நடிகை... டப்பிங் ஆர்ட்டிஸ்ட்.. இயக்குநர்... - வலிகளை கடந்து தடம் பதித்த ரோகினியின் கதை...!
நடிகை ரோஹினி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது என்னவோ ஆசை அதிகம் வச்சு.. பாடல் தான். ஆனால் ரோஹினி ஒரு நடிகையான கதை மறுபடியும் படத்தில் அவர் நடிகையாக நடித்த கதாபாத்திரத்தின் கதையையும் விட வேதனைகள் நிறைந்தது.
நடிகை ரோஹினி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது என்னவோ ஆசை அதிகம் வச்சு.. பாடல் தான். ஆனால் ரோஹினி ஒரு நடிகையான கதை மறுபடியும் படத்தில் அவர் நடிகையாக நடித்த கதாபாத்திரத்தின் கதையையும் விட வேதனைகள் நிறைந்தது.
ரோஹினியின் சொந்த ஊர் ஆந்திரா. அவரது தந்தை பஞ்சாயத்து அலுவலக வேலையில் இருந்தார். ரோஹினிக்கு 5 வயது இருக்கும்போதே அவரது தாய் இறந்துவிட தந்தை மறுமனம் புரிந்து கொண்டார். சினிமா ஆசையில் அவர் வேலையை விட்டுவிட்டு சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவருக்கு அல்ல ரோஹினிக்கு. 6 வயதில் யசோதா படத்தில் கிருஷ்ணராக வேடமிட்டதுதான் அவரின் முதல் திரைப்படம்.
அதன் பின்னர் குழந்தை நட்சத்திரமாக என்டி ராமராவ், ஜமுனா, நாகேஸ்வரராவ் என உச்ச நடிகர்களின் குழந்தையாக 150 படங்களில் நடித்தார்.
தமிழிலும் மேயர் மீனாட்சி, முருகன் அடிமை படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்னர் 5 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை பள்ளியில் சென்று படித்த அவரை மீண்டும் துரத்தியது சினிமா. தந்தை தொழிலில் நஷ்டமடைய, மீண்டும் ரோஹினியை நடிக்க வற்புறுத்தினார். 7வது படிக்கும் போதிருந்தே நடிப்பு. பின்னர் 1982ல் கக்கா என்ற மலையாளப் படத்தில் முதன்முறையாக ஹீரோயினாக நடித்துள்ளார். அப்போதுதான் அவர் சினிமா தான் தனது தொழில் என்பதை உணர்ந்துள்ளார். அந்தப் படத்தின் வெற்றி சினிமாவை நேர்த்தியுடன் அணுக அவருக்குச் சொல்லிக் கொடுத்தது. அதனால் நிறைய மலையாளப் படங்களைத் தேர்வு செய்து நடித்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
மலையாளத்தில் வெற்றி கிட்டினாலும் தமிழ் சினிமா அவரை அவ்வளவு எளிதில் வரவேற்றுவிடவில்லை. அவர் தமிழில் அண்ணி என்ற படத்தில் முதன்முதலாக ஹீரோயினாக நடித்தார். பின்னர் பவுனுபவுனுதான் படம் அவரை விமர்சன ரீதியாக அடையாளப் படுத்தியது. பாலுமகேந்திராவின் மறுபடியும், கமல்ஹாசனின் மகளிர் மட்டும் அவருக்கு நற்பெயரை ஈட்டித் தந்தன. தாமரை, புதுப்பிறவி போன்ற படங்களில் நடித்தார். இருந்தாலும் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வராததற்கு அவரது உயரமும், மூக்கும் காரணமாகக் கூறப்பட்டது. உருவக் கேலிக்கு ஆளானாலும் அதை அவர் பொருட்படுத்தியதே இல்லை.
அவர் தெலுங்கில் த்ரீ என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்று தன் மீதான உருவக் கேலியை சுக்குநூறாக உடைத்தெறிந்தார். கிட்டத்தட்ட 500 படங்களில் நடித்துள்ளார். தமிழில் இன்னும் தடம் பதிக்கும் ரோல்களுக்காக காத்திருப்பதாகக் கூறுகிறார்.
பின்னர் நடிப்பிற்கு சில காலம் ஓய்வு கொடுத்த ரோஹினி, நடிகர் ரகுவரனை காதல் திருமணம் செய்தார். ஆனால், வெறும் 10 ஆண்டுகளில் அந்தத் திருமண உறவு முறிந்தது. மகன் ரிஷியுடன் தனியாகச் சென்ற அவர் மகனை வளர்க்க பெரும் சிரமப்பட்டுள்ளார். பொருளாதாரத் தேவைக்காக மீண்டும் நடிக்க வந்த அவரை விருமாண்டி படம் வரவேற்றது. அதன் பின்னர் தொடர்ந்து இன்று வரை நடிக்கிறார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் நெருக்கத்தில் இருக்கும் அவர் சமூக பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கிறார்.
நமக்கு நடிகையாக மட்டுமே தெரியும் ரோஹினி சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டும் கூட. ராவணன் படத்தில் ஐஸ்வர்யாவுக்கு அவர் தான் குரல். சில படங்களுக்கு வசனமும் எழுதிய அவர் அப்பாவின் மீசை என்ற படத்தை இயக்கியுள்ளார். எதிர்காலத்தில் முழு நேர இயற்கை விவசாயியாக வேண்டும், முடிந்தால் குழந்தைகளுக்கான ஒரு பள்ளி, இளைஞர்களுக்கான ஒரு யூடியூப் சேனல் மற்றும் ரேடியோ பண்பலை என்று செட்டிலாகிவிட வேண்டும் என்பது தான் ரோஹினியின் கனவாம்.
அவரின் கனவு மெய்ப்பட வாழ்த்துவோம்.