‘என் மனைவி இல்லாமல் நான் இல்லை; புற்றுநோயில் இருந்து இருந்து மீண்டேன்’ - கண்கலங்கிய சிவராஜ் குமார்!
சிவராஜ்குமாருக்கு புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவர் புற்று நோயில் இருந்து மீண்டு விட்டார்.
புற்றுநோயில் இருந்து மீண்டதாக கன்னட நடிகர் சிவ் ராஜ்குமார் அறிவித்துள்ளார். திரைப்படங்களில் விரைவில் நடிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சிவராஜ் குமாரும் அவரது மனைவி கீதாவும் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் பேசிய கீதா, “சிவராஜ்குமாருக்கு புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவர் புற்று நோயில் இருந்து மீண்டு விட்டார். உங்கள் அனைவரின் பிரார்த்தனையால்தான் அவர் மீண்டு இருக்கிறார். பயப்படத் தேவையில்லை. அதிகாரப்பூர்வமாக புற்றுநோயில் இருந்து அவர் மீண்டுவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வீடியோவில் பேசிய சிவராஜ்குமார், “நான் அமெரிக்கா வரும்பொது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். நான் எப்போதும் உணர்ச்சிவசப்படக்கூடியவன். ஆனால் மன தைரியத்தை ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், மருத்துவர்கள் கொடுத்தனர்.
அதனால் நிம்மதியாக இருந்தேன். என் மனைவி கீதா எனக்கு பக்கபலமாக இருந்தார். இந்நேரத்தில் கீதா இல்லாமல் சிவண்ணா இல்லை. இந்த அன்பு வேறு யாரிடமும் எனக்கு கிடைக்குமா என தெரியாது. என் மகள் நிவேதிதா என்னை அருகிலேயே இருந்து கவனித்து கொண்டார்.
நோயில் இருந்து குணமடைய மருத்துவர்கள் பக்கபலமாக இருந்தனர். எனக்கு நடந்த ஆபரேஷன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்ல. என் சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு செயற்கையாக மாற்றப்பட்டது. என்ன ஆபரேஷன் என சொன்னால் கவலைப்படுவீர்கள். அதனால் சொல்லவில்லை. நலமாக இருக்கிறேன். ஜனவரி இறுதியில் இந்தியா திரும்புவேன். மார்ச் மாதம் பிறகு முழுமையாக பணிக்கு திரும்புவேன். சிவண்ணா எப்படி இருந்தாரோ அப்படியே இரண்டு மடங்கு பவர் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.