Gayathri Yuvraaj: ஒரு தெய்வம் தந்த பூவே.. காயத்ரி யுவராஜுக்கு பிறந்தது பெண் குழந்தை.. ரசிகர்கள் குவிக்கும் வாழ்த்து மழை..!
பிரபல சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைத்தளங்களில் பகிர்த்துள்ளார்.
பிரபல சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைத்தளங்களில் பகிர்த்துள்ளார். தற்போது இது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உற்சாகமான செய்தி! இளவரசி வந்தாள் !! இன்று அதிகாலையில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. எங்களது தாயின் பிறந்தநாளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அம்மாவும் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள். அனைத்து அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.” என தெரிவித்தார். இதன்மூலம், காயத்ரி மற்றும் யுவராஜ் தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
View this post on Instagram
யார் இந்த காயத்ரி யுவராஜ்..?
காயத்ரி யுவராஜ் ஒரு பிரபலமான தொகுப்பாளர் மற்றும் தொலைக்காட்சி சீரியல் நடிகை. எஸ். குமரன் இயக்கிய தென்றல் என்ற தமிழ் சீரியலில் அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிலா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.
முன்னதாக, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன இயக்குநர் கலா மாஸ்டரின் 'மானாட மயிலாட' என்கிற ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் பங்கேற்று தனது நடன திறமை மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கான சின்னதிரை வாய்ப்புகள் குவியத் தொடங்கியதை அடுத்து, சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தென்றல் சீரியலில் நிலா என்ற கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது. குட்டியாக வசீகரமான முகம், அழகான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்த காயத்ரிக்கு அடுத்தடுத்து சன் டிவியை தொடர்ந்து, விஜய், கலைஞர், ஜீ தமிழ் என தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து காயத்ரி யுவராஜ், பிரியசகி, அழகி, சரவணன் மீனாட்சி 3, பொன்னூஞ்சல், சித்தி 2, மோகினி, மெல்ல திறந்தது கதவு, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மீனாட்சி பொண்ணுங்க போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், மிஸ்டர் அண்ட் மிஸஸ் கிலாடிஸ், ஜோடி நம்பர் ஒன், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை மற்றும் சூப்பர் மாம் எஸ்2 போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் அவர் பங்கேற்றார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி, மாடலிங், போட்டோஷூட் என பரிணமித்து வருகிறார்.
காயத்ரி யுவராஜ், நடிகரும், நடன இயக்குநருமான யுவராக் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் மகன் உள்ளார். மகனுடன் இணைந்து காயத்ரி இன்ஸ்டாவில் போடும் ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் பிரபலம். இந்நிலையில்தான் தற்போது 2வதாக இன்று பெண் குழந்தையை பெற்று எடுத்ததாக, குழந்தையிம் பாதம், கை விரல்களுடன் கணவர் யுவராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.