Actor Bharath: மக்கள புரிஞ்சுக்க முடியல.. ஒன்னுமே இல்லாத படம் ஹிட் ஆகும்.. நடிகர் பரத் வெளிப்படை!
தனது சினிமா கரியரில் தான் சந்தித்த வெற்றித் தோல்விகளைப் பற்றி நடிகர் பரத் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
மக்கள் என்ன மாதிரியான படங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நடிகர் பரத் கூறியுள்ளார்.
பரத்
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் ஐந்து நாயகர்களில் ஒருவராக அறிமுகமாகி கவனமீர்த்தவர் நடிகர் பரத். செல்லமே, பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல், பட்டியல், எம் மகன், வெயில் என பரத் நடித்த ஆரம்பக் கால படங்கள் அடுத்தடுத்த வெற்றிகளைக் குவித்தன. தொடர் வெற்றிகள் அவருக்கு சின்ன தளபதி என்கிற பட்டத்தையும் பெற்றுத் தந்தது.
ஆனால் மறுப்பகம் சேவல் ,கூடல் நகர், ஆறுமுகம், நேபாளி, பழனி, யுவன் யுவதி, திருத்தணி என அவர் நடித்த படங்கள் வரவேற்பைப் பெறத் தவறின. ஆனால் வெற்றியோ தோல்வியோ தொடர்ச்சியாக படங்களில் முழு ஈடுபாட்டுடன் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் பரத். கடந்த ஆண்டு வாணி போஜன் உடன் அவர் நடித்த லவ் படம் தோல்வியை சந்தித்தது. தற்போது இப்படிக்கு காதல், ஒன்ஸ் அபன் ஏ டைம் இன் மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் பரத். இந்நிலையில் தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தனது திரைப்பட வாழ்க்கை பற்றியும் வெற்றித் தோல்விகளை தான் எதிர்கொண்ட விதம் பற்றியும் பரத் பகிர்ந்துகொண்டுள்ளார்.
‘மக்களை புரிந்துகொள்ள முடியவில்லை’
தான் எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறார் என்பது தொடர்பாக பேசியபோது “நான் நடித்த ஃபேமிலி சப்ஜெக்ட் படங்கள் தான் எனக்கு நல்ல வெற்றியைக் கொடுத்திருக்கின்றன. காதல் படம் எனக்கு முதல் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்தபடியாக மலையாளத்தில் நான் நடித்த 4 தி பிபள் படமும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. தொடர்ச்சியாக அடுத்த வெற்றிகளைப் பார்த்து பழகிய எனக்கு தோல்வி என்பது முதலில் ஏற்றுகொள்ள முடியாததாக இருந்தது.
ஆனால் வெற்றி தோல்வி என்பது சினிமாவில் ஒரு பங்குதான் என்பதை நான் ஏற்றுக் கொள்ள எனக்கு சில காலம் ஆனது. அதேபோல் நான் நடித்த ஒரு சில படங்கள் எனக்கு பிடித்து தான் நான் நடித்தேன் ஆனால் அந்த படங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். ஆனால் மக்கள் இப்போது உண்மையில் எந்த படங்களை ஆதரிக்கிறார்கள் என்பதை எப்போதுமே என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை.
சில நேரங்கள் ஒரு படத்தில் எதுவுமே இருக்காது ஆனால் அது பெரிய ஹிட் ஆகும். அதே நேரத்தில் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நல்ல படங்களுக்கு எந்தவித கவனமும் கிடைக்காமல் ஒன்று இரண்டு நாட்களில் திரையரங்கை விட்டு அது எடுக்கப்படும். உண்மையில் மக்கள் எப்போது எந்த மாதிரியான படங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வது தான் மிகப்பெரிய சவால். அது மர்மமாக உள்ளது, என் குடும்ப படங்கள் நன்றாக ஓடி இருக்கின்றன. சின்னதோ பெரியதோ நல்ல கதைகள், கண்டண்ட் உள்ள படங்கள் எப்போதும் வெற்றிபெறுகின்றன” என்று பரத் கூறினார்.