(Source: ECI/ABP News/ABP Majha)
`வானத்தைப் போல’ படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் அழைத்த கருணாநிதி.. நினைவு பகிரும் இயக்குநர் விக்ரமன்!
முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தனது அனுபவங்களைச் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் விக்ரமன்.. அதனை இங்கே தொகுப்பாக வழங்கியுள்ளோம்.
இயக்குநர் விக்ரமன் கருணாநிதியுடனான தனது முதல் சந்திப்பு குறித்து பேசிய போது, `கலைஞர் அய்யாவை அவரது வீட்டிலேயே சென்று பார்த்தேன்.. எனக்கு தெரிந்த திமுக பிரமுகர் கலைஞர் வீட்டில் பின்வழியே மாடிப்படி ஏறி என்னை அவரிடம் அழைத்துச் சென்றார். இவர் விக்ரமன்.. `புது வசந்தம்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர்.. சமீபத்தில் இவரது `பூவே உனக்காக’ சூப்பர்ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று அறிமுகம் செய்து வைத்தார். கலைஞருக்குப் பொன்னாடை போர்த்தி, காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, அவரிடம் கோரிக்கை வைத்தேன்.. `அய்யா நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்கணும்.. நீங்கள் பார்த்தால் ரொம்ப நல்லா இருக்கும்’ என்றேன். முதல்வராக பதவியேற்ற பின் பார்க்கிறேன் என்று கூறினார்.. இயக்குநர் அமிர்தம் எனக்கு நெருங்கிய நண்பர்.. அவரிடம் சொல்லி முதல்வரின் நேரம் வாங்கினேன்.. ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ப்ரிவ்யூ தியேட்டர் ஒன்றில் படத்தைத் திரையிட முடிவு செய்து, அவரை அழைத்தோம். `பூவே உனக்காக’ படத்தை அவர் அங்கு பார்த்தார். `சூர்ய வம்சம்’ படத்தின் போது, சரத் சார் கலைஞரை அழைத்தார். அந்தப் படத்தையும் பார்த்துவிட்டு, `இது ரெக்கார்ட் ப்ரேக் படம்யா!’ என்று கூறிச் சென்றார் கலைஞர். `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, `வானத்தைப் போல’ ஆகிய படங்களையும் பார்த்துவிட்டு பாராட்டினார்’ என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், `வானத்தைப் போல’ வெளியாகி நான்கு, ஐந்து நாள்களுக்குப் பிறகு, ஒரு நாள் நள்ளிரவு வரை திரைப்படம் பார்த்துவிட்டு, அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தேன்.. அப்போது என் செல்ஃபோனுக்குப் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் சார் அழைத்திருந்தார். அவரிடம் என்னவென்ற கேட்ட போது, `முதல்வர் பேசணும்னு சொல்றார்’ என்று கூறி, கலைஞரிடம் இணைப்பைக் கொடுத்தார். நான் அதிர்ச்சியாகிவிட்டேன்.. `என்ன விக்ரமன்.. படம் நல்லா போகுதுன்னு கேள்விப்பட்டேன்’ என்றார். `ரொம்ப நல்லா போகுது தலைவரே.. எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்.. நீங்க நல்லாயிருக்குன்னு சொல்லி படம் ஓடாம இருக்குமா?’ என்று அவரிடம் கூறினேன். `இந்தப் படத்தின் நிகழ்ச்சிக்கு நீங்கள் தான் வரணும்’ என்றேன்.. `நீ கூப்பிடுய்யா.. நீ கூப்பிட்டு நான் வராம இருப்பேனா?’ என்றார். படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு அவரை அழைத்திருந்தேன்.. அப்போது எங்கும் அரங்கம் கிடைக்கவில்லை.. காமராஜர் அரங்கம் மட்டுமே இருந்தது.. ஆனால் அது காங்கிரஸ் கட்சியோடு முரண்பாட்டில் இருந்த நேரம்.. இருந்தாலும் அதற்கு அனுமதி கிடைத்தது. ஒரு நாள் இடைவெளியில் கலைஞரின் தேதி கிடைத்ததால், ஒரே நாளில் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை கச்சேரியுடன், படத்தின் விநியோகிஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருக்கும் கலைஞர் கையால் பரிசு வழங்கினோம்.. அடுத்ததாக `உன்னை நினைத்து’ படத்தையும் கலைஞர் வந்து பார்த்தார்’ என்றும் தன் நினைவலைகளைப் பேசியுள்ளார்.