11th 12th Public Exam: 11, 12ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு: அரசு திடீர் முடிவு- என்ன காரணம்?
11, 12ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
11, 12ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ற வகையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கிய இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 12 உறுப்பினர்கள் கொண்ட குழு, தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை ((National Curriculum Framework - NCF) புதிதாக தயாரித்தது. இந்த கட்டமைப்பு குறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் நேற்று (ஆக.23) அறிவித்தது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டமைப்பில், ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு, விரும்பிய பாடங்களை மாணவர்களே தேர்வு செய்யும் சுதந்திரம் உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:
* 11, 12ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் எந்தத் தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்களைப் பெறுகிறார்களோ, அந்த மதிப்பெண்களை வைத்துக்கொள்ளலாம்.
* 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் இரு மொழி பாடங்களைக் கட்டாயம் படிக்க வேண்டும். அதில் குறைந்தபட்சம் ஒன்றாவது இந்திய மொழியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தேசிய கல்விக் கொள்கையின்படி, புதிய பாடத்திட்டத்துக்கான புத்தகம் 2024ஆம் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்படும்.
* மாதக் கணக்கான பயிற்சி மற்றும் மனப்பாடம் ஆகியவை தவிர்த்து, புரிதல் மற்றும் திறனின் அடிப்படையில்தான் பொதுத் தேர்வுகள் அமையும்.
* உரிய நேரத்தில் தேவைக்கு ஏற்ற வகையில் தேர்வுகளை வழங்கும் வகையில் பள்ளி வாரியங்கள் உருவாக்கப்படும். எனினும் இதற்கு முன்பு, பொதுத் தேர்வு மதிப்பீட்டாளர்களைத் தவிர மற்ற அனைவரும், பல்கலைக்கழக சான்றளிக்கப்பட்ட படிப்புகளை முடிக்க வேண்டும்.
* அதேபோல வகுப்பறையில் பாடப் புத்தகங்களுக்கு அட்டை போடும் தற்போதைய நடைமுறை தவிர்க்கப்படும் என்றும் புதிய கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* அதே நேரத்தில் பாடப் புத்தகங்களின் விலை சரியானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
இவ்வாறு மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு புதிய கல்வி கொள்கையை வெளியிட்டது. அந்தக் கல்வி கொள்கை மத்திய அரசு சார்பில் நடத்தபடும் கல்வி நிறுவனங்களில் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.
எனினும் கடந்த பாஜக ஆட்சியில், நாட்டிலேயே முதல்முறையாக 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவில் புதிய கல்வி கொள்கை அமல் செய்யப்பட்டது. எனினும் 2023 சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு, அங்கு புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: Chandrayaan EXCLUSIVE: சந்திரயான் 3 தரையிறக்கம்; பரபர 17 நிமிடங்கள் எப்படி இருக்கும்?- விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் பிரத்யேகப் பேட்டி!