தமிழ் சினிமாவின் தனி அடையாளம்! இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு 94வது பிறந்தநாள்!
தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு இன்று 94வது பிறந்தநாள் ஆகும்.
தமிழ் திரையுலகம் ஏராளமான இயக்குனர்களை இதுவரை கண்டுள்ளது. ஆனாலும், சில இயக்குனர்கள் தனித்துவமானவர்களாக காலத்தாலும் அழியாத இயக்குனர்களாகவும் உள்ளனர். அந்த வகையில் இயக்குனர் சிகரம் என்று இந்திய சினிமாவால் போற்றப்படுபவர் கே.பாலச்சந்தர்.
இயக்குனர் சிகரம்:
தமிழ், கன்னடம், இந்தி என பல மொழிகளில் 101 படங்களை இயக்கிய பெருமையை கொண்டவர் பாலச்சந்தர். 101 படங்களை இயக்கியவர் என்ற காரணத்திற்காக மட்டும் அவர் இயக்குனர் சிகரம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அல்ல. அவர் திரைப்படங்களின் கதைகளே அதற்கு காரணம்.
தமிழ் சினிமாவிற்கு இல்லை, இல்லை, தென்னிந்திய சினிமாவிற்கு மகத்தான கலைஞர்களை தந்த பெருமை இயக்குனர் பாலச்சந்தரையே சாரும். இன்று இந்திய சினிமாவே தங்களது பெருமையாக கொண்டாடும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் குருநாதரே இந்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தர்தான். இதை அவர்களே பல மேடைகளில் பணிவுடன் கூறியிருக்கிறார்கள்.
ஜாம்பவான்களை அறிமுகப்படுத்தியவர்:
ரஜினி, கமல் மட்டுமின்றி சிரஞ்சீவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக் என பல நடிகர்களை திரையில் பட்டை தீட்டியவர். பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை ஒரு நடிகனாக திரைக்கு காட்டியவரும் இவரே ஆவார். தமிழ் சினிமாவை கட்டியாளும் நடிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் கொண்டாடிய ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன் என பல நாயகிகளை தனது படங்கள் மூலமாக அறிமுகப்படுத்தினார், கொண்டாட வைத்தார்.
இன்றைய தமிழ் சினிமாவில் உறவுச்சிக்கலை மையமாக கொண்டு வெளிவரும் திரைப்படங்கள் மிகக்குறைவு ஆகும். அவ்வாறு வெளியானாலும் அந்த படங்களின் முடிவுகள் ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றத்தையும், ஏற்றுக்கொள்ளாத வகையிலும் அமைந்து விடுகிறது. அல்லது அதற்கு இயக்குனர்கள் முடிவு சொல்ல முடியாமல் தடுமாறுவதையும் நாம் காண முடிகிறது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் ஏராளமான உறவுச்சிக்கல் படங்களை இயக்கியவர் என்ற பெருமையை கொண்டவர் கே.பாலச்சந்தர்.
உறவுச்சிக்கல் படங்களின் முன்னோடி:
குடும்ப உறவுகளையும், அதில் ஏற்படும் சிக்கல்களையும், காதல் சிக்கல்களையும், கணவன் – மனைவி மோதலையும் என அவர் எடுத்துக்கொண்ட கதைக்களங்கள் மிகவும் சவாலானது ஆகும். அதை சற்று அச்சுப்பிசிறினாலும் ரசிகர்கள் முகம் சுழிக்க வைத்துவிடும். அல்லது, அவர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்றுவிடும். அதுபோன்ற கதைக்களத்தை அழகாக கையாண்டு சரியான முடிவை படத்தில் வைப்பதில் திறமையானவராக இருந்ததாலே அவரை ரசிகர்கள் இயக்குனர் சிகரம் என்று கொண்டாடினர்.
அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு, அவர்கள், நிழல்கள் நிஜமாகிறது, மரோ சரித்ரா, தப்புத்தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், அச்சமில்லை அச்சமில்லை, சிந்து பைரவி, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை என்று உறவுச்சிக்கல்களை மிக அழகாக அவர் கையாண்ட திரைப்படங்களின் பட்டியல் நீளம்.
நகைச்சுவை படங்களிலும் வெற்றி பெற்றவர்:
உறவுச்சிக்கல்கள் பற்றி ஏராளமான படங்களை இயக்கிய பாலச்சந்தரின் ஆரம்ப கால படங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை படங்களாக இருந்தது. அவரது நீர்க்குமிழி அதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆகும். அதற்கு அடுத்தடுத்து அவர் இயக்கிய பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, எதிர்நீச்சல் படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. குறிப்பாக, எதிர்நீச்சல் படம் இன்றளவும் நகைச்சுவைக்கு நூறு சதவீத கியாரண்டி ஆகும்.
ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கிய தில்லு முல்லு படம் ரஜினிகாந்த் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஏற்றத்தை தந்த படம். அந்த படத்தில் ரஜினிகாந்த்தின் நகைச்சுவையும், அவரது உடல்மொழியும் இன்று வரை அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
டூயட் பாடிய புன்னகை மன்னன்:
காமெடி, உறவுச்சிக்கல் படங்கள் மட்டுமின்றி காதலை கொண்டாடும் எவர்கிரீன் காதல் படங்கள் மூலமாகவும் இமாலய வெற்றி பெற்றவர் இயக்குனர் இமயம். காதல் திரைப்படம் என்றாலே இந்தி சினிமாவில் எப்போதும் நினைவுக்கு வரும் ஏக் துஜே கேலியே திரைப்படத்தை இயக்கிவர் பாலச்சந்தர். இந்தியா முழுவதும் இந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
தமிழில் இன்றும் காதல் படங்கள் என்றால் நினைவுக்கு வரும் புன்னகை மன்னன், அழகன், டூயட் போன்ற படங்களை இயக்கியவரும் இயக்குனர் சிகரமே ஆகும். காதல், காமெடி, உறவுச்சிக்கல் என பல வகைகளில் படங்களை இயக்கியவர் வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி என்ற சமூகம் சார்ந்த படங்களையும் இயக்கி வெற்றி பெற்றவர்.
94வது பிறந்தநாள்:
நாகேஷ், ஜெமினி, சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி, கமல், சிவகுமார், சரத்பாபு, சிரஞ்சீவி, விஜயகுமார், ரகுமான், பிரபு, அரவிந்த், மாதவன் என இவரது படங்களில் தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். 1965ம் ஆண்டு நீர்க்குமிழி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான பாலச்சந்தர், 2006ம் ஆண்டு பொய் என்ற கடைசி படத்தை இயக்கினார். 101 படங்களை இயக்கிய பாலச்சந்தர் கல்கி, காதல் வைரஸ், பொய், குசேலன், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடிகராகவும் களமிறங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒருவராக திகழும் பாலச்சந்தருக்கு இன்று 94வது பிறந்தநாள் ஆகும். தமிழ் சினிமா இருக்கும் வரை அவரது புகழ் நிலைத்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.