Premalatha: “விஜய பிரபாகரன் தோற்கவில்லை; இது சூழ்ச்சி” - பிரேமலதா பகிரங்க குற்றச்சாட்டு
விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யான மாணிக்கம் தாகூரை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
விருதுநகர் தொகுதியில தேமுதிக வேட்பாளர் வீழ்த்தப்படவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் ஆரம்பத்தில் இருந்து தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பாஜக தரப்பில் இருந்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இறுதியாக அதிமுகவுடன் தேமுதிக கைகோர்த்தது. அதிமுக கூட்டணியில் திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 5 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது.
இதில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். ஆனால் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யான மாணிக்கம் தாகூரை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் தோற்றார். இது அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது. இப்படியான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, “மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் இ-மெயில் வழியாக புகார் மனு அளிக்கப்பட்டது” என தெரிவித்தார்.
மேலும், ”தேமுதிக இனி வரும் காலங்களில் வீர நடை போடும். விஜயபிரபாகர் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டு இருக்கிறார். இதற்கான ஆதாரம் உள்ளது. விருதுநகரில் மட்டும் தபால் வாக்குகளை முதலில் எண்ணவில்லை. கடைசியில் எண்ணினார்கள். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எனக்கு தொலைபேசி மூலமாக அழுத்தம் கொடுக்கப்பட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். அதிமுக - தேமுதிக இணைந்து செயல்பட்டுள்ளோம். தேர்தல் தோல்விக்கு யாரையும் குறை சொல்லவில்லை. மேலும் இவ்விவகாரத்தில் நீதிமன்றம் சென்றால் உடனடியாக தீர்ப்பு கிடைக்குமா? என்பது தெரியவில்லை. அதனால் தான் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். இனிவரும் காலங்களிலும் தேமுதிக - அதிமுக கூட்டணி தொடரும்.
தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் நல்ல முறையில் வாக்குகளை பெற்றுள்ளனர். மத்திய சென்னையை தவிர மற்ற தொகுதிகளில் நிறைய வாக்குகள் கிடைத்துள்ளது. விருதுநகர் விஜய பிரபாகரன் கடைசி வரை போராடி தோற்றதாக அறிவிக்கப்பட்டார். மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எத்தனையோ தேர்தல்களை நாங்கள் சந்தித்துள்ளோம். தோல்வி என்பது புதிதல்ல” என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.