகர்களின் நெஞ்சங்களில் கீறலாய் விழுந்த பாடல்களின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் 48வது பிறந்தநாள் இன்று
தமிழ் சினிமாவிற்குள் ஒரு புதுமையான இசையுடன் அறிமுகம் கொடுத்து தனது முதல் படத்திலேயே இசை பயணத்தில் கொடி நாட்டிய ஹாரிஸ் ஜெயராஜின் 48வது பிறந்தநாள் இன்று. மின்னலே திரைப்படம் மூலம் திரை ரசிகர்களின் நெஞ்சங்களில் கீறலாய் விழுந்தன அப்படத்தின் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ராகம் ஒரு வித சுகம். இன்றும் காதுகளுக்கு இனிமை சேர்க்கும் இந்த இசை கலைஞன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார்.
மெலடி மட்டுமல்ல லோக்கலிலும் கலக்குவேன் :
மின்னலே படத்தை தொடர்ந்து ஒரே ஆண்டில் மஜ்னு, 12 பி என அடுத்தடுத்து ஹிட் பாடல்களாக ரசிகர்களை இசையால் தெறிக்க விட்ட ஹாரிஸ் ஜெயராஜ் இசை துறைக்கு கிடைத்த மற்றுமொரு பொக்கிஷம். மெலடி பாடல்களின் இலக்கணத்தை எந்த அளவிற்கு வெளிப்படுத்தினரோ அதே அளவிற்கு தர லோக்கலாக இறங்கியும் என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என்பதை சாமி திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஓடி போய் கல்யாணம் தான்...' பாடல் மூலம் நிரூபித்து காட்டினார். கிராமிய ஸ்டைல் பாடல்களையும் ஒரு கைபார்த்தவர். இவரின் முழுமையான திறமையை இந்த தமிழ் சினிமா அப்படியே கிரகித்து கொண்டது. அப்படி ஹாரிஸ் ஜெயராஜ் இசை பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்த திரைப்படம் 'காக்க காக்க'.
I'm extremely happy to release this official Common DP design for Melody Prince of Tamil Cinema @Jharrisjayaraj sir! 🤗💙
— Prashanth Rangaswamy (@itisprashanth) January 7, 2023
Design by : HJ Designer Team
Thank you @HarrisJayarajFC team#HarrisJayaraj /#HBDHarrisJayaraj pic.twitter.com/28HajGCHYw
ஷங்கருடன் கூட்டணி :
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அறியப்படும் ஷங்கர் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் ஏ.ஆர். ரஹ்மானின் இசையை ஆக்ரமித்து வந்த நிலையில் முதல் முறையாக ஷங்கரின் இயக்கத்தில் 'அந்நியன்' படத்தின் மூலம் கூட்டணி சேர்ந்தார் ஹாரிஸ். கிடைத்த வாய்ப்பையும் நம்பிக்கையையும் சிறிதளவும் காம்பரமைஸ் இல்லாமல் கலக்கியிருந்தார். இந்த வெற்றி கூட்டணி நண்பன் திரைப்படத்திலும் தொடர்ந்து ஜெயித்தது.
ஏ.ஆர்.ஆர் - ஹாரிஸ் ஜெயராஜ் ஒற்றுமை :
ஏ.ஆர். ரஹ்மானுக்கும், ஹாரிஸ் ஜெயராஜ் இசைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் பார்க்க முடியாது என்பதற்கு முக்கியமான காரணம் அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமை. படங்களை தேர்வு செய்வதில் நேர்த்தி, மேற்கத்திய இசை, பன்னாட்டு இசை கருவிகள் மற்றும் கலவைகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்துவது என பல ஒற்றுமைகள் இருப்பினும் ரஹ்மானின் ஸ்டைல் போல ஹாரிஸ் ஜெயராஜுக்கு என ஒரு தனி ஸ்டைல் உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் இது வரைக்கும் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் சமீபகாலமாக படங்களின் எண்ணிக்கையை குறைத்து கொண்டது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுக்கிறது. இருப்பினும் இனி வரும் காலங்களில் அதே புத்துணர்ச்சி கொடுக்கும் இசை மூலம் நம்மை ஆக்கிரமிக்க தூவுங்குவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர் அவரின் ரசிகர்கள்.
ஒன்ஸ் மோர் ஹேப்பி பர்த்டே ஹாரிஸ் ஜெயராஜ் !!!