Madhan Bob: ஆளு பாத்துதான் சாவுக்கு கூட போவீங்களா? மதன்பாப் மறைவிற்கு வராத பிரபலங்கள் - கோபத்தில் ரசிகர்கள்
மதன்பாப் மறைவிற்கு பிரபல நடிகர்கள் யாரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மதன்பாப். தனது சிரப்பாலே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மதன்பாப் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மறைந்தார் மதன்பாப்:
நடிகராக மட்டுமின்றி மிமிக்ரி கலைஞர், இசையமைப்பாளர், குத்துச்சண்டை வீரர், கத்திச்சண்டை வீரர் என்று பன்முகத் திறன் கொண்டவர். ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மானே இவரிடம் இருந்து ஏராளமான இசை நுணுக்கங்களை கற்றுக் கொண்டுள்ளார்.
மறைந்த மதன்பாப் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்தது. 71 வயதான மதன்பாப் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இயக்குனர்கள், நகைச்சுவை நடிகர்கள் நேரில் அஞ்சலி:
அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மதன்பாப் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பி.வாசு, சந்தானபாரதி, கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், நாஞ்சில் அன்பழகன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர், நடிகர்கள் பூச்சி முருகன், ஒய்ஜி மகேந்திரன், எஸ்வி சேகர். நிழல்கள் ரவி, மதுரை முத்து, அனுமோகன், விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பிரபலம் என்றால் அஞ்சலி செலுத்தக்கூடாதா?
மதன்பாப் 1984ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இதுவரை தமிழில் மட்டும் 187 படங்கள் நடித்துள்ளார் மதன்பாப். ரஜினி, கமல், விஜய், அஜித், பிரசாந்த், அர்ஜுன், பிரசாந்த், கார்த்திக் என பலருடன் இணைந்து நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் உழைப்பாளி படத்திலும், கமல்ஹாசனுடன் தேவர்மகன், தெனாலி, நம்மவர் ஆகிய படங்களிலும், விஜய்யுடன் பூவே உனக்காக, பிரியமுடன், மின்சார கண்ணா, அஜித்துடன் ஆசை, பகைவன், சூர்யாவுடன் நேருக்கு நேர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும், பிரசாந்த், பிரபுதேவா, பார்த்திபன், கார்த்திக், விக்ரம், மாதவன், முரளி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் அனைத்து பிரபல நடிகர்களுடன் மதன்பாப் இணைந்து நடித்தும் அவருக்கு இயக்குனர்கள், சக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்கள் மட்டுமே நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ரசிகர்கள் கடும் கோபம்:
பிரபல நடிகர்களாக தமிழ் சினிமாவில் உலா வரும் யாரும் நேரில் அஞ்சலி செலுத்த வரவில்லை. இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை உண்டாக்கியுள்ளது. பிரபலம் என்றால் இறப்பிற்கு நேரில் வரக்கூடாது என்று சட்டம் உள்ளதா? என்றும், சக நடிகரின் உயிரிழப்பிற்கு கூட நேரில் வராதா? இரங்கல் தெரிவிக்காதாவர்களுக்கு எதற்கு இந்த பிரபல அந்தஸ்து என்றும் மக்கள் கேள்வி எழுப்பினர்.




















