நடிகரின் கையை கடித்த நடிகை... ‛ஆமாம் கடித்தேன்... காரணத்தை அவரிடம் கேளுங்கள்...’ ‛தில்’ பேட்டி!
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில்போது நடிகர் பிரகாஷ் ராஜ் அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் சிவ பாலாஜியின் கையை கடித்த ஹேமாவின் வீடியோ வைரலாகி வருகிறது.
தெலுங்குத் திரைப்பட நடிகர் சங்கத்துக்கான (எம்ஏஏ) தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணியும், அதை எதிர்த்து நடிகர் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியும் போட்டியிட்டன. இந்த இரண்டு அணிகளும் செய்துவந்த தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து இணையத்திலும் தொலைக்காட்சிகளிலும் சூடான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. பிரகாஷ்ராஜ் ஒரு கன்னடர் என்றும், வெளிநபருக்குத் தெலுங்குத் திரையுலகம் ஆதரவளிக்கக் கூடாது என்றும் தொடர்ந்து விஷ்ணு மஞ்சு அணியினர் பிரச்சாரம் செய்து வந்தனர். எனினும் நாகர்ஜுனா, சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்ட பல்வேறு தெலுங்குத் திரையுலக பிரபலங்கள் பிரகாஷ்ராஜ் அணிக்கு ஆதரவளித்தனர்.
இந்நிலையில் நேற்று நடந்த இந்தத் தேர்தலில் 665 உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு நடந்து முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இதில் விஷ்ணு மஞ்சு அணி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவர், நடிகை ’குடைக்குள் மழை’ மதுமிதாவின் கணவர். தமிழில் இங்கிலீஷ்காரன் என்ற படத்தில் நடித்துள்ளார். அப்போது பிரகாஷ்ராஜ் அணியில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகை ஹேமா, நடிகர் சிவ பாலாஜி கையை திடீரென கடித்தார். இதை எதிர்பார்க்காத சிவபாலாஜி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஹேமா அங்கிருந்து சென்றுவிட்டார். கை சிவந்து காணப்பட்ட நடிகர் சிவ பாலாஜியை சுற்றி இருந்தவர்கள் பதறினர். இந்த சம்பவம் தேர்தல் நடந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி நடிகை ஹேமாவிடம் கேட்டபோது, "நான் சிவ பாலாஜியை கடித்தது உண்மை தான். காரணமில்லாமல் யாரும் எதையும் செய்யமாட்டார்கள். ஏன் கடித்தேன் என்பதை அவரிடமே கேளுங்கள்" என்று கூறிவிட்டார். ஹேமா கடித்தது பற்றி நடிகர் சிவபாலாஜியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள், அதற்கு அவர் பதில் கூறும்போது, "அடையாளம் தெரியாத நபர், எங்களது அணிக்கு பிரசாரம் செய்ததை எதிர்த்தேன். அப்போது என் பின்னால் நின்ற ஹேமா, என் கையை திடீரென கடித்தார். அவர் ஏன் கடித்தார் என்பது தெரியாது. நான் எதிர்க்கக்கூடாது என்பதற்காக கடித்திருக்கலாம், ஆனால் உண்மை காரணத்தை குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும், எனக்கு தெரியாது" என்றார். இருவரும் இப்படி மாற்றி மாற்றி திருப்பிவிட்டு ஏன் கடித்தார் என்பதை கடைசி வரை வெளியில் சொல்லாமலே போய்விட்டார்கள். இருப்பினும் நடிகை ஹேமா, சிவபாலாஜியை கடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்